Published:Updated:

‘இப்போ நான் பக்கா மாஸ் வில்லன்’ - ‘கனா காணும் காலங்கள்’ ஐயப்பன்

‘இப்போ நான் பக்கா மாஸ் வில்லன்’ - ‘கனா காணும் காலங்கள்’ ஐயப்பன்
‘இப்போ நான் பக்கா மாஸ் வில்லன்’ - ‘கனா காணும் காலங்கள்’ ஐயப்பன்

‘இப்போ நான் பக்கா மாஸ் வில்லன்’ - ‘கனா காணும் காலங்கள்’ ஐயப்பன்

'கனா காணும் காலங்கள்’...2006 ஆம் ஆண்டில் பள்ளி, கல்லூரி படித்த அனைத்து இளசுகளையும் கவர்ந்திழுத்த தொடர். ஆண், பெண் நட்பையும் அழகாகக் காட்டிய சீரியல். ஒரு இளமைப் பட்டாளமே முற்றுகையிட்டு நடித்திருந்த இந்தத் தொடரில், ‘உன்னி’ என்னும் கேரக்டரில் நடித்திருந்த ஐயப்பன் 10 வருடங்கள் கழித்தும் டிவி உலகில் பிசியாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

'கனா காணும் காலங்கள்’ உன்னியா இவர்? என நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். அவருடைய ரன்னிங் ரேஸில், ஓர் இடைவெளி கொடுத்து கேள்விகளைத் தொடுத்தோம்.

‘பேஸ்புக்ல கூட ஐயப்பன் உன்னினு பேர் இருக்கு. உங்கள் நிஜப் பெயரிலும் உன்னி இருக்கா?’

“அச்சோ இல்லைங்க... கனா காணும் காலங்கள் தொடரின் உன்னி கேரக்டர்தான் எனக்கு பிரேக் கொடுத்த கதாப்பாத்திரம். அந்த சென்டி மெண்ட் அப்படியே தொடர, அந்தப் பேரும் என் நிஜப் பேரோட அப்படியே ஒட்டிக்கிச்சு. இன்றைக்கும் நிறையப்பேர் வெளியில் என்னை உன்னினுதான் கூப்பிடுறாங்க.”

‘சாருக்கு சொந்த ஊர் மலையாளக்கரைதானா?’

”நான் பக்கா தமிழ்ப்பையன். சொந்த ஊர் ஊட்டி. முகத்தில் கொஞ்சம் மலையாளக் களை ஒட்டிகிட்டு இருக்கறதால இன்னும் எல்லாரும் என்னை மலையாளின்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால், நான் லோக்கலு..லோக்கலு.”

‘நடிப்புக்குள்ள எப்படி வந்தீர்கள்?’

“அது ஒரு பெரிய கதை. படிப்பைப் பொறுத்தவரை முக்கால்வாசி பசங்கள் மாதிரி நானும் மந்தம்தான். பாலிடெக்னிக் போயி அதையும் பாதியில் விட்டுட்டேன். ஆனால், நிறைய வேலைகள் பார்த்திருக்கிறேன். அப்படிதான் சென்னைக்கு வந்து பப் ஒன்றில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது அங்க என்னைப் பார்த்தவர்கள், கனாகாணும் காலங்கள் தொடருக்காக கட்டித் தூக்கிட்டு போய்ட்டாங்க. சென்னைக்கு வேலைக்காகத்தான் வந்தேன். ஆனால், பாதை மாறி இப்போது ஒரு நடிகன் ஆகிட்டேன்.”

‘கனா காணும் காலங்கள் ஃப்ரண்ட்ஸோட இப்போதும் டச்ல இருக்கீங்களா?’

“கண்டிப்பா....அவர்கள் யாரையும் என்னால் மறக்க முடியாதே. இப்போதும் ஃபோன் மூலமா எல்லோரும் பேசிட்டுதான் இருக்கிறோம். எல்லாரும் வேறவேற வேலையில் பிசியாய்ட்டதால அடிக்கடி பார்த்துக்க முடியலை. நானும்தொடரில் பிசியா இருக்கிறேன். ஸோ... நேரம் கிடைக்கும்போது மீட் பண்ணிப்போம்.”

‘உங்களுடைய முதல் சீரியல் அது. இப்போது நினைத்து பார்த்தா அந்த ஸ்டூண்ட் லைஃப் எப்படி ஃபீல் ஆகுது?’

“பேருக்கு ஏத்த மாதிரி உண்மையிலேயே இப்போது அது ‘கனா காணும் காலங்கள்’தாங்க. தொடர் நடிக்கறப்போ பெருசா எதுவும் தோணல. ஆனால், இப்போது நினைத்து பார்க்கறப்போ அதெல்லாம் ஒரு ‘கோல்டன் மொமண்ட்’ லைஃப்ல. திருப்பிக் கிடைக்கவே கிடைக்காது.”

‘பசங்களோடு நட்பா இருக்கீங்க. கூட நடித்த சங்கவி, ராகவியை ஞாபகம் இருக்கா?’

“ஏன் இல்லை. நல்லா ஞாபகம் இருக்கு. ஆனால், இரண்டு பேர்கிட்டயும் பேசி நிறைய வருஷம் ஆயிடுச்சு. ராகவி (ஹேமலதா) என்கூட ‘தென்றல்’ தொடரில் நடிச்சிருந்தாங்க. சங்கவி (மோனிஷா) அப்போவே டாக்டருக்கு படிச்சுட்டு இருந்தாங்க. அவங்களும் டென்டிஸ்ட்டா செட்டில் ஆயிட்டாங்க.”

’“தென்றல்” சீரியலிலும் வெயிட்டான கேரக்டர் நடிச்சிருப்பீங்க. கனா காணும் காலங்களுக்கு அப்புறம் தென்றல்தானா?’

“கனா காணும் காலங்கள் முடிஞ்சதுக்கப்புறம் சினிமாவில் நடிக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன். ’பட்டாளம்’ ஃப்லிம்ல நான் நடிக்க வேண்டியது. சில காரணங்களால நடிக்க முடியலை. பிறகு வரிசையா நிறைய சீரியல்கள் பண்ணினேன். அந்தச் சமயத்தில்தான் தென்றல் கேரக்டரும் கிடைச்சது.”

‘தென்றல் அனுபவம் பத்தி சொல்லுங்கள்’

“கனா காணும் காலங்கள் மாதிரியே தென்றலும் எனக்கு ப்ரேக் கொடுத்த தொடர். கல்லூரி பசங்ககிட்ட எப்படி வரவேற்புகிடைச்சதோ, அதே மாதிரி ஃபேமிலி ஆடியன்ஸ்கிட்ட எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது தென்றல் சீரியல்.”

‘இப்போது நீங்க ஒரு பக்கா வில்லன். சாஃப்ட்டான கேரக்டர்கள் தாண்டி இதற்காக எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கு?’

“கல்யாணப் பரிசு சீரியலில் ஒருநாள் ஃபுல்லா தாடி, மீசையோடு நடிச்சுட்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்த்துட்டு ‘வம்சம்’ சீரியலில் ஒரு வில்லன் கேரக்டர் இருக்கு நடிக்கிறீயான்னு கேட்டார். நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால், முதல் சீனே ஒருத்தரைக் கொலை பண்றதுதான். அந்தளவுக்குக் கொடூரமான கேரக்டர். அதுக்காகவே கோவப்படறது, முகத்தில் எக்ஸ்பிரஷன்ஸ் சரியா காட்டறதுனு என்னுடைய நடிப்பை மாத்திக்க வேண்டியிருக்கு. ஆனால், ரொம்பநல்லாருக்கு.”

‘சென்னைப் பையனாகவே மாறிட்டீங்க. இப்போலாம் ஊட்டிக் குளிர் செட் ஆகுதா?’

“ஹையோ இப்போலாம் நார்மல் நாளில் கூட ஊட்டில நான் மப்ளர் போட்டுட்டுதான் சுத்தறேன். சென்னைக்கு வந்து 10 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. எல்லாரும் சென்னை வந்தால் குளிர் விட்டு போய்டும்னு சொல்வார்கள். இப்போதாங்க பயங்கரமா குளிருது ஊட்டிக்குப் போனா.”

’பேமிலி மெம்பர்ஸ்லாம் என்ன பண்றாங்க?’

“அப்பா, அம்மா ஊட்டிலதான் இருக்கிறார்கள். மாமா ஆர்மில இருந்ததால் என் குட்டிப் பெண்ணும் ஆர்மி பள்ளியில்தான் படிக்கறா. டிசிப்ளினா இருக்க இப்போவே கத்துக் குடுக்க ஆசை எனக்கு.ஸோ, மேடம் பாட்டி, தாத்தாவோட ஊட்டில லூட்டி அடிச்சுட்டு இருக்கிறாங்க. நானும், மனைவியும் சென்னையில் செட்டில்டு. அப்பப்போ குழந்தையைப் பார்க்கணும்னு ஏக்கமா இருக்கும். ஆனால், நாமதான் படிக்கலை. அவ நல்லா படிக்கணும்னே மனசை தேத்திக்கறோம். வொய்ப் நல்லா படிச்சுருக்காங்க. அதனால பொண்ணும் படிப்பில் கெட்டியாதான் இருக்காங்க. பொண்ணுங்களாச்சே டேலண்ட்டாதான் இருப்பாங்க.”

’வருங்காலத் திட்டம் ஏதாவது இருக்கா பாஸ்?’

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லைங்க. இப்போலாம் ரொம்ப வேகமான உலகம். அதனால் கிடைக்கிற வாய்ப்பைத் தக்கவச்சுகிட்டு நடிக்கணும். அது மட்டும்தான் என்னுடைய ப்ளான்.” என்று சொல்லி விடைபெறுகிறார்.

- பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு