Published:Updated:

'நாங்க ஹேண்ட்ஸம் வில்லன்கள் பாஸ்!’ - வில்லாதி வில்லன்கள் ஷ்யாம், மானஸ்

பா.விஜயலட்சுமி
'நாங்க ஹேண்ட்ஸம் வில்லன்கள் பாஸ்!’ - வில்லாதி வில்லன்கள் ஷ்யாம், மானஸ்
'நாங்க ஹேண்ட்ஸம் வில்லன்கள் பாஸ்!’ - வில்லாதி வில்லன்கள் ஷ்யாம், மானஸ்

டிவி சீரியலில் எப்போதும் ஹீரோக்களை விட வில்லன்கள்தான் கெத்து. அதிலும் இப்போதெல்லாம் சினிமா பாணியைப் பின்பற்றி சீரியல்களிலும் ‘ஹேண்ட்சம்’ வில்லன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கும் இரண்டு அழகான வில்லன்களிடம் ஒரு ஜாலி டாக்.

முதலில் சிக்கியவர் விஜய் டிவி ‘கல்யாணம் முதல் காதல் வரை’, சன் டிவி ‘வாணி ராணி’ புகழ் வில்லன் ஷ்யாம். ‘ஹா..ஹா..ஹா...நான் ஒரு தடவ சொன்னா...ஒரு தடவை சொன்னதுதாங்க’ சட்டென்று ஜோக் அடித்துக் கலாய்க்கும் ஷ்யாமுக்கு கிடைப்பதெல்லாம் வில்லன் வேஷம்தான். சேனல் உலகில் தற்போதைய ஹேண்ட்சம் வில்லன்களில் ஷ்யாமுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ். 

’ஷ்யாம்...எவ்ளோ அழகான பெயர். ஆனா, என்னைப் பார்த்தாலே இப்போலாம் வெளில மோசமா திட்றாங்கப்பா. எல்லாத்துக்கும் காரணம் என்னோட வில்லன் கேரக்டர்ஸ்தான். ஆனாலும், இது ரொம்ப பிடிச்சிருக்கு. தலைவர் கூட எத்தனையோ வில்லன் கேரக்டர்ஸ் நடிச்சுருக்கார்தானே. அதான், நானும் கிடைக்கற எல்லா கேரக்டரிலும் வில்லத்தனத்தைக் காட்டி கலக்கிட்டு இருக்கேன்’ என்கிறார் ஷ்யாம். 

சீரியல்களில் நிறைய ஹீரோயின்களுக்கு இவர்தான் பெரிய வில்லன். ‘இப்போதைக்கு நிறைய சீரியல் கமிட் ஆகியிருக்கறதால சொந்தக் குரலில் டப்பிங் பேசி மிரட்ட முடியலை. விரைவில் அதுவும் நடக்கும்’ என்று நம்மையும் நடுநடுங்க வைக்கும் ஷ்யாம் கைகளில், ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘லட்சுமி வந்தாச்சு’, ‘வாணி ராணி’ என்று டஜன் கணக்கில் சீரியல்கள் இருப்பதால் செம ஹேப்பி.

இரண்டாவதாக வாலண்ட்டியராக நம்மிடம் மாட்டியவர் ‘சந்திரலேகா’ வில்லன் மானஸ். சன் டிவியின் ‘சந்திர லேகா’ சீரியலில் வில்லிகளுக்கே வில்லாதிவில்லன் ‘விக்னேஷ்’ என்று கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் மானஸ், சீரியல் உலகிற்கு வந்ததே பெரிய கதை. ‘‛அப்பா சயின்டிஸ்ட். அம்மா பிசினஸ் பண்றாங்க. ஸ்கூல் டைமில் இருந்து டிவி, சினிமா மேல ஒரு க்ரேஸ். நானும் நிறைய முயற்சி செஞ்சேன். சீரியல் ஆடிஷன் எங்க நடந்தாலும் போய்ட்டு இருந்தேன். ஆனால், எதுவும் சரியா வரலை. ஒரு முறை சீரியல் ஆடிஷனெல்லாம் முடிஞ்சும், ஒரு சில காரணங்களால் அதுவும் கேன்சல் ஆய்டுச்சு. 

ரொம்ப நொந்து போயிட்டேன். அப்போதான் திடீர்னு ஒரு போன் கால். சீரியல் ஆடிஷனுக்கு வாங்கனு கூப்பிட்டாங்க. போய்க் கலந்துகிட்டேன். ஆனா, என்ன சீரியல்னெல்லாம் தெரியலை. ஆடிஷன் முடிஞ்சதும், ‘நீங்க செலக்டட்...சன் டிவியில் ‛முந்தானை முடிச்சு’ சீரியல்னு சொன்னாங்க. அதைக் கேட்டதும் ஸ்வீட் ஷாக். இதுக்காகத்தான் இவ்ளோ நாள் வாய்ப்பு கிடைக்காம இருந்துருக்குனு சந்தோஷமாய்டுச்சு. 

அந்த சீரியலில் எனக்கு இரண்டு மனைவிகள். ஊரு, உலகத்தில் இல்லாத அளவுக்குக் கொடுமைப்படுத்துவேன். வெளில போனாலே அப்டியே பாய்ஞ்சு வந்து நாலு பேர் திட்டுவாங்க. அதுவும் அந்த சமயத்தில் காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்த  சின்னப்பையன்றதால ‛எங்க அடிச்சுடுவாங்களோ’னு ரொம்ப பயமா இருக்கும். ஆனால், இதுவும் நாம நல்லா நடிக்கறதாலதானேனு மனசுக்கு திருப்தியா இருந்துச்சு. 

அதுக்கப்புறம் எக்கச்சக்கமா வில்லன் வேஷம். இப்போ சந்திரலேகாவில் அக்மார்க் வில்லன். நைட் ‘வாணி ராணி’ல அப்பாவிப் பையன். ஒரு பக்கம் திட்டு...இன்னொரு பக்கம் கிப்ட்னு வாழ்க்கை ரொம்ப ஜாலியா போகுது’’ என்று குதூகலமாகச் சொல்லும் மானஸ், நடித்த குறும்படம் ஒன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

-பா.விஜயலட்சுமி