Published:Updated:

‘5 சீரியல்கள்... 6 பெண்கள்... 7 சிக்கல்கள்’ - இனிவரும் வாரங்களில்!

பா.விஜயலட்சுமி
‘5 சீரியல்கள்... 6 பெண்கள்... 7 சிக்கல்கள்’ - இனிவரும் வாரங்களில்!
‘5 சீரியல்கள்... 6 பெண்கள்... 7 சிக்கல்கள்’ - இனிவரும் வாரங்களில்!

கோலிவுட்டிலிருந்து வெளியாகும் ஹைடெக் லெவல் சினிமாக்களின் டுவிஸ்ட்கள், பரபரப்புகளுக்கு சற்றும் சளைக்காமல் ஈடு கொடுக்கக் கூடியவை தமிழ் டிவி சீரியல்கள். பெரிய திரையில் ஹீரோக்களை பிரச்னைகள் சுற்றிச்சுழலும் என்றால், சின்னத்திரையில் ஹீரோயின்களுக்குதான் பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில், சேனல்களில் டாப் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள ஐந்து சீரியல்களின் ஆறு ஹீரோயின்கள் இனி எதிர்வரும் நாட்களில் சந்திக்கப்போகும் பிரச்னைகளும், இக்கட்டான சவால் சூழ்நிலைகளும் என்னென்ன? கொஞ்சம் பார்ப்போமே...

தெய்வமகள்:

குடும்பத்தலைவிகளின் செல்லமகளாக வலம்வரும் சத்யபிரியாவிற்கு எதிராக, காயத்ரியுடன் கைகோர்த்துள்ள புதிய எதிரிகளும் களத்தில் குதித்துள்ளனர். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தாசில்தார் சத்யாவிற்கு கிடைத்துள்ள பரிசு, வேலை இடமாற்றம். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப சூழ்நிலைகள், அத்துமீறலுக்கு எதிரான நடவடிக்கையால் கட்டாய இடமாற்றம் ஆகியவற்றை சத்யா எப்படி சமாளிக்கப்போகிறார்... காயத்ரியின் சதிவலைகளை முறியடித்து அடுத்தகட்டமாக எதிரிகளுக்கு எப்படி செக் வைக்கப்போகிறார்.. இவைதான் இனிவரப்போகும் எபிசோட்கள்.

மாப்பிள்ளை:

உயரதிகாரியான ஜெயாவிற்கு, தனக்கு கீழ் வேலைபார்க்கும் செந்தில் மீது காதல். அதற்காக மாயா - ஜெயாவாக அவர் போட்ட இரட்டை வேடம், அவருடைய காதலுக்கே தற்போது எதிரியாக நிற்கிறது. ஜெயாவை காதலிக்கும் செந்திலிடம், மாயாவும் நான்தான் என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் ஜெயா. ஏற்கனவே, ஜெயாவின் அக்காவிற்கு பார்த்துள்ள மாப்பிள்ளையும் செந்தில்தான் என்பது இன்னும் ஜெயாவிற்கு தெரியாது. இந்நிலையில் ஜெயா, செந்திலிடம் கேட்டுள்ள இந்த பாவமன்னிப்பு, அவர்களை வாழ்க்கையில் ஒன்றிணைக்குமா.. செந்திலின் கோபத்தையும், செந்தில் மீதான அக்காவின் காதல் கனவையும் எப்படி சமாளிக்கப்போகிறார் ஜெயா? இனிவரும் வாரங்களில் ‘மாப்பிள்ளை’ சீரியலில்.

குலதெய்வம்:

ஒருபுறம் தந்தையின் உடல்நலக் குறைவு, மறுபுறம் சகோதரனின் சொத்தாசை என்று பல்வேறு சுழல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அலமேலுவுக்கு மற்றொரு புதிய சிக்கல், காவல்துறை அதிகாரியான ரஞ்சித். அலமேலுவை அடையத் துடிக்கும் ரஞ்சித்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளும், அதனால் சீரியலின் நாயகி  அலமேலு சந்திக்கப்போகும் புதிய புயல்களும்தான் இனி அடுத்தடுத்த ‘குலதெய்வம்’ எபிசோட்களின் டர்னிங் பாய்ண்ட்ஸ்.

ப்ரியமானவள்:

அன்பே உருவான உமாவின் நான்காவது மகனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ஆனால், எதிர்பார்த்திருந்த இசைக்கு பதிலாக, மருமகளாய் உள்நுழைந்திருப்பது எதிரிக்கூட்டத்தைச் சேர்ந்த நந்தினி. அழகான கூட்டிற்குள் கருநாகமாய் உள்நுழைந்திருக்கும் நந்தினியால் உமாவும், குடும்பத்தினரும் எதிர்கொள்ளப்போகும் கடினமான சூழ்நிலைகள்தான் இனி மீதமிருக்கும் ‘ப்ரியமானவள்’ எபிசோட்களின் கதை.

தலையணைப் பூக்கள்:

இந்த சீரியலின் ஸ்பெஷல் சமாச்சாரம், வில்லியாக இருந்தவர் ஹீரோயினாக மாறிப் போன விவகாரம்தான். ஹீரோயின்களான இரண்டு மருமகள்களுக்கும் இருவிதமான பிரச்னைகள். கல்பனாவிற்கு பொய்கர்ப்பத்தால் கணவனை இழந்துவிடுவோம் என்கிற பயம். வேதவல்லிக்கோ தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததால் கணவன் மீது வெறுப்பு. இதற்கு நடுவில், இவர்களின் மாமனார் ராமநாதன் மீதான பகையால் குடும்பத்தைத் தகர்க்க நினைக்கும் எதிரியின் மகள். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளையும், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளையும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் கல்பனாவும், வேதவல்லியும். இனிவரும் வாரங்களில்....!

எத்தனைச் சிக்கல்கள் வாழ்க்கையில் ஏற்பட்டாலும், இந்த கதாநாயகிகள் அவற்றை அனாயசமாக தாண்டித்தான் வந்திருக்கிறார்கள். இப்போதைய பிரச்னைகளும் இவர்களுக்கு துரும்புதான்....அதுதான் மெகாதொடர் ரசிகர்களின் ஆசையும், விருப்பமும் கூட...ஆறு பெண்களின் அடுத்தகட்ட வெற்றிகளை பொறுத்திருந்து பார்ப்போம் நாமும்!

- பா.விஜயலட்சுமி