Published:Updated:

‘ரூ.50 சம்பளத்துக்கு நடிச்சேன்!’ - கலங்கும் டி.வி நடிகர்

‘ரூ.50 சம்பளத்துக்கு நடிச்சேன்!’ - கலங்கும் டி.வி நடிகர்
‘ரூ.50 சம்பளத்துக்கு நடிச்சேன்!’ - கலங்கும் டி.வி நடிகர்

இன்டர்வியூ என்றதுமே ‘ஒரு 5 நிமிஷம். ஷாட் முடிச்சுட்டு வந்துடுறேன்...’ கொஞ்சம் கூட அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இன்றி பேசுகிறார் நடிகர் ஸ்ரீ. ‘பொம்மலாட்டம்’ சீரியலுக்குப் பிறகு ஸ்ரீ இப்போது ‘தலையணைப் பூக்கள்’ சீரியலில் செம பிசி. சீரியல் உலகின் சீனியர் ரசிகர்களுக்கும், மதிய நேர மெகா தொடர்களின் ரசிகைகளான இல்லத்தரசிகளுக்கும் இவரை 100% தெரிந்திருக்கும். அத்தனை ஃபெமிலியர் முகம்.  இசையமைப்பாளர்கள் சங்கர்- கணேஷ் இணையில், கணேஷின் மகன். பாரம்பரியமான சினிமா குடும்ப வாரிசான ஸ்ரீ, டிவி உலகிற்குள் வந்த கதையை அவரிடமே கேட்டோம்.

”ஸ்ரீ...னு சொன்னால்தான் நிறைய பேருக்கு தெரியுது. உண்மையில் உங்க முழுப்பெயர்?”

“என்னோட முழுப்பெயர் ஸ்ரீகுமார் வேலுமணி. இதில் வேலுமணி தாத்தா பெயர். சீனியர் சினிமா ரசிகர்களுக்கு என் தாத்தாவைக் கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். ‘சரவணா பிலிம்ஸ்’ ஓனர். ‘படகோட்டி’, ‘குடியிருந்த கோவில்’, ‘பாலும் பழமும்’ இதெல்லாமே தாத்தாவின் தயாரிப்புதான். அவரோட ஞாபகார்த்தமா எனக்கு இப்படி பெயர் வெச்சாங்க. அப்புறம் ஸ்கூல், காலேஜ்ல பேர் ரொம்ப நீளமா இருக்குனு ‘ஸ்ரீ’னு சுருக்கிட்டாங்க.”

“வீட்டில் தாத்தா, அப்பா ரெண்டு பேருமே சினிமா ஃபீல்டில் கொடிகட்டிப் பறந்தவங்க. நீங்க மட்டும் ஏன் டிவி?”

”நான் சினிமாவிலும் நடிச்சுட்டுதான் இருக்கேன். ஆனால், சின்ன வயசில் இருந்தே எனக்கு தாத்தா, அப்பாவோட புகழை உபயோகப்படுத்துறதுல விருப்பமே இல்லை. சொந்தமா சாதிக்கணும்ங்கறதில் தெளிவா இருந்தேன். ஸ்கூல் முடிச்சதும் அசிஸ்டண்ட் கேமரா மேனா வொர்க் பண்ணியிருக்கேன். ‘பம்பரக்கண்ணாலே’, ‘முத்துக்காளை’ படங்களில் அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்திருக்கேன். மலையாளம், ஹிந்தியிலும் ஏடி-ஆ வொர்க் பண்ணியிருக்கேன். முதலில் சினிமாவில் நடிக்கணும்ங்கறதுக்காகத்தான் கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ், பாண்டியன் மாஸ்டர் கிட்ட ஃபைட் எல்லாம் கத்துகிட்டேன். அதுதான் இப்போ தலையணைப்பூக்கள் சீரியலின் சிலம்பம் சண்டைக்கும் கைகொடுத்துச்சு. கூடிய சீக்கிரம் வெளியாகப்போற ‘ரங்கூன்’ படத்திலும் நடிச்சுருக்கேன்.”

“அப்பா இசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். நீங்க நடிக்கறதுக்கு அவருடைய ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?”

“அப்பாக்கு முதலில் நான் நடிக்கறது பிடிக்கவே இல்லை. எனக்கு மியூசிக் கத்துக் கொடுப்பதுதான் அவர் ஆசை. மூணாவது படிக்கறப்போவே கீபோர்ட் கிளாஸ் அனுப்பி வைப்பார். இளையராஜா சார் பசங்களோட பேட்ச் நான். ஆனால், அவருக்கு தெரியாம அடிக்கடி நடிக்க ஓடிடுவேன். நிறைய படங்களில் ‘பேக்கிரவுண்ட் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா’  நடிச்சுருக்கேன். அங்கையும் போய் அப்பா பேர் சொல்லமாட்டேன். ‘அமர்க்களம்’ படத்தில் 50 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். அது தெரிஞ்சதும் அப்பா ரொம்ப ஃபீல் பண்ணினார். ’உனக்காக கார், வீடு எல்லாம் இருக்கு. ஆனால், நீ 50 ரூபாய் சம்பளத்துக்கு நடிக்கிறியே’னு ரொம்ப வேதனைப்பட்டார். அதுக்காகவே சினிமாவைக் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு டீசண்ட்டான சம்பளத்துக்கு சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா, அப்பவும் எனக்கு அப்பாவோட பேரை நடிப்புக்காக யூஸ் பண்ணிக்க விருப்பம் இல்லை.”

”சீரியல் உலகம் எப்படி இருந்தது? முதல் அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.”

“டிவியிலும் யாருக்கும் நான் யாரோட பிள்ளைங்கறது தெரியாது. அதனாலேயே, முதலில் குட்டி குட்டி கேரக்டர்ஸ்தான் கிடைச்சது. அப்படி போயிட்டு இருந்தப்போதான் சன் டிவியின் ‘அகல்யா’ சீரியலில் ஒரு வெயிட்டான கேரக்டர். அதில் என்னோட நடிப்பு பிடிச்சுப் போய் நிறைய சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அதுதான் என்னோட ப்ரேக்கிங் பாயிண்ட்டும் கூட. அதுக்கப்புறம், ‘ஆனந்தம்’ சீரியலில் ஸ்ரீப்ரியா மேடம்கூட காம்பினேஷன் கேரக்டர். அவங்களுக்கு அப்பாவைத் தெரியும்ங்கறதால ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அப்படியே தொடர்ந்து ஹீரோவா நிறைய சீரியல் பண்ணியாச்சு. பண்ணிட்டும் இருக்கேன். கடவுளோட அனுக்கிரகம், இன்னைக்கு எனக்குனு டிவியில் ஒரு இடம் இருக்கு.”

“ரொம்ப அலட்டலே இல்லாதவரா இருக்கீங்க. எப்படி இது சாத்தியமாச்சு?”

“ஒரு பாரம்பரியமான சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் இந்த இடத்துக்கு வர்றதுக்கு  நிறைய கஷ்டப்பட்டுருக்கேன்.  அதனாலேயே, ஒரு தயாரிப்பாளர், இயக்குநரோட கஷ்டம் என்னனு தெரியும். நிறைய டேக் வாங்கக் கூடாது, ப்ராம்ப்ட் வாங்கக் கூடாது, டெக்னீஷியன்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறதெல்லாம் நடிக்க ஆரம்பிக்கும்போதே முடிவு பண்ணிட்டேன். அது அப்படியே பழக்கமாகி, ரொம்ப அமைதியான மனுஷனா என்னை மாத்திடுச்சு.”

“ஸ்ரீயோடது காதல் கல்யாணம். அதுவும் அவங்களும் ஒரு ஹீரோயின். லவ் ஸ்டோரி ப்ளீஸ்?”

“சிவசக்தி சீரியலில் ஷமிதா நடிச்சப்போ, நான் அவங்களோட பிரதரா நடிச்சேன். ‘பாண்டவர் பூமி’ல ஹீரோயினா நடிச்ச பொண்ணுப்பா, பார்த்து நடினுலாம் பயமுறுத்தினாங்க. கொஞ்சம் பந்தாவான பொண்ணா இருக்கும்னு நினைச்சேன். ஆனால், அவங்க அதுக்கு உல்டாவா ரொம்ப அடக்கமான பொண்ணா இருந்தாங்க. பந்தாவே இல்லை. எனக்கு லவ் எல்லாம் பண்ணத்தெரியாது. அதனால, நேரடியா கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டேன். அப்பாக்கும் அவங்களை ரொம்பப் பிடிச்சிடுச்சு. இப்போ ரெஹானானு ஒரு குட்டிப் பொண்ணு, அவதான் எங்களோட மிகப்பெரிய காதல் பரிசு.”

“திருமணத்துக்கப்புறமும் இரண்டு பேரும் நடிச்சுட்டு இருக்கீங்க. அதனால் பிரச்னை வந்துருக்கா?”

“கண்டிப்பா கிடையாது. நடிப்பு ரெண்டு பேருக்குமே வேலை. வீட்டுக்குள்ள சினிமாவோ, சீரியலோ வராது. ஆனால்,வெளில அவங்கவங்க வேலையில் பிசி. அதே மாதிரி ஒருத்தரோட நடிப்பில் இன்னொருத்தர் தலையிட மாட்டோம். இதுவரை என்னோட சம்பளம் எவ்வளவுன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்க எவ்ளோ வாங்குறாங்கனு எனக்குத் தெரியாது. அதுதான் நல்ல குடும்ப வாழ்க்கைக்கும் அழகு.”

“தலையணைப்பூக்களில் மெட்ராஸ் பாஷை. பேசறதுக்கு கஷ்டமா இருந்ததா?”

“அந்த முடிவையே நான்தான் எடுத்தேன். சீரியல் பொறுத்தவரை ‘மிடில் க்ளாஸ்’ மக்கள்தான் அதிகளவில் ரசிகர்களா இருப்பாங்க. அந்த செட் ஆப் ஆடியன்ஸையும் ரசிக்க வைக்கணும்னுதான் மெட்ராஸ் பாஷையைக் கையிலெடுத்தேன். அவங்கதான் உண்மையா பாராட்டுவாங்க. அந்த பாராட்டுக்காகவே எந்த எக்ஸ்ட்ரீம் கேரக்டரிலும் நடிக்க நான் ரெடி.”

“நீங்க நடிச்சதில் எது உங்களுக்கு பிடிச்ச கேரக்டர். படிக்காத பையன், படிச்ச பிசினஸ்மேன்?”

“உண்மையை சொல்லட்டுமா? எனக்குப் படிக்காத பையனா நடிக்கறதுதான் ரொம்ப பிடிக்கும். சன் டிவில ‘உறவுகள்’ சீரியலில் அப்படித்தான் நடிச்சுருப்பேன். சீரியலைப் பொறுத்தவரை அது எப்பவும் பெண்கள் சார்ந்த ஒரு துறை. ஆனால், அதைத் தாண்டி ஒரு ஹீரோ மேல முழுக்கதையும் ட்ராவல் ஆன சீரியல்னா அது ‘உறவுகள்’தான். படிக்காத ஒரு பையன், வாழ்க்கையில் போராடி எப்படி முன்னுக்கு வரான்ங்கிற அந்த சீரியல் கேரக்டர் ‘கிருஷ்ணா’வை என்னைக்கும் என்னால மறக்க முடியாது”, என்று பேட்டியை முடிக்கப் போனவர் ‘இன்னும் ஒரு விஷயம் சொல்லவா?’ என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்தார். “சினிமா தாண்டி, டிவி உலகிலும் நிறைய திறமையான கலைஞர்கள் இருக்காங்க. எனக்கு ஒரு ராஜ்குமார், அட்லீ சினிமா எண்ட்ரிக்கு கிடைச்ச மாதிரி, மத்த இயக்குநர்களும் டிவி உலக நடிகர்களோட திறமையைக் கையிலெடுத்துக்கணும்” என்று ஆழமான ஒரு மெசேஜூடன் முடித்தார். 

-பா.விஜயலட்சுமி