Published:Updated:

'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..!?’ வேதவள்ளி சொல்லும் கதை

முத்து பகவத்
'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..!?’ வேதவள்ளி சொல்லும் கதை
'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..!?’ வேதவள்ளி சொல்லும் கதை

இனி ‘பிரேக்கிங் நியூஸ்' என்று டிவி சேனல்களில் வந்தாலே தெறித்து ஓடிவிடுவோம் போல. அந்த அளவிற்கு பிரேக்கிங்குகளால் ப்ரேக்காகிப்போய் கிடக்கிறது தமிழகம். புதியதலைமுறை சேனலில் பிரேக்கிங் செய்திகளை வாசித்த நியூஸ் ரீடர்களில் ஒருவர் வேதவள்ளி.

புதியதலைமுறை சேனலில் ஜூனியர் பொண்ணு.  நியூ என்ட்ரி என்றாலும் செய்திகளில் நேர்த்தியும் தெளிவுமாக செய்திகளை வழங்குகிறார். படித்தது இன்ஜினியரிங் என்றாலும், மீடியாவில் ஜெயிக்கவேண்டும் என்பதே இவருக்கு லட்சியம். கிராமத்திலிருந்து வந்திருந்தாலும், மண்வாசனை மறக்காத சென்னை தமிழச்சி. கேள்வி கேட்கும் முன்பே பேசத்தொடங்கிவிட்டார் செய்தி வாசிப்பாளர் வேதவள்ளி. 

“திருப்பத்தூர்தான் எனக்கு சொந்த ஊர், ஸ்கூல், காலேஜ்னு எல்லாத்திலுமே டாப்பர். அதுனால கல்லூரி படிக்கும் போதே கேம்பஸில் வேலை கிடைச்சிடுச்சு. கோயம்புத்தூர்ல வேலை. கம்ப்யூட்டர் முன்னாடி டொக்குடொக்குனு தட்டிட்டு இருக்கும் போது தான், மண்டைகுள்ள பல்பு எரிஞ்சுச்சி. இது நமக்கான துறை இல்லைனு பட்டுச்சு. உடனே வேலைய விட்டுட்டு ஊருக்கே திரும்பி வந்துட்டேன். 

சின்ன வயசுல இருந்தே மீடியா மேல ஆர்வம். அதுனால லோக்கல் சேனல்ல வீஜே-வா வேலை பார்த்தேன். செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு மனசுக்குள்ள பட்சி கத்திட்டே இருந்துச்சு.  ‘டைம் டூ லீட்’னு ஸ்டேட்டஸைத் தட்டிவிட்டுட்டு சென்னை வந்துட்டேன். முதல் இன்டர்வ்யூ புதியதலைமுறை சேனல்ல...  என்னோட சேர்த்து 200 பேர் வந்துருந்தாங்க. அந்த கூட்டத்தைப் பார்த்ததுமே, கண்டிப்பா நமக்கு வேலை கிடைக்காதுனு நினைச்சேன். ஆனா And the Winner is-னு என்ன தான் தேர்ந்தெடுத்தாங்க. அப்போ தான் வேதவள்ளி செம ஹேப்பி. ! 

செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு ஆசை மட்டும் தான் இருந்தது. ஆனா என்னவேலை, அதற்கான முக்கியத்துவம் என்ன, அரசியல் முதல் சமூக நடப்பு வரைக்கும் முழுமையா சொல்லித்தந்தது புதியதலைமுறை சேனல் தான். 

எங்க வீட்ல எல்லாருக்கும் இந்நேரம் என் அன்பைக் கொட்டிக்கறேன்.  ‘ஸ்கூல் படிக்கும் போது, டிகிரி முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்க’னு சொன்னாங்க. நான் இன்ஜினியரிங் தான் படிப்பேன்னு அடம்பிடிச்சேன். அப்போ இன்ஜினியரிங் முடிச்சிட்டு திருமணம் பண்ணச் சொன்னாங்க, நான் மீடியா தான் போவேன்னு சொன்னேன். எந்த எதிர்ப்பும் இல்லை. உடனே ஓகே சொல்லிட்டாங்க.  வீட்டுல நான் வச்சது தான் சட்டம். ஒட்டுமொத்த ஃபேமிலிக்குமே நான் தான் செல்லப்பொண்ணு. என்கிட்ட கேட்காம எதையுமே செய்யமாட்டாங்க. நான் சொல்றத அவங்க கேட்காம விடமாட்டாங்க. ஐ.. பஞ்ச் நல்லாருக்குல்ல?  

நியூஸ் ஸ்க்ரோலிங் ஓடும், அதை அப்படியே பார்த்துப் படிக்கிறது தான் வேலைன்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா அதுமட்டும் நியூஸ் ரீடரோட வேலை கிடையாது. வெறுமனே நியூஸ் மட்டும் வாசிச்சா,  அதுல ரியாலிட்டி இருக்காது. செய்தி பற்றிய சென்ஸ் ரொம்ப முக்கியம்.  சினிமாவுல தொடங்கி அரசியல் வரைக்குமான அறிவும், புரிதலும் நிச்சயம் தேவை. சில நேரங்களில் எழுதிக்கொடுக்கும் செய்தில பிழை இருந்தா கூட ஈஸியா கண்டுபிடிக்கவும் உதவும்; தப்பில்லாம செய்தியை வழங்கவும் முடியும். மொத்தத்துல நியூஸ் படிக்கிறது மட்டுமில்லாம, உள்வாங்குற திறமையும் இருக்கணும். 

பிரேக்கிங் செய்திக்கு ஸ்கிரிப்ட் ரெடியாகறவரைக்கும் காத்துக்கிட்டு இருக்கமுடியாது. அந்த சமயங்களில் நாமே தான் பிரேக் பண்ணவேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாம, களத்தில் இருக்கும் நிருபர்களிடம் பேசும்போது, அந்தப் பிரச்னை சார்ந்த புரிதல் இருந்தாதானே கேள்வி கேட்கவும் முடியும். அதுனால நியூஸ் ரீடர்னா சும்மா இல்ல பாஸ். அது ஒரு தவம்...  நான் ரொம்பவே என் வேலையை காதலிக்கிறேன். செய்தி வாசிப்பாளரா மட்டுமில்லாம, ஸ்பெஷல் ஸ்டோரி நிறைய பண்ணிருக்கேன்.  

எதிர்கால திட்டம் என்னென்னே தெரியாம மீடியாவுக்குள்ள வந்தேன். இனி மீடியா தான் என் எதிர்காலமா மாத்திக்கிட்டேன். எங்க அலுவலகத்திலேயே நான் தான் ரொம்ப சின்ன பொண்ணு. எனக்கு பலமே என்னுடைய அலுவலக நண்பர்கள் தான். எதிர்காலத்துல நிறைய விவாத நிகழ்ச்சிகளை நடத்தணும்னு ஆசை. அதுக்கு இன்னும் நிறைய கத்துக்கணும்... நிறைய உழைக்கணும்... சமூக  அக்கறையுடன் பொறுப்பான செய்தியாளரா இருப்பேன்” என்று முகமலர்ச்சியுடன் பேசுகிறார் வேதவள்ளி. 

ஆல் தி பெஸ்ட் ...! 

-முத்து பகவத்-