Published:Updated:

மெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..?

மெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..?
மெட்ரோ ப்ரியா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரிஞ்சுக்கலாமா..?

கொஞ்சும் தமிழிலும் குழையும் அன்பிலும் சின்னத்திரை நேயர்களைக் கட்டிப் போட்ட 'மெட்ரோ' ப்ரியாவை நினைவிருக்கிறதா?

'இப்படித்தான் இருக்க வேண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்' என ஒரு இலக்கணத்தை உருவாக்கியவர்.

காணாமல் போன மீடியா பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட ப்ரியா, இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?

தேடினோம். கண்டடைந்தோம்.

''எங்கேயும் போயிடலை... இதே சென்னையிலயேதான் இருக்கேன்...''குரலின் குழைவில் துளியும் மாற்றமின்றிப் பேசுகிறார் ப்ரியா.

''2003 -ல ஏ.வி.எம் புரொடெக்ஷன்ஸோட 'மங்கையர் சாய்ஸ்' புரோகிராம் பண்ணிட்டிருந்தேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். அந்த இடைவெளி கொஞ்சம் பெரிசாயிடுச்சு... அவ்வளவுதான். 

அப்புறம் விஜய் டி.வியில 'தினம் ஒரு சுவை'னு ஒரு நிகழ்ச்சியில வாரம் ஒருநாள் மட்டும் வந்துக்கிட்டிருந்தேன். அதுல பண்றபோதுதான் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' ஆரம்பிச்சாங்க. அதுலயும் என்னைப் பங்கெடுத்துக்கச் சொன்னாங்க. அந்தப் போட்டியில் இரண்டாம் இடம்  வந்தேன். அது எனக்குப் பெரிய பிரேக்கா இருந்தது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு அதே மாதிரி செய்யச் சொல்லி நிறைய பேர் கேட்டாங்க. ஆனா என்னோட எதிர்பார்ப்பு வேற லெவல்ல இருந்தது. அப்பதான் சொந்தமா கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிச்சேன். இப்பவரைக்கும் வெற்றிகரமா பண்ணிட்டிருக்கேன்...'' புது அவதாரப் பின்னணி சொல்கிறார்.

ப்ரியாவுக்குப் பிரமாதமாகப் பேசத் தெரியும் என்பதைப் பலரும் அறிவார்கள். சமைக்கக் கற்றுக் கொண்டது எப்படி?

''நம்புங்கப்பா... ப்ரியா நல்லா சமைப்பா. ஆனா இவ்வளவு சூப்பரா சமைப்பேன்னு நானே எதிர்பார்க்கலை. சாப்பிடப் பிடிக்கும். என் பசங்களுக்காகவும் கணவருக்காகவும் விதம் விதமான சமையலை ட்ரை பண்ணுவேன். எங்கம்மா சூப்பரா சமைப்பாங்க. எத்தனை பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சிடுவாங்க. அவங்ககிட்டருந்துதான் அந்த ஆர்வம் எனக்கும் வந்திருக்கு. 'கிச்சன் சூப்பர் ஸ்டார்'ல கிடைச்ச பிரேக், எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. அந்த ஷோவுல நான் ரெண்டாவது இடத்துல வந்திருந்தாலும், அக்கார்ட் ஹோட்டல்ல ஒரு ரெசிபிக்கு என் பெயரையே வச்சாங்க. அது மிகப் பெரிய அங்கீகாரம்.

கணவரும் நானும் பாரிஸ் போயிருந்தோம். அங்கே கார்டன் ப்ளூனு ஒரு பிரபலமான காலேஜ்ல ஃப்ரென்ச் குக்கிங், பேக்கிங்னு நிறைய கத்துக்கிட்டேன். அந்த அனுபவத்தையும் சேர்த்துதான் 'ப்ரியாஸ் கிச்சன்' என்ற பேர்ல பிசினஸ் தொடங்கினேன். கான்டினென்ட்டல், பேக்கிங், தாய், பாரம்பரிய தென்னிந்திய சமையல், டெசர்ட்ஸ்னு எல்லாமே என்னோட ஸ்பெஷல். சின்னச் சின்ன பார்ட்டிகளுக்கு ஆர்டர் எடுக்கறேன். உதவிக்கு ஆட்கள் வச்சுக்காம, நானே என் கைப்பட சமைக்கிறேன். ஆரோக்கியமான சமையல் என்ற விஷயத்துல உறுதியா இருக்கேன். பேக்கிங் பவுடர், கெமிக்கல்ன எதையும் உபயோகிக்க மாட்டேன். மைதாவுக்கு பதிலா கோதுமைதான் உபயோகிப்பேன்...'' என்கிறவரின் வார்த்தைகளை உண்மையாக்குகின்றன அவர் காட்டும் மெனு கார்டு. ஒவ்வொன்றிலும் ஆரோக்கியம்!

மறுபடி டி.வி பக்கம் வருகிற ஐடியா இருக்கிறதா ப்ரியாவுக்கு?

''எனக்கு ரெண்டு பசங்க. பெரியவன் துருவ், பிளஸ் டூ போகப் போறான். ரெண்டாவது பையன் மாணவ், ஒன்பதாவது போகப் போறான். கணவர் சித்தார்த், லாஜிஸ்ட்டிக்ஸ் பிசினஸ்ல இருக்கார். குடும்பம், குழந்தைங்க, என்னோட கேட்டரிங் பிசினஸ்னு லைஃப் ரொம்ப சூப்பரா போயிட்டிருக்கு. 

மறுபடி டி.வி பக்கம் வரும் ஆசை நிச்சயம் இருக்கு. நிறைய ஐடியாஸ் வச்சிருக்கேன்.  இப்ப சமையல்லயும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதால, குக்கரி ஷோ பண்றதுலயும் ஆர்வமா இருக்கேன். பிரபலங்களைத் தொடர்புப் படுத்தின சமையல், கோயில்கள், டிராவல், அங்கீகாரம் தேவைப்படற அறியப்படாத முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர்ற மாதிரியான நிகழ்ச்சிகள் பண்ணவும் ஆர்வமா இருக்கேன். ரீ என்ட்ரி கொடுக்கும்போது அது வேற லெவல்ல இருக்க வேணாமா? அப்படியொரு வாய்ப்புக்காகத் தான் ஐம் வெயிட்டிங்...'' என்கிறார் ப்ரியா.

சின்னத்திரைல கலக்கிட்டிருக்கற பலரும், பல்துறை வித்தகர்கள்தானே.. நீங்க அல்ரெடி கலக்கின ஆள்தான்.  நாங்களும் வெயிட்டிங்.... சீக்கிரம் வாங்க!

- ஆர்.வைதேகி