Published:Updated:

‘‘என்னை ‘சினிஃபீல்ட் குட்டி’னு கிண்டல் பண்ணுவாங்க!’’ - ‘வள்ளி’ வித்யா

பா.விஜயலட்சுமி
‘‘என்னை ‘சினிஃபீல்ட் குட்டி’னு கிண்டல் பண்ணுவாங்க!’’ - ‘வள்ளி’ வித்யா
‘‘என்னை ‘சினிஃபீல்ட் குட்டி’னு கிண்டல் பண்ணுவாங்க!’’ - ‘வள்ளி’ வித்யா

கேரளாவிலிருந்து அடிக்கடி விமானத்தில் பறந்து வந்து தமிழ்நாட்டு ‘வள்ளி’யாக கலக்கிக் கொண்டிருக்கும் வித்யா, எதேச்சையாக கண்களில் சிக்கினார். ‘பொண்ணை விட்டா பிடிக்க முடியாது’ என்று காபி ஷாப்பிலேயே மடக்கி உட்காரவைத்து, ஆவி பறக்கும் எக்ஸ்பிரசோ உடன் ஒரு குட்டி இன்டர்வியூவை தொடங்கினோம்.

’“வள்ளி” இப்போ சென்னைப் பொண்ணு...பட், வித்யா பயோ-டேட்டா கிடைக்குமா?’

”நான் பிறந்தது எழில் கொஞ்சும் கேரளா. அவ்விட கோட்டயம் என்னோட சொந்த ஊர். அப்பா வங்கி அதிகாரி. அம்மா அவருக்கே அதிகாரி. அதாங்க, குடும்பத் தலைவி. நான் ஒரே ஒரு பொண்ணு. சின்ன வயசில் இருந்தே சினிமானா உயிர். முதலில் விளம்பரப்படங்களில் நடிச்சிட்டு இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்போ என்னோட சினிமா என்ட்ரி நடந்துச்சு.” 

’வித்யாவோட முதல் படம் எது?’

”மலையாளத்தில்தான் நான் முதன்முதலில் நடிச்சேன். ‘சீதா கல்யாணம்’ நான் நடிச்ச முதல் படம். அதுக்கப்புறம் வரிசையா நிறைய படங்கள் நடிச்சுட்டேன். இதுவரை எனக்கு பொறந்த வீடு, புகுந்த வீடு இரண்டோட சப்போர்ட்டும் முழுமையா இருக்கு.”

‘நடிக்கற ஆர்வம் சின்ன வயசிலிருந்தே இருக்குனு சொல்றீங்க. வீட்டில் ஏற்கெனவே நடிப்புத் துறையில் இருக்காங்களா?’

“ஹையோ....அது பெரிய ஸ்டோரியல்லோ! என் வீட்டில் அம்மா, அப்பா, என் தாத்தா, பாட்டினு யாருமே நடிப்புத் துறையில் கிடையாது. நான் மட்டும்தான் எப்போ பார்த்தாலும் ஆக்டிங் பத்தியே கதைச்சுட்டு இருப்பேன். வீட்டில் எல்லாருமே செல்லமா ‘சினிஃபீல்ட் குட்டி’னு கிண்டல் பண்ணுவாங்க. அம்மாகூட அடிக்கடி, ‘என்ன நீ எப்போ பார்த்தாலும் நடிப்பைப் பத்தியே பேசுற? அதெல்லாம் சரிப்பட்டு வருமா நமக்கு?’னு கேட்பாங்க. ஆனால், கடைசியில் நானே ஜெயிச்சேன். நடிகையாகவும் ஆகிட்டேன்.”

’சீரியல், சினிமாவில் காதல், கல்யாணம் ரெண்டுமே இருக்கு. வித்யாவோட நிஜ வாழ்க்கையில் காதல் திருமணமா?’

‘அப்படி நீங்க நினைச்சுருந்தீங்கனா ரொம்பப் பாவம். என்னோட கல்யாணம் பக்கா அரேஞ்சுடு மேரேஜ். என்னோட கணவர் வினு மோகன். அவரும் ஒரு நடிகர்தான். சொல்லப்போனா என்னோட வீட்டுக்கு அப்படியே எதிர்மாறான குடும்பம் அவரோடது. அவங்க வீட்டில் எல்லாரும் சினி ஃபீல்டில் இருக்காங்க. அவரும், நானும் ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சுருக்கோம். அந்த சமயத்தில், எங்களை இரண்டு வீட்டிலும் பிடிச்சு போய்,  பேசி முடிச்சுட்டாங்க. சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். காதலிச்சுகிட்டே இருக்கோம். ஸோ... அன்பு ரசிகர்களே நான் மிஸஸ் வித்யா வினுமோகன்.”

‘அப்போ உங்க லைஃப்ல காதல் கலாட்டாவே இல்லையா?’

“ஏன் இல்லை... நிச்சயம் முடிஞ்ச பிறகு கிட்டதட்ட எட்டு மாசம் ரெண்டு பேரும் விழுந்து, விழுந்து காதலிச்சோம். கிஃப்ட்ஸ், அவுட்டிங்ஸ், சினிமானு ஜாலியா ஒரு ரவுண்ட் வந்தோம். அப்புறம், ஒருநாள் செமத்தியா கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். இப்போ, ஒண்ணுக்கு இரண்டு குடும்பம் எனக்கு நடிப்பில் சப்போர்ட்டுக்கு இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம்தான் வள்ளி சீரியல் வாய்ப்பும் வந்தது. மறுக்காம ஒத்துக்க சொன்னார் வினு. முதலில் கேரளா டூ சென்னை ட்ராவல் கஷ்டமா இருந்தது. இப்போ வள்ளி டீமே ஒரு குடும்பம் மாதிரி ஆகிட்டாங்க எனக்கு. ஸோ, லைஃப் கணவர், காதல், ஃபேமிலி, நடிப்புனு செம ஜாலியா போய்கிட்டு இருக்கு” எக்ஸ்பிரசோ டேஸ்டுடன் இனிமையாய் பேட்டியை முடித்துக் கொண்டார் வித்யா. 

-பா.விஜயலட்சுமி