Published:Updated:

”இதுக்காகவே அரசியல் கத்துகிட்டோம்!” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்!

”இதுக்காகவே அரசியல் கத்துகிட்டோம்!” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்!
”இதுக்காகவே அரசியல் கத்துகிட்டோம்!” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்!

சீரியஸான செய்திகளையும் ஜாலியாக சொல்லி லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சி தான் ‘கிச்சன் கேபினட்’. புதியதலைமுறையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அபிநயா மற்றும் பகுர்தீன் இருவரிடமும் ஒரு ஜாலி சாட். 

“தஞ்சாவூர் பொண்ணு நான், சாஃப்ட்வேர் மேல ஆர்வம் இருந்ததுனால இஞ்ஜினியரிங் படிச்சேன். படிச்சிட்டு இருக்கும்போதே, தொகுப்பாளினிக்கான வாய்ப்பு கிடைச்சது. படித்து முடிச்சதும் மீடியாவில் இறங்கிட்டேன். ஒன்றரை வருடமா புதியதலைமுறையில் இந்த  நிகழ்ச்சியின் ஆங்கர். ஆரம்பத்தில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. ஆனா நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சதும் நிறைய கத்துக்கிட்டேன். நமக்குத் தெரிஞ்சாதானே சுலபமா மற்றவங்களுக்குச் சொல்லமுடியும். இந்த ஷோ மூலமா அரசியல் ஆர்வமும் அதிகமாகிடுச்சு” என்று டிவியில் பார்க்கும் அதே பளீர் சிரிப்புடன் பேசுகிறார் அபிநயா. 

“கேபினட்டில் இருக்கும் அமைச்சர்களின் சொந்தங்களோ, நெருக்கமானவர்களோ வெளியிலிருந்து கேபினட் அமைச்சர்களுக்கு ஆலோசனை தருவது தான் கிச்சன் கேபினட்னு சொல்லுவாங்க. அதை அப்படியே மாற்றி, கஷ்டமான, சிக்கலான எந்த ஒரு அரசியல் செய்தியா இருந்தாலும் அதை சந்தோஷத்தோட மக்களுக்குப் பரிமாறுவது தான் எங்க நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அரசியல் பிரபலங்களின் ஃபேவரைட்னு கூட கேள்விப்பட்டேன்” 

அபிநயா பேசிக்கொண்டிருக்கும் போது என்ட்ரி கொடுக்கிறார் இணைத் தொகுப்பாளர் பகு.  “மதுரையில் மாஸ்டர் டிகிரி படிச்சேன். படிக்கும் போதே, நாடக கலைஞர் முருகபூபதியின் மணல்மகுடி நாடக அமைப்பில்,  நாடகம் கத்துக்கிட்டேன். நிறைய ஊர்களில் நவீன நாடகங்கள் நிகழ்த்தியிருக்கோம். டிகிரி முடிச்ச கையோடு சென்னைக்கு வந்துட்டேன். பத்திரிகையில் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, புதிய தலைமுறையில் வாய்ப்பு வந்தது. கார்மல் சார் தான் எங்க  நிகழ்ச்சியோட ஹெட்.

நாடகமும், மீடியாவும் வேறு வேறு தளம். நாடகத்திலிருந்து வந்து மீடியாவில் நிலைச்சு நிற்கிறது கஷ்டமான விஷயமும்கூட. அதுனால இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதுறது, இயக்குறதுனு திரைக்குப் பின்னாடி தான் முதல்ல  வேலை பார்த்தேன். அதுக்காக நிறைய அரசியல் செய்திகள் படிச்சு,  அரசியல் தளம் பத்தி ஆழமா கத்துக்க ஆரம்பிச்சேன். கார்மல் சார் தான் தொகுப்பாளரா என்னை முயற்சி பண்ணச் சொன்னார். முதல் ஒரு மாதத்துக்கு மீடியாவோட உடல்மொழியைக் கொண்டுவரவே சிரமப்பட்டேன். பயிற்சியின் மூலமா இப்போ கைதேர்ந்துட்டேன்னு நினைக்கிறேன். 

இன்றைக்கான செய்திக்கு ஸ்கிரிப்ட் தயார் பண்ணிருப்போம். திடீர்னு ப்ரேக்கிங் செய்திகள் வெளியாகும். உடனே ஸ்கிரிப்டை மாற்றி புது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். ஒவ்வொரு நிமிடமும் புதுசா ஏதாவது பண்றதுக்கான தளமாத்தான் மீடியாவைப் பார்க்கிறேன்” என்றார் பகு. 

”மீடியாவில் உங்க லட்சியம் தான் என்ன?” என்று இருவரிடமும் கேட்க, தெளிவுடன் பதில் சொல்லத் தொடங்கினார் அபிநயா. “இப்பவும் நான் நிறைய கத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  10 வருஷம் கழிச்சி, பெண் தொகுப்பாளினியா எல்லா அரசியல் தலைவர்களையும் பேட்டி எடுக்கணும்ங்குறதுதான் என் ஆசை. எத்தனை வருஷமானாலும் நான் எங்கே, யார்னு தெரியற மாதிரி மக்கள்கிட்ட பேர் எடுக்கணும்”. 

“சமூக அக்கறையுடன் சொல்ல நினைக்கும் விஷயங்களை மீடியாவின் வழியா சொல்லணும்னு நினைக்கிறேன். அதற்காக தொடர்ந்து செயல்படணும்ங்குறது தான் என்னோட நோக்கம்”  என்று சிம்பிளாக முடித்தார் பகு. 

“எங்க இரண்டு பேருக்கு பின்னாடி, ப்ரோக்ராம் ப்ரொட்யூசரோட சேர்த்து 10 பேர் இந்த நிகழ்ச்சிக்காக வேலை செய்யறாங்க. செய்தியை உறுதிப்படுத்தி, அதற்கான ஜாலியான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டா உடனே ஸ்டார்ட்...கேமிரா... ஆக்‌ஷன் தான்...!” என்று ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார் அபிநயா. 

-முத்து பகவத்-