Published:Updated:

”கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்!” - ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம்

”கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்!” - ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம்
”கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்!” - ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம்

டிவியை ஆன் செய்தாலே இன்றைக்கான ப்ரேக்கிங