Published:Updated:

‘இப்போதைக்கு இல்லை... இனிமே நடக்கலாம்!’ - என்ன சொல்கிறார் ‘லட்சுமி கல்யாணம்’ தீபிகா?

முத்து பகவத்
‘இப்போதைக்கு இல்லை... இனிமே நடக்கலாம்!’ - என்ன சொல்கிறார் ‘லட்சுமி கல்யாணம்’ தீபிகா?
‘இப்போதைக்கு இல்லை... இனிமே நடக்கலாம்!’ - என்ன சொல்கிறார் ‘லட்சுமி கல்யாணம்’ தீபிகா?

விஜய் டிவியின் ‘காதல் முதல் கல்யாணம்’ சீரியலுக்குப் பதிலாக ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் ‘லட்சுமி கல்யாணம்’. அக்கா தங்கைப் பாசத்தில் மிரளவைக்கும் சென்டிமென்ட் தொடர். இந்தத் தொடரில் அக்காவாக நடிக்கும் தீபிகா, சீரியலுக்கு அறிமுக நடிகை. `யாருமா நீ....’ என்ற மொமன்ட்டில் ஜாலியாக பேசினோம்! 

“உங்களைப் பற்றி?”

“சொந்த ஊரு பண்ருட்டி. ஆனா சென்னையில் செட்டில் ஆயிட்டோம். விஜயகாந்த் சாரோட ஆண்டாள் அழகர் கல்லூரியில்தான் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்ச கையோடு, கேப்டன் டிவியிலேயே செய்தி வாசிப்பாளரா வேலைக்கும் சேர்ந்துட்டேன். அப்பா பி.எஸ்.என்.எல்-ல வேலை பார்க்கிறாங்க. அம்மா, அக்கா, நான்.... இவங்க தான் என் உலகம். ”

“லட்சுமி கல்யாணம் சீரியல் வாய்ப்பு?” 

“ஜர்னலிசம் மேல இருந்த ஆர்வத்துல கேப்டன் டிவியில் நியூஸ் ரீடராகவும், சினிமாப் பிரபலங்களைப் பேட்டி எடுத்துட்டும் இருந்தேன். கேப்டன் டிவியில் வேலைக்கு சேர்ந்து சரியா 10 மாதம் கழிச்சு, திடீர்னு ஒருநாள் விஜய் டிவியிலிருந்து ஒரு போன் கால். முதல்ல நம்பலை. யாரோ விளையாடுறாங்கனு நினைச்சேன். அடுத்த நாள் விஜய்டிவிக்குப் போனதும்தான் தெரியும் நிஜமாகவே சீரியல்ல நடிக்கப் போறேன்னு. ஆனால் நான் தான் லீட் ரோல்னு நினைச்சுக்கூட பார்க்கலை...” என சொல்லிக்கொண்டே, குழந்தை போல துள்ளிக்குதிக்கிறார் தீபிகா.”

“சீரியல் அனுபவம்?”

“சின்ன வயசுலயே அம்மா இறந்து போய்டுறதுனால, அம்மாவா இருந்து தங்கையை நல்லாப் பார்த்துக்குற அக்கா லட்சுமிதான் நான். தங்கையா சத்ய சாய் நடிச்சிருக்காங்க. தங்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்குற கேரக்டர். தலைநிறைய பூவும், சாரியுமா செம சாதுவா நடிச்சிருக்கேன். அமைதியான பொண்ணு. ஆனா வர்ற பிரச்னையை தைரியமா எதிர்கொள்ளும் கேரக்டர். ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஸ்பார்ட்டிலும் நிறைய கத்துக்கிறேன். புதுசு புதுசா நடிப்பும், நண்பர்களும் கிடைக்கிறதுனால ரொம்ப சந்தோஷமா இருக்கு”. 

“நிஜத்திலும் நீங்க ரொம்ப அமைதிதானா?”

“ரகளை பண்ற சவுண்ட் பார்ட்டி. சாதுவா, அப்படின்னா என்னென்னு கேட்பேன். இந்த சீரியல்ல வர்ற மாதிரி பாசமான தங்கையா நானும் என் அக்காவும் எப்போதுமே இருந்தது இல்லை. அக்கா மேல நிறைய பாசம் இருந்துமே வெளிக்காட்டமாட்டேன். எப்போதுமே வீட்டுல ரெண்டுபேரும் சண்டைதான் போடுவோம். அக்காவுக்கு கல்யாணம் ஆனதால அவளை இப்போ ரொம்பவே `மிஸ்’ பண்றேன்.”

“இன்ஜினியரிங் படிச்சிட்டு, மீடியாவிற்குள் நுழைய வீட்டில் எப்படிச் சம்மதிச்சாங்க? ”

“லட்சக்கணக்குல பணம் கட்டி இன்ஜினியரிங் படிச்சதால, நான் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பேன்னுதான் வீட்டுல எல்லோருமே நினைச்சாங்க. ஆனா நான் மீடியாவைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டுல பயங்கர எதிர்ப்பு. ‘யார் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பா, லைஃப் என்னாவாகும்’னு எல்லோருமே நெகட்டிவாதான் பேசுனாங்க. நான் பண்ணுறதுதான் சரின்னு, பேசியே வீட்டுல எல்லோரையும் சமாளிச்சிடுவேன். முதல்ல நியூஸ் ரீடருக்கு மட்டும்தான் ஓகே சொன்னாங்க. சீரியலில் நடிக்கிறதெல்லாம் சுத்தமா பிடிக்கலை. ஆனா நடிக்க ஆரம்பிச்சதும் வீட்டுல எல்லோருமே என் சீரியலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நமக்கு கிடைச்சிருக்குற இந்த ஒரு வாழ்க்கையையும் நம்ம விருப்பப்படி வாழ்ந்தாதான் அந்த வாழக்கை அழகா இருக்கும்.” என்று பேசிக்கொண்டே ஞானி போல லுக் விடுகிறார்.

“இந்த உலகத்திலேயே உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்? ”

“ஷாப்பிங்னா எனக்கு உயிர். காய்ச்சல்ல இருந்தாக் கூட ஷாப்பிங் போகலாமான்னு கூப்பிட்டா உடனே போய்டுவேன். புதுசுபுதுசா அழகா எந்தப் பொருள் கண்ணுல சிக்குனாலும் உடனே வாங்கிடுவேன். அதுமட்டுமில்லாம ஷாப்பிங் போனா தந்தூரி சிக்கன் சாப்பிடாம வீட்டுக்கு திரும்ப மாட்டேன்.” 

“இந்த பிப்ரவரி 14க்கு ஏதும் ப்ரொபோசல் வந்துச்சா? ”

“கல்லூரி படிக்கும் நாள்ல இருந்து, இப்போ வரைக்கும் நிறைய ப்ரொபோசல் வந்துருக்கு. ஆனா ரொம்ப தெரிஞ்சவங்கனா ஜாலியா கலாய்ச்சிட்டு எஸ்கேப் ஆயிடுவேன். தெரியாத யாரும்னா ரெஸ்பான்ஸ் கூடபண்ணமாட்டேன். நம்புங்க பாஸ்... இப்போ வரைக்கும் நான் யரையும் லவ் பண்ணலை. எதிர்காலத்தில் லவ் பண்ணுவேன்னு நினைக்கிறேன். இப்போதைக்கு கரியர்தான் முக்கியம்” என்று வெட்கப்பட்டுக்கொண்டே பறந்துசெல்கிறார் தீபிகா. 

- முத்து பகவத்