Published:Updated:

'பகுத் அச்சா ஆக்டிங்' - தோனி பாராட்டிய தமிழ் சீரியல் நடிகர்

'பகுத் அச்சா ஆக்டிங்' - தோனி பாராட்டிய தமிழ் சீரியல் நடிகர்
'பகுத் அச்சா ஆக்டிங்' - தோனி பாராட்டிய தமிழ் சீரியல் நடிகர்

'பகுத் அச்சா ஆக்டிங்' - தோனி பாராட்டிய தமிழ் சீரியல் நடிகர்

தெய்வமகள் சீரியலில் பிரகாஷூக்கு வில்லனாக அறிமுகமாகி, நண்பனாக மாறியவர் ஏகாம்பரம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் உடுமலை ரவி.

"நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, டீக்கடை ஆரம்பித்து வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல தீராத ஆசை. அதனால எங்காவது வாய்ப்பு கிடைக்குமானு தேடிட்டு இருந்தேன். அப்படித்தான் லோக்கல் சேனலில் வாய்ப்புக் கிடைச்சது. அந்த டி.வி யில் பாட்டுக்குப் பாட்டு, காமெடி நிகழ்ச்சிகளை வழங்கிட்டு இருந்தேன். அந்த சேனலில் ரவி என்கிற பெயரில் நிறைய பேர் இருந்தாங்க. அதனால நிறையக் குழப்பம் வந்துச்சு. அதனால் என்னோட சொந்த ஊர் பெயரைச் சேர்த்து 'உடுமலை' ரவினு வச்சுக்கிட்டேன். அது இப்போ பிரபலமாகிடுச்சு. யாரா இருந்தாலும் சட்டுனு கண்டுபிடிச்சிடுறாங்க!"

டீக்கடை வச்சிருந்த உங்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி வந்தது?

"எந்த ஒரு வாய்ப்பும் அதுவா தேடி வராது. நாமதான் வாய்ப்பை உருவாக்கிக்கணும். 13 வருடங்களுக்கு முன்னாடி உடுமலையில இருந்து சென்னை வந்தேன். ஏ.வி.எம் ஸ்டூடியோ, பிரசாத் லேப் என பல இடங்களில் வாய்ப்புக்காக வாசலில் நின்னுட்டு இருப்பேன். ஷூட்டிங் நடக்கிற இடத்தை தெரிஞ்சுக்கிட்டு அங்க போய் நிப்பேன். யாராவது என்னைப் பார்க்க மாட்டாங்களா, எப்படியாவது ஒரு சீன்ல நடிச்சிட மாட்டோமானு ஏக்கத்தோட நின்னுட்டு இருப்பேன். ஆனா, வாய்ப்பே கிடைக்காது. ஊர்ல இருந்து கொண்டு வந்த பணமும் தீர்ந்துடும். மறுபடியும் ஊருக்குப் போய் இரண்டு, மூன்று மாசம் பணம் சேர்த்து மறுபடியும் சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடுவேன். அப்படித்தான், ராஜ் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சி பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது.

அதை வைத்துக் கொண்டு அடுத்தடுத்து விளம்பரங்கள், சீரியல், சினிமா என வாய்ப்புகளைப் பெற்றேன். 'லொள்ளு சபா' ஆரம்பிச்ச காலத்துல நானும் அதுல நடிச்சிருந்தேன். அந்த காமெடி ஷோவுல நடிச்சிட்டு இருந்தப்போ, என்கூட நடிச்ச மனோகர், ஜீவா போன்ற பல பேரோட அறிமுகத்தால சினிமாவுல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது.  'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் நான் பேசிய 'அண்ணனையே எதிர்த்துப் பேசுறியா' டயலாக் ரொம்பப் பிரபலம். அடுத்து 'வேலூர் மாவட்டம்', 'பூஜை', 'உதயன்', 'ஆண்டவன் கட்டளை' போன்ற படங்களிலும் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. இப்போ மூன்று படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். இன்னும் அந்தப் படங்களுக்குப் பேர் வைக்கல. கண்டிப்பா நல்ல ரீச் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்!"

விளம்பரங்களில் நடிச்சப்போ மறக்கமுடியாத அனுபவங்கள் இருக்கா?

'என்னோட இத்தனை முயற்சிகளுக்கும் கிடைச்ச வெற்றியாகத்தான் தோனி கூட நடிச்ச அந்த விளம்பரத்தைப் பார்க்கிறேன். GULF OIL விளம்பரத்துக்காக தோனி, ரெய்னாவுடன் நானும் நடிச்சிருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் மேட்ச் அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. அன்று காலை சரியா 10.30 மணிக்கு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் GULF OIL விளம்பரத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமானது. அந்த விளம்பர கான்சப்ட் படி, மேட்ச் முடிச்சு தோனி கிளம்பியிருப்பார். அவருடைய பில்லோ என்கிட்ட இருக்கும். இங்கிருந்து டெல்லிக்குப் பயணமாகி அவர்கிட்ட போய், DOHNI SIR YOUR PILLOW'னு நான் கொடுப்பேன்.

அடுத்ததாக ரெயினா என்கிட்ட, 'என்னோட லட்டு பாக்ஸை அங்கயே விட்டுட்டேன்.. கொண்டு வந்து தரமுடியுமா'னு என்கிட்ட கேட்பார். இப்படி முடியும் அந்த விளம்பரம். விளம்பரம் ஷூட் பண்ணும் போதே, நான் பண்ற காமெடியைப் பார்த்து இரண்டு, மூன்று தடவை தோனி சிரிச்சார். ஷூட்டிங் முடிஞ்சதும், 'பகுத் அச்சா ஆக்டிங்' என பாராட்டினார் தோனி. அவருடன் எடுத்த படத்தை இன்னும் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். அதே போல பிங்கோ சிப்ஸ் விளம்பரம். இதில் திருடன் கூட்டத் தலைவனாக இருப்பேன். வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் திருடினப் பிறகு அங்கு இருக்கும் உப்பு கலந்த சிப்ஸை சாப்பிட்ட உடன், 'உப்பு சாப்பிட்ட வீட்டுக்குத் துரோகம் பண்ணக் கூடாதுடா'னு திருந்திடுவேன். இந்த விளம்பரமும் எனக்கு மிகவும் பிடிச்சது. கெலாக்ஸ் ஓட்ஸ், ரியல் எஸ்டேட் என கிட்டத்தட்ட பத்து விளம்பரங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன்!" 

பல கஷ்டங்களை தாண்டி வந்திருப்பீங்க.. உங்க அனுபவத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம்?

"எந்த துறையாக இருந்தாலும் சரி, நம்முடைய இடத்தை தக்கவைப்பது ரொம்ப முக்கியம். நம்முடைய ஒவ்வொரு உயரத்திற்கும் நம்முடைய திறமைதான் கைகொடுக்கும். திரைத்துறை என்பது நிறைய பேர் போராடி, தேடிப் பிடிக்கிற இடம். ஆரம்பத்தில் ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் சந்தோஷமா முயற்சி பண்ணும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இப்போ நான் மக்கள்கிட்ட பிரபலமா இருக்கிறதுக்கு காரணமாக இருந்த பிரியன், சந்தானம், 'லொள்ளு சபா' ராம்பாலா, 'தெய்வமகள்' இயக்குநர் குமரன் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!"

- வே.கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு