Published:Updated:

’ஏ.சி.பி ரத்னம் கேரக்டருக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா?’- ப்ரியமானவள் ’கிரி’

பா.விஜயலட்சுமி
’ஏ.சி.பி ரத்னம் கேரக்டருக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா?’- ப்ரியமானவள் ’கிரி’
’ஏ.சி.பி ரத்னம் கேரக்டருக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா?’- ப்ரியமானவள் ’கிரி’

”என்னை கிரி கேரக்டரில் மட்டும்தானே உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், நான் நடிப்பு உலகுக்கு வந்து கிட்டதட்ட 10 வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அது தெரியுமா?” என்று நம்மையே எதிர் கேள்வி கேட்டு மடக்குகிறார் பார்த்தன்...இல்லையில்லை ப்ரியமானவள் டி.சி.பி கிரி. இவருடைய உண்மையான பெயர் ‘பார்த்தன்’ என்பது மறந்துவிடும் அளவிற்கு கிரியாகவே மாறிப்போயிருக்கிறார் மனிதர்.

‘ப்ரியமானவள்’ தொடரில் காவல்துறை அதிகாரி கிரிதரனாக அத்தனை பேரையும் அலறவைக்கும் இவருக்கு எதிரிகள் ஜாஸ்தி. அட...ரசிகர்களைத்தான் சொல்கிறோம். ப்ரியமான உமாவின் அன்பான குடும்பத்தைக் கலைக்க அடாவடியாக ரகளை செய்பவரை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே ஒரு காலை நேரத்தில் அவரை செல்போனில் அழைத்து டாக்கினோம்.

”எப்போதிலிருந்து நடிப்பார்வம்?”

’நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னைதான். என்னோட அப்பா சிவானந்தம். அவருக்கு நடிப்பில் நிறைய ஆர்வம். எனக்கு தொடக்கத்தில் நடிப்பில் அதிக ஈர்ப்பு கிடையாது. போகப்போக அப்பாவோட ஆர்வம், என்னையும் நடிப்புத்துறையை ரசிக்க வைச்சது. அந்த நேரத்தில், சினிமா இயக்குனர்களா இருந்த நண்பர்கள் மூலமா சினிமா, சீரியல்னு நடிக்க ஆரம்பிச்சேன். கூடவே, தயாரிப்பாளராகவும் இருந்துருக்கேன்.’

”உங்களுடைய திரையுலகப் பயணம் ஆரம்பிச்சது எப்போ?”

’இன்னைக்கு சீரியல் உலகில் என்னை கிரியா தெரிஞ்சாலும், 99ம் ஆண்டிலேயே நான் நடிக்க வந்துட்டேன். 2000ல் ஒரு திரைப்படத்தில் ஹீரோவா என்ட்ரி கொடுத்தேன். அதுக்கப்புறம், பொதிகை சேனலில் ஒளிப்பரப்பான பாக்யராஜ் சாரோட ‘ஒரு கதையின் கதை’ தொடரில் நெகட்டிவ் ரோலில் நடிச்சேன். அதுதான் என்னோட முதல் சீரியல். பிறகு, இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரோட, ‘இணைகோடுகள்’ சீரியல். அதுக்கப்புறம், வரிசையா நிறைய தொடர்கள் நடிச்சுட்டேன். நடிச்சுட்டே இருக்கேன். நடிப்பேன்.’

” ’ப்ரியமானவள்’ என்ட்ரி எப்படி?”

’எத்தனையோ தொடர்கள், சினிமா நடிச்சிருந்தாலும் எனக்கு பெரிய ப்ரேக் கொடுத்தது ‘ப்ரியமானவள்’ சீரியல்தான். என்னோட நண்பர்கள் மூலமாத்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. முதலில் ஏ.சி.பி ரத்னம் கேரக்டரில்தான் நடிக்க இருந்தேன். ஆனால், வில்லன் ரோல் எனக்கு சூப்பரா செட் ஆகும்னு கிரி கேரக்டர் கொடுத்துட்டாங்க. என் முகத்திலையே வில்லன் கலை இருக்கே, அதுதான் காரணம்னு நினைக்கறேன். என்னோட கேரியர்ல ஒரு பெரிய ஓப்பனிங்னா அது ‘ப்ரியமானவள்’ கிரிதான். அதுக்காகவே என்னோட இயக்குநருக்கும், டீம்க்கும், நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றி.’ 

”கிரி பக்கா வில்லன்...நிஜத்தில் பார்த்தன் எப்படி?”

‛ஹா..ஹா..அது என்னோட பழகுறவங்ககிட்டதான் நீங்க கேட்கணும். என்னைப் பொறுத்தவரை எனக்கு மூடியா இருக்கறது பிடிக்காது. எப்பவும் ஜாலியா இருக்கணும். எல்லார்கிட்டையும் ஃப்ரெண்ட்லியா பழகணும். அதே நேரத்தில் புரொபஷ்னலா பர்ஃபெக்ட்டா இருக்கணும். அப்படித்தான் இதுவரை நடந்துகிட்டும் இருக்கேன். ஃபீல் ஃப்ரீ. அதுதான் என்னோட தாரக மந்திரம்.’

”பார்த்தன் வாழ்க்கையில் காதல் இருக்கா? ஃபேமிலி பத்தி சொல்லுங்க.”

’கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே...என்னோடது காதலுடன் கூடிய இருவீட்டார் சம்மத திருமணம். என்னோட மனைவி தான்யா, வட இந்தியப் பெண். ஆனால், அவங்க குடும்பம் சென்னையில் செட்டில் ஆகி பல வருஷங்களுக்கு மேல ஆயிடுச்சு. இரண்டு பெண் குழந்தைகள். பெரிய பெண் அக்‌ஷயா ஐந்தாவது படிக்கறாங்க. சின்னவ ஹர்ஷிகாவுக்கு ரெண்டு வயசு. அப்புறம் என்னோட அம்மா. இவ்ளோதான் என் ஃபேமிலி மெம்பர்ஸ்.’

”எதிர்காலத்தில் என்ன கேரக்டர்கள் நடிக்க ஆசை?”

’என்னைப் பொறுத்தவரை ஹீரோ, வில்லன் அப்படிங்கற வித்தியாசமெல்லாம் கிடையாது. ஆனால், நமக்கு முக்கியத்துவம் இருக்கற கதாப்பாத்திரங்களில் நடிக்கறதுதான் என்னோட விருப்பம். எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் என்னோட சாய்ஸ்...’ ஃப்யூச்சர் ஆசையுடன் பேட்டியை முடித்துக் கொண்டார் பார்த்தன் அலைஸ் கிரி.

-பா.விஜயலட்சுமி