Published:Updated:

‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்!’ - ‘குலதெய்வம்’ ஸ்ரிதிகாவின் செக் லிஸ்ட்!

‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்!’ - ‘குலதெய்வம்’ ஸ்ரிதிகாவின் செக் லிஸ்ட்!
‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்!’ - ‘குலதெய்வம்’ ஸ்ரிதிகாவின் செக் லிஸ்ட்!

‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்!’ - ‘குலதெய்வம்’ ஸ்ரிதிகாவின் செக் லிஸ்ட்!

லேசிய மண்ணில் பிறந்திருந்தாலும், மலர் என்னும் பெயரில், மண்வாசனை மணக்க, டிவி தொடர் ரசிகர்களின் மனதில் பக்கத்துவீட்டுப் பெண்போல இடம் பிடித்தவர் ஸ்ரிதிகா. ‘நாதஸ்வரம்’ முடிந்தபிறகு, தற்போது அலமேலுவாய் ‘குலதெய்வம்’ சீரியலில் அலட்டல் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். பொண்ணைக் கொஞ்சம் செல்லமா கலாய்க்கலாமே என்று களமிறங்கினோம். 

’மலேசிய - தமிழ் பெற்றோரின் செல்லமகள்தான் ஸ்ரிதிகாங்கறது எங்க எல்லாருக்குமே தெரியும். இப்பவும் மலேசியாவை மிஸ் பண்றீங்களா? சென்னை, மலேசியா - எது பிடிச்சுருக்கு?’

”எனக்கு இரண்டுமே மனசுக்கு நெருக்கமான, புடிச்ச ஊர்கள்தான். அம்மாக்கு பூர்விகம் தமிழ்நாடுனாலும், திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட மலேசியாவில் செட்டில் ஆயிட்டாங்க. நான் வளர்ந்தது, படிச்சதெல்லாமே மலேசியாவில்தான். இன்னொரு பக்கம், சென்னைதான் எனக்கான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்துருக்கு. அதனால, இரண்டு ஊருமே எனக்கு ஸ்பெஷல்தான்.”

‘அப்பா மலேசியா, அம்மா தமிழ்நாடு. எப்படி இந்த காம்பினேஷன்? உண்மையைச் சொல்லுங்க அவங்களோடது லவ் மேரேஜ்தானே?’

”ஹையோ... சத்தியமா இல்லைங்க. அவங்களோடது பக்கா அரேஞ்ச்டு மேரேஜ். மேற்படிப்புக்காக சென்னை வந்திருந்த அப்பாவுக்கு அம்மாவோட அண்ணன், அதாவது என் மாமா நண்பர். எங்க அப்பாவோட கேரக்டர், மாமாக்கு ரொம்ப புடிச்சுபோய் ‘என் சிஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிறயா?’னு கேட்ருக்கார். அப்பாவும், அவரோட அம்மா, அப்பாகிட்ட பேசியுள்ளார். அப்புறமென்ன டும்டும்டும் கல்யாணம்தான். இப்போ அப்பா ரிட்டையர்ட் ஃப்ரம் பிசினஸ். அம்மா இல்லத்தரசி!”

’மலாய் பேசிட்டு இருந்த பொண்ணு, தமிழில் சரளமா பேச ஆரம்பிச்சது எப்போ?’ 

”மலேசியாவிலும் வீட்டில் எப்பவும் தமிழ்தான் பேசுவோம். வெளில நண்பர்கள், தெரிஞ்சவங்ககிட்ட மட்டும்தான் மலாய் பாஷை. மலேசியாவில் இருந்தவரை கொஞ்சம் திக்கித் திக்கித் தமிழ் பேசிட்டு இருந்தேன். சென்னை வந்தப்புறம் நல்லா பேச ஆரம்பிச்சேன். இப்போதான் தமிழ்நாட்டுக்கு வந்து 10 வருஷத்துக்கு மேல ஆய்டுச்சே. அதான் சரளமா தமிழில் கலக்க ஆரம்பிச்சுட்டேன்.”

’ஸ்ரிதிகாவுக்கு அலமேலு பிடிக்குமா? மலரைப் பிடிக்குமா?’

”ஹா..ஹா...ஹா. இதுக்கு நான் உண்மையே சொல்லிடறேன். மலர் கேரக்டரைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா, தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த முதல் கதாபாத்திரம் அது. இன்னைக்குமே வெளியில் நிறைய பேருக்கு நான் மலர் தான். இட்ஸ் வெரி க்ளோஸ் டூ மை ஹார்ட்...”

’சென்னை வந்தது எப்படி? மேடம் டிவி உலகத்துக்குள் காலடி வச்சது எப்படி?’

”நான் பத்தாவதுவரை மட்டும்தான் மலேசியாவில் முடிச்சேன். மெடிக்கல் படிக்கணும்ங்கறது என்னோட ஆசை. அதுக்காகவே சென்னை வந்து பிளஸ் ஒன், பிளஸ் டூ முடிச்சேன். இதுக்கு நடுவில் என்னோட அக்கா சுதா, டிவில காம்பியரிங், நடிப்புனு பிசியா இருந்தா. ஒருநாள் சும்மா அவகூட ஷூட்டிங் ஸ்பாட்க்கு போனப்போ, அவளோட நிகழ்ச்சி தயாரிப்பாளர் ’ஸ்கூல் லீவ்லதானே இருக்கா... ப்ரோகிராம்ஸ் பண்ணட்டுமே’னு அக்காகிட்ட கேட்டார். ஷோ பண்ண ஆரம்பிச்சதும், வரிசையா விளம்பரங்கள், திரைப்பட வாய்ப்புகள். அன்றைக்கு நுழைஞ்சதுதான் இந்த ஃபீல்ட்ல...இதோ ‘குலதெய்வம்’ சீரியலுக்காக பிசியா ஓடிட்டே இருக்கேன்.” 

’தமிழில் உங்க முதல் சீரியல் ‘கலசம்’. எடுத்தவுடனேயே லீடிங் ஸ்டார் ஒருத்தரோட நடிக்கிற வாய்ப்பு. ரம்யா கிருஷ்ணனோட நடிக்கிற அனுபவம் எப்படி இருந்தது?’

”அவங்களுக்கு முன்னாடி ஷாட்லாம் சொதப்பிடக்கூடாதேனு மொதல்ல கொஞ்சம் பயம் இருந்தது. இருந்தாலும் நடிச்சிட முடியும்ங்கற நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ரம்யா மேம் பழகறதுக்கு அவ்ளோ ஸ்வீட். நடிப்பில் நான் சின்ன, சின்ன தப்பு செஞ்சாங்க கூட அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. மத்தவங்களோட நடிப்பில் தலையிடவும் மாட்டாங்க. அவங்க போர்ஷனை  பர்ஃபெக்டா நடிச்சு முடிச்சுடுவாங்க. அவங்க நடிக்கறதப் பார்த்து நாங்க ‘இப்படிலாம் நடிக்கலாம்’னு கத்துப்போம். அவ்ளோ அழகா சொல்லிக் கொடுப்பாங்க.”

’உயிர்மெய்’ல அமலா கூட நடிச்சிருக்கீங்க. அவங்களும் ஸ்டார் வேல்யூ பர்சனாலிட்டி. அமலாகிட்ட நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?’

”அமலா மேடம் ரொம்ப அருமையான மனுஷி. நடிகையா எப்படி இருக்கணுங்கறதை விட, ஒரு நல்ல மனுஷியா எப்படி நடந்துக்கணும்கறதை அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். பழகவும், மத்தவங்ககிட்ட மரியாதை காட்றதிலையும், அன்பு செலுத்தறதிலையும் என்ன சொல்ல அப்படி ஒரு தேவதை அவங்க.”

’2011க்கு அப்புறம் சினிமாவில் சைலண்ட் ஆகிட்டீங்களே. இனி எப்போ பிக் ஸ்க்ரீனில் பார்க்கலாம்?’

”அதுக்கு ரீசன், சினிமாவை விட்டுட்டேன்ங்கறதெல்லாம் இல்லைங்க. சீரியலில் செம பிசி ஆய்ட்டதால டேட்ஸ் கொடுக்கறதில் கொஞ்சம் டைட். கமிட்டாகிட்டா அந்த வேலையை ஒழுங்கா முடிச்சுக் கொடுக்கணும்கறது என் பாலிசி. அதனால, சினிமா வாய்ப்புகள் வந்தா, சீரியலும் பாதிக்கப்படாம கண்டிப்பா நடிப்பேன்.”

’எதிர்காலத்தில் இந்த கேரக்டரில் பிச்சு உதறணும்னு ஒரு ஆசை இருக்குமே. அது என்னமாதிரியான கேரக்டர்?’

”எனக்கு இயல்பாவே சாஃப்ட்டான குரல். அந்தக் குரலில் சத்தமா பேசினா எப்படி இருக்கும்னு நிறைய முறை யோசிச்சுருக்கேன். அதனால, ப்யூச்சர்ல வில்லி கேரக்டர் நடிக்கணும்னு ஆசை. என்னோட குரலுக்கு, உருவத்துக்கும் கண்ணை உருட்டி பேசினா எப்படி இருக்கும்னு ஸ்க்ரீனில் பார்க்கணும். வாய்ப்பு கிடைச்சா வில்லியாக நான் ரெடி.”

’அக்கா சுதா கல்யாணமாகி செட்டில் ஆய்ட்டாங்க. அடுத்தது ஸ்ரிதிகாவுக்குத்தானே? லவ்வு, கிவ்வு எதாவது?’

”அச்சச்சோ இப்போலாம் இல்லைங்க. ஆனால், நடந்தா கண்டிப்பா அரேஞ்ச்டு மேரேஜ்தான். நம்புங்க ப்ளீஸ். நடக்கும்போது கண்டிப்பா சொல்றேனே...” முகத்தில் மலர்ந்த வெட்கப் புன்னகையுடன் வழியனுப்பிவைக்கிறார் ஸ்ரிதிகா. 

-பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு