Published:Updated:

‘அந்த ரெண்டுக்கும் நான் அடிமை!’ - ‘காக்க காக்க’ தீபா ஜெயன்

தா.ரமேஷ்
‘அந்த ரெண்டுக்கும் நான் அடிமை!’ - ‘காக்க காக்க’ தீபா ஜெயன்
‘அந்த ரெண்டுக்கும் நான் அடிமை!’ - ‘காக்க காக்க’ தீபா ஜெயன்

‘மலையாளப் பொண்ணாச்சே...கண்டிப்பா தமிழ் தெரிஞ்சுருக்க கஷ்டம்தான். டப்பிங்கே வேறு யாரோதான் பேசுவாங்க இவங்களுக்கு’ என்று நாம் பேசுவதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தவர், ‘வணக்கம்... எனக்கு தமிழ் நல்லாவே தெரியும். அதனால கேள்விகளை நீங்க தமிழிலையே கேட்கலாம்’ என்று சிக்ஸர் அடிக்கிறார் தீபா ஜெயன்.

ராஜ் டிவியின் ‘காக்க காக்க’ தொடரில் ’வேலுண்டு வினையில்லை’ என எதிரிகளுக்கு எதிராக நவபாஷாண வேலை தேடி அலைந்து போராடும் கார்த்திகாவாக அசத்திக் கொண்டிருக்கிறார் தீபா. கேரளக் கிளி தமிழக டிவிக் கரையோரம் ஒதுங்கியது எப்படி என அவரிடமே கேட்டோம். 

’அதென்ன தமிழில் தொடர்ந்து கடவுள், அமானுஷ்யம், தெய்வப்பெண் கேரக்டர்களிலேயே நடிச்சுட்டு இருக்கீங்க?’

“ஹையோ அப்படியெல்லாம் இல்லைங்க. அதுவாவே அப்படி அமைஞ்சுடுச்சு. முதன்முதலில் ‘அதே கண்கள்’ சீரியல் மூலமா தமிழில் எண்ட்ரி கொடுத்தேன். அந்த சீரியல் அமானுஷ்யம் சார்ந்தது. அடுத்தது, ஏழாம் உயிர். ஏழு பெண்கள், நரபலி பத்தின கதை. மூணாவதா இப்போ ‘காக்க காக்க’. முழுக்க, முழுக்க முருகன், வேல், கார்த்திகைப் பெண்கள்னு பயணிக்கற கதை. கடவுள் சார்ந்த கதைகளில் நடிக்கவும் குடுத்துவச்சுருக்கணுமே. அதனால் ஹேப்பிதான். அதுக்காக மத்த கதைகளில் நடிக்க மாட்டேனு அர்த்தம் இல்லைங்க.”

‘ரொம்ப குட்டிப் பொண்ணா இருக்கீங்க. தமிழில்தான் முதலில் தீபாவோட எண்ட்ரியா?’

”அப்டியா தெரியுது? சூப்பர்ங்க. ஆனால், நான் டிவி உலகில் காலடி எடுத்து வச்சு ஆறு வருஷத்துக்கு மேல ஆய்டுச்சு. சன் டிவி நெட்வொர்க்கின், மலையாள சேனல் ‘கிரண்’. அதில் முதன்முதலில் காம்பியரரா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுதான் என்னோட முதல் ஷோ. அது மூலமா மலையாளத்தில் சூர்யா டிவியில் ’மழயறியாதே’ சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. ’ஸ்ரீதனம்’ சீரியல்தான் எனக்கு ஒரு பெரிய ப்ரேக் கொடுத்தது. இப்போ தமிழிலும் அசத்திட்டு இருக்கேன்.”

‘தீபா கேரளப் பெண்குட்டினு தெரியும். பிறந்தது, படிச்சது, அப்பா, அம்மா பத்தி சொல்லுங்களேன்?”

”என்னோட அப்பா ஜெயக்குமார். அம்மா கிரிஜா குமார். நான் பிறந்து, வளர்ந்ததெல்லாம் திருவனந்தபுரம். நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு டிகிரி ஹோல்டர். ஒரு குட்டித் தங்கை தர்ஷனா. இதுதான் என்னோட அழகான குடும்பம்.” 

‘அழகா பேசறீங்க. அதுமாதிரியே அழகான ஹாபி எதாவது இருக்குமே?’

“ஐஸ்..ஐஸ். ஆனால், உண்மையிலேயே எனக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கு இருக்குங்க. அது ‘ஓவியம்’. பெயிண்டிங்க்ஸ்னா எனக்கு உயிர். வீட்டில் ஓய்வா இருக்கறப்போ வரையறதுதான் என்னோட முழுநேர வேலை.”

‘சென்னை இட்லி பிடிச்சுருச்சா? மேடம்க்கு பிடிச்ச உணவு எது?’

“தமிழ்நாட்டு ஃபுட் எல்லாமே எனக்கு பிடிக்கும். அதிலும் சென்னை இட்லி, சாம்பார் யம்மி. கேரளாவோட புட்டு, கொண்டக்கடலை, பழம் பொரிச்சது அப்புறம் அரிசிச்சோறு, மீன்கறிக்கு நான் அடிமை.” என்று சொல்லிக்கொண்டே சுடசுடக் கட்டஞ்சாயா கொடுத்து பேட்டிக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார் தீபா.

 - பா.விஜயலட்சுமி