Published:Updated:

“ஹன்சிகா முதல் அவிகா வரை” - ஹீரோயின்களான டிவி உலகின் குட்டி நட்சத்திரங்கள்...!

“ஹன்சிகா முதல் அவிகா வரை” - ஹீரோயின்களான டிவி உலகின் குட்டி நட்சத்திரங்கள்...!
“ஹன்சிகா முதல் அவிகா வரை” - ஹீரோயின்களான டிவி உலகின் குட்டி நட்சத்திரங்கள்...!

“ஹன்சிகா முதல் அவிகா வரை” - ஹீரோயின்களான டிவி உலகின் குட்டி நட்சத்திரங்கள்...!

டிவி உலகில் பெரியவர்களை விட அதிகம் ஆட்சி புரிவது குழந்தைகள்தான். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஆறு மணிக்கு மேல் ரிமோட் கண்டிப்பாக பெரியவர்கள் கையில் இருக்காது. கார்ட்டூன், குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சீரியல்கள் என குட்டீஸ் ரொம்ப பிசி. குழந்தைகளாக டிவி நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்ப்பது மட்டுமின்றி, சீரியல்களில் வெற்றிகரமான நடிப்பை பள்ளி வயதிலேயே குட்டி நட்சத்திரங்கள் ஆக கொட்டியிருக்கிறார்கள் பல சின்னஞ்சிறு ஹீரோயின்ஸ். அதில் 90 களில் இருந்து தற்போது வரை குட்டிச்சுட்டிகளின் மனம்கவர்ந்த சைல்ட் ஸ்டார்ஸ் டேட்டா இது...!

மண்வாசனை அவிகா கோர் :

இந்தி ‘பல்லிகா வது’ சீரியலில் இருந்து டப் செய்யப்பட்டு, ராஜ் டிவியில் ஒளிப்பரப்பான மண்வாசனை சீரியலை அவிகா கோருக்காகவே பார்த்தவர்கள் நிறைய பேர். குட்டியாக, நெற்றியில் இரு புருவங்களும் ஒன்றிணைந்து, மொழுமொழுவென்ற ராஜஸ்தானி உடையணிந்த அவிகா கோர், அழகுக் குட்டியாக எல்லாருக்கும் பிடித்துப் போனார். கொஞ்சம் வளர்ந்ததும் ‘முந்தானை முடிச்சு’ சீரியல் மூலமாக ஹீரோயின் அவதாரம். தற்போது வரிசையாக அவிகா கையில் பல படங்கள். அவிகா இப்போது இருபது வயதில் அடியெடுத்து வைக்கப் போகும் அழகுப் பெண்.

ஷக்கலக்க பூம்பூம் ஹன்சிகா:

’ஷக்கலக்க பூம் பூம்’ மாயாஜாலத் தொடரில் மந்திரப் பென்சிலை வைத்திருக்கும் சஞ்சுவின் தோழியாக வருவாரே கருணா அந்த முன்பக்கத் தலைமுடியை ப்ரின்ஸஸ் கட் செய்திருக்கும் பெண்குழந்தையை நினைவிருக்கிறதா? மறந்து போனவர்கள் ‘போகன்’ படத்தைப் பார்த்து நினைவூட்டிக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தை யாருமில்லை நம்முடைய ஹன்சிகா மோத்வானியேதான். இன்று இருபத்தைந்து வயது அழகுப் பதுமையாக, ஹீரோயினாக வலம்வரும் ஹன்சிகாவிற்கு, ஷக்கலக்க பூம் பூம் சீரியலில் நடிக்கும்போது வயது 11.

சிவமயம் நிவேதா தாமஸ்:

இந்திரா சவுந்திரராஜனின் கதையில், சிவன்மலையை மையமாகக் கொண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சிவமயம் தொடரில் பொன்னி என்னும் அருள்வாக்கு சொல்லும் சுட்டிப் பெண்ணாக நடித்தவர் நிவேதா தாமஸ். அரசி, மைடியர் பூதம் என்று மொத்தம் மூன்று சீரியல்களில் குட்டிப் பெண்ணாக தலைகாட்டியவர், தமிழில் போராளி, அதன் பிறகு ஜெய்யுடன் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்று ஹீரோயின் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து பிக் ஸ்கீரினில் ஹீரோயினாக பரிமளிக்கும் நிவேதா தாமஸ், ஹன்சிகாவை விட நான்கு வயது சிறியவர். 

வேலன் பிரகர்ஷிதா:

சன் டிவியில்‘வேலன்’ சீரியல் ஒளிப்பரப்பானபோது இந்த குட்டி முருகனுக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தி. பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்று கணிக்க முடியாத அளவிற்கு பேச்சிலும், நடிப்பிலும் அத்தனை பேரையும் அன்பால் அள்ளிக் கொண்டிருப்பார் பிரகர்ஷிதா.  நடிப்பில் எல்லோருக்கும் ஈடுகொடுத்த  இந்தக் குட்டிப் புயல், அதன்பிறகு தொடர்ந்து ‘ராஜராஜேஷ்வரி’ தொடரிலும் அம்மன் அவதாரமெடுத்தார். மேடம் இப்போ எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஸ்டூடண்ட். சினிமாவில் ஹீரோயினாகத் தலைகாட்டாவிட்டாலும், சினி ஃபீல்டில் ஒரு சிறந்த இயக்குனராவதுதான் பிரகர்ஷிதாவின் கனவாம்.

இந்த வரிசையில் தற்போது ‘வாணி ராணி’ மேகா, ‘நீலி’ சவி, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ நிவாஷினி என்று நிறைய குட்டி நட்சத்திரங்கள் இடம்பிடித்திருக்கின்றனர். யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் ஹன்சிகா போல நயன்தாரா, தமன்னாவுக்கே சவால்விடும் ஹீரோயின்களாய் இந்த சுட்டீஸ்களும் மின்னலாம்!

- பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு