Published:Updated:

’காதலர் தினத்துக்கு என்ன பரிசு?’ - சின்னத்திரை காதல் ஜோடிகளின் அனுபவம்

விகடன் விமர்சனக்குழு
’காதலர் தினத்துக்கு என்ன பரிசு?’ - சின்னத்திரை காதல் ஜோடிகளின் அனுபவம்
’காதலர் தினத்துக்கு என்ன பரிசு?’ - சின்னத்திரை காதல் ஜோடிகளின் அனுபவம்

காதலித்துத் திருமணம் செய்தவர்களுக்கு தினம்தினம் காதலர் தினம்தான் என்றாலும், ‛வேலன்டைன்ஸ் டே’ எல்லா வகையிலும் ஸ்பெஷல்தானே? முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் பரிசு என பகிரவும், நினைக்கவும் ஏராளம் இருக்கிறது இந்நாளில். ஸோ... இந்நன்னாளில்  பிரியத்துக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருளை பரஸ்பரம் பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. திருமணமானாலும் விதிவிலக்கு இல்லை. இல்லையெனில், ‛இன்னிக்கி எனக்கு  ஒரு ரோஸ் கூட வாங்கிக் கொடுக்க தோணலைல?’ என பொங்கிவிடும் தாய்க்குலம். இதோ... காதலித்துத் திருமணம் செய்த சின்னத்திரை நட்சத்திரங்கள் துணைக்கு இன்று என்ன கிஃப்ட் கொடுத்தார்கள் அல்லது கிஃப்ட் வாங்காமல் எப்படி சமாளித்தார்கள் என விசாரித்தோம்.

படவா கோபி - ஹரிதா:

“எங்க காதல் கதையைப் பேச ஆரம்பிச்சா பெரிய புக்கே போடலாம். அவங்கதான் என்னை துரத்தி துரத்திக் காதலிச்சாங்க. ஃப்ரண்ட்ஸை கூட்டிட்டு வந்து, ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா, முடியாதா?’னு மிரட்டியிருக்காங்க. ஆனாலும், அவங்களோட தைரியம், அன்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்களோட முதலாவது காதலர் தினத்தில், அவங்கதான் எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தாங்க. என்னால அப்போ வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. ஆனால், இன்னைக்கு நான் அவங்களுக்கு ஒரு வெள்ளி குங்குமச் சிமிழும், அது நிறைய ஆர்கானிக் குங்குமமும் பரிசாக் கொடுத்துருக்கேன். நான் இருந்தாலும், இல்லைனாலும் அவங்க நெத்தி நிறைய எப்பவும் பொட்டு வச்சுக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை.”

சஞ்சீவ் - ப்ரீத்தி:

“கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆய்டுச்சு. ஆனாலும், காதலிச்ச காலங்களை மறக்கவே முடியாது. ப்ரீத்தி முட்டை கூட சாப்பிடாத பக்கா பிராமின் பொண்ணு. ஒருநாள் ஷூட்டிங்கில் நான் பிசியா இருக்கறப்போ, எனக்காக சமைச்சு எடுத்துட்டு வந்துருந்தாங்க. ’சரி..ஏதாவது சாம்பார் சாதம் மாதிரி இருக்கும்’னு கேரியரைத் திறந்து பார்த்தா உள்ளே ப்ரான், சிக்கன் எல்லாம் இருந்தது. நான் கூட கடைல வாங்கிட்டு வந்திருப்பாங்கனு நினைச்சேன். ஆனால், மேடம் எனக்காக வீட்டிலேயே சமைச்சு, அதுக்கப்புறம் வீடு முழுக்க ஊதுபத்தி புகைலாம் போட்டுட்டு வந்திருக்காங்க. சிக்கன் சமைக்கறது கூட ஈசி. ஆனால், இறால் வாங்கி, க்ளீன் பண்ணி சமைக்கறது ரொம்பவே கஷ்டம். என் மேல உள்ள அன்பால ப்ரீத்தி அந்த ரிஸ்க்கை எடுத்திருந்தாங்க. அந்த நொடிதான் ப்ரீத்தியை இன்னும் ரொம்ப பிடிச்சுப் போனது. எங்களோட முதலாவது காதலர் தினத்துக்கு சத்தியமா நான் எந்த கிஃப்ட்டும் வாங்கிக் கொடுக்கலைங்க. ஆனால், இன்னைக்கு நான் வாங்கிட்டு போற கிஃப்ட் என்னனு கேட்டா நீங்க சிரிப்பீங்க. அந்த கிஃப்ட் பாத்ரூம் செப்பல். இதுகூட அவங்களோடது பழசாயிடுச்சேனு வாங்கினது. நீங்க கேட்டதும்தான் ‘இதையே ஏன் கிஃப்ட்டா மாத்திடக்கூடாதுங்கற ஐடியா வந்திருக்கு. வீட்டில் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!”

ஆர்த்தி - கணேஷ்:

“எங்க காதலோட மறக்க முடியாத சம்பவத்தைக் கேட்டீங்கனா? ஹ்ம்ம். ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கறதுக்காக நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணிட்டு இருந்தேன். அப்பத்தான் இவர் ஒருநாள் என்கிட்ட வந்து, ‘ஆர்த்திம்மா...நான் ஆர்.டி.ஓ-கிட்ட பேசிட்டேன். ஒரு 2000 ரூபா இருந்தா உடனே கொடுத்தடலாம்னு சொல்றார்’னு சொன்னார். நானும்... இத்தனை நாளா எட்டு போட்டும் ஒண்ணும் நடக்கல. பணத்தையாவது குடுத்து பார்ப்போம்னு கொடுத்துட்டேன். ஆர்டி ஆபிசுக்கு போய் அன்னைக்கும் எட்டு போட்டு, கார் ஓட்டி காட்டினேன். ஆனால், அந்த மனுஷன் இரக்கமே படாம மறுபடி வாம்மானு சொல்லிட்டார். என்னடா இது காசு கொடுத்தும் இப்படி ஆய்டுச்சேனு நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கறப்போதான், அங்க வேலை பார்க்கிற ப்யூன் ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு பேச வந்தார். அவர்கிட்ட, ‘என்னங்க பணம் கொடுத்தும் லைசென்ஸ் கிடைக்கலையே’னு புலம்பினதுதான் தாமதம், ‘பணமா? ஆர்.டி.ஓ-கிட்ட அப்படி மட்டும் சொல்லிடாதீங்க. அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’னு சொன்னார். அப்போதான் தெரிஞ்சுது இவர் என்கிட்ட பணத்தை ஆட்டையப் போட்டுருக்கார்னு. விடுவேனா நானு? வந்து வீட்டில் கும்முகும்முனு கும்மி எடுத்துட்டேன். இந்த ஆம்பளைகளே இப்படித்தான். முதலாவது காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, எல்லா நாளுக்கும் நான் தான் அவருக்கு கிஃப்ட் கொடுப்பேன். இந்த காதலர் தினத்துக்கு அவருக்கு பிடிச்ச காரை ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துபோய் புக் பண்ணிட்டு வந்துருக்கோம்.”

தேவதர்ஷினி - சேத்தன்:

“காதலிக்கறதுக்கு முன்னாடியே எங்க வாழ்க்கையில் நடந்ததுதான் மறக்க முடியாத சம்பவம். அவரும், நானும் ‘விடாது கருப்பு’ நடிச்சிட்டிருந்த நேரம். நான் காம்பியரிங் பண்ணியிருந்தாலும், நடிப்புக்கு புதுசு. அதனாலேயே, இயக்குநர் நாகா, ‘சேத்தனைப்பாரு அவர் எப்படி எக்ஸ்பிரஷனோட நடிக்கிறார்? கண்ணே பேசுது. அவர்கிட்ட இருந்து கத்துக்கோ. அவர் கண்ணைப் பார்த்து நடிக்கறது எப்படினு கத்துக்கோ’ அப்படினு சொல்லிட்டே இருப்பார். நானும் கிண்டலா, ‘அவர் கண்ணே முட்டைக் கண்ணு. அதனாலதான் எக்ஸ்பிரஷன்ஸ் கொட்டுது’னு சொல்வேன். ஆனால், அவர் கண்ணைப் பார்த்து நடிப்பு வந்துச்சோ, இல்லையோ காதல் வந்துருச்சு. ரெண்டுபேருமே இதுவரை காதலர் தினத்துக்கு பெரிய கிஃப்ட்டெல்லாம் கொடுத்துக்கிட்டது இல்லை. நாங்க சந்திச்சுக்கிட்ட நாள் ஒன்னு இருக்கு அதுதான் எங்களுக்கு வேலன்டைன்ஸ் டே”

-பா.விஜயலட்சுமி-