Published:Updated:

‛சி.எம் ஆனா முதலில் எனக்கு சிலை வச்சுப்பேன்’- தொகுப்பாளர் ‘பூம்பூம்’ அசார்!

பா.விஜயலட்சுமி
‛சி.எம் ஆனா முதலில் எனக்கு சிலை வச்சுப்பேன்’- தொகுப்பாளர் ‘பூம்பூம்’ அசார்!
‛சி.எம் ஆனா முதலில் எனக்கு சிலை வச்சுப்பேன்’- தொகுப்பாளர் ‘பூம்பூம்’ அசார்!

'கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா? இல்லை நான் கேட்கவா?’ எடுத்தவுடனே பேட்டி கொடுப்பதை மறந்து, காம்பியரிங் மோடிலேயே பேச ஆரம்பிக்கிறார் தொகுப்பாளர் அசார். டிவியில் பலரையும் கோக்குமாக்காக கேள்வி கேட்டு பதற வைப்பவரை ஒரு சேஞ்சுக்கு நாங்கள் கலாய்த்தோம்.

’சாரின் சொந்த ஊர் எதுவோ?’

‛‛சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. ஆனால் வளர்ந்தது, புரண்டது, உருண்டது எல்லாமே சென்னை மாநகரம்தான். சென்னைப் பையன் என்று சொல்வதில் ரொம்ப பெருமைப்படுறேன்.”

'கலை ஆர்வம் எப்போதிலிருந்து?’

“கொலை ஆர்வம்...சாரிங்க கலை ஆர்வம் பத்திதானே கேட்கறீங்க...அது பெரிய கதை. என்னை இந்த ஃபீல்டுக்குள்ள இழுத்தது என்னோட ஆர்வம்தான். சின்ன வயசுல சினிமாவில் நடிக்கணும்ங்கறதுதான் ஆசை. ஆனால், ஆக்டர்னா ஹீரோ மட்டும்தான்னு நினைச்சுட்டு இருந்தேன். கொஞ்சம் வளர்ந்தப்புறம்தான் ஆக்டிங்னா நடிப்புனே புரிஞ்சது. பழைய படங்களைப் பார்த்துட்டு அது மாதிரியே நடிச்சு பார்ப்பேன். அதுதான் எனக்கான உந்து சக்தி.”

’அப்போ படிப்பு?’

“ஆசை இருந்ததே தவிர நடிப்புக்காக என்ன செய்யணும்னு எனக்குத் தெரியாது. நண்பர்கள் விஸ்காம் படிக்க சொல்லி ஐடியா குடுத்தாங்க. வீட்டில் சொன்னதும், ’டேய் உனக்கு வேலை கிடைக்கலைனா வேறெந்த வேலைக்கும் போகமுடியாது. ஒழுங்கு, மரியாதையா பி.காம் படி’னு சொன்னாங்க. அவங்க அவ்ளோ கெஞ்சி கேட்டாங்களேனு பி.காம்தாங்க படிச்சேன்.”

‘அதுக்கப்புறம் எப்படிதான் டிவிக்குள்ள நுழைஞ்சீங்க?’

“பி.காம் முடிச்சுட்டும் வெட்டியாதான் சுத்திகிட்டு இருந்தேன். அப்போ, எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் ‘தம்பி நீ முதல்ல டிவில ட்ரை பண்ணு. அது உனக்கு ஒரு நல்ல அனுபவமா இருக்கும்’னு சொன்னார்.  அதுக்கு எப்படி அப்ளை பண்ணனும்னு கேட்டதுக்கு, ‘சிம்பிள்...ஒரு பயோ டேட்டா எடுத்துட்டு போய் டிவி ஆபிஸ்ல குடு’னு சொன்னார். சரினு நானும் நெட்டில் மாங்கு மாங்குனு தேடி எல்லா டிவி அட்ரஸையும் எடுத்து, போட்டோ, ரெஸ்யூமோட போவேன். ‘ஆங்..கூப்பிடறேன்பா தம்பி’னு வாட்ச்மேன் வாங்கி வைப்பார். சரி உள்ள யாரையாவது பாக்கபோறேனு சொல்லி ரெஸ்யூம் கொடுக்க போனா இப்போ வாட்ச்மேனுக்கு பதிலா ரிசப்ஷன்ல வாங்கி வைப்பாங்க. என்னடா லைஃப் இப்படி ஆய்டுச்சேனு பார்ட் டைம் வேலையாவது பார்த்துகிட்டே, சான்ஸ் தேடலாம்னு நினைச்சேன். ஆனாலும், நான் தில்லாலங்கடி ஜெயம் ரவி மாதிரி. ஒரு வேலையில் இருந்து ஒரு நாள், இரண்டு நாளில் ஓடி வந்துருவேன்.  இது சரிபட்டு வராதுன்னு ஒவ்வொரு டிவி ஆபிஸ் வாசலிலும் நானே போய் உட்கார ஆரம்பிச்சேன். தொடர்ந்த படையெடுப்புக்கு பிறகு ஒருநாள் ஒரு கால் வந்தது. அதுதான் என் வாழ்க்கையையே மாத்திச்சு.”

‘அப்படி யாரோட அழைப்பு அது?’

“மூன் டிவியோட அழைப்பு அது. அங்கருந்து ஒரு ஷோ பண்ணனும்னு கூப்பிட்டாங்க. 2013ம் ஆண்டு ஆரம்பிச்ச அந்த அனுபவம் மூலமா நிறைய சீரியல்கள், காம்பியரிங்னு கிடைச்சுது. சன் டிவில ‘இளவரசி’ சீரியலில் நடிச்சேன். 2015ல் ஐபிசி தமிழ். இப்போ, காம்பியரரா புல் ஃபார்மில் செட்டில்டு. எதிர்காலத்தில் கண்டிப்பா சினிமாதான்.”

’வேறென்ன ஆர்வமெல்லாம் இருக்கு?’

“கிரிக்கெட்னா எனக்கு உயிர். காலேஜ் டீமில் விளையாடியிருக்கேன். ஒருவேளை டிவி, சினிமானு வாழ்க்கை மாறலைனா கண்டிப்பா கிரிக்கெட்டர் ஆயிருப்பேன்.”

‘லைவ்ல பல்பு வாங்கின அனுபவம் இருக்கா?’

“ஒன்னு ரெண்டுனா சொல்லலாம்ங்க. அது எக்கசக்கமா இருக்கு. ஜல்லிக்கட்டு அன்னைக்கு லைவ் ஷோ நடத்திட்டு இருக்கறப்போ ஒருத்தர் ஃபோன் பண்ணி ‘அடேய் ஊரே ஜல்லிக்கட்டுக்காக போராடுது. உனக்கு இப்போ மொக்கை போடறது முக்கியமா?’னு செம கலாய். ஆனால், நானும் விடலையே. ‘நேயர்களே இன்னைக்கு நாம ஷோவில் பேசப்போறதே ஜல்லிக்கட்டு பத்திதான்’னு எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

‘திடீர்னு ஒருநாள்  தூங்கி எழுந்திருக்கும்போது சி.எம் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?’

”சி.எம் ஆயிட்டா, முதல்ல எனக்கு நானே ஒரு சிலை வச்சுப்பேன். வரலாறு முக்கியம் அமைச்சரே. அப்புறம் ஒரு ப்ரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிச்சு என்னை முதல்ல காப்பாத்திப்பேன். அப்புறம்தான் மக்களுக்கு நல்லது பண்றதெல்லாம். யாரா இருந்தாலும் அதுதானேங்க. மொதல்ல சொந்த பாதுகாப்பு. கூடவே மக்கள் பாதுகாப்பு.”

‘டிவியில் நிறைய அசார் இருக்காங்க. உங்களை எப்படி அடையாளம் காமிச்சுக்கிறீங்க?’

”என்னை அசார்னு சொல்றதைவிட ‘பூம் பூம்’ அசார்னு சொன்னா கரெக்டா இருக்கும். ஏன்னா, நமக்கு நாமே பட்டப் பெயர் வச்சுப்போம் இல்லையா? அப்படி நான் வச்சுகிட்டதுதான் பூம்பூம். அதனால், பூம் பூம் அசார்னு சொன்னா அது நான் மட்டுமே. போய்ட்டு வாங்க நன்றி.” போகிற போக்கில் பதிலுடன் நம்மையும் பேக்கப் செய்கிறார் மனிதர்.

-பா.விஜயலட்சுமி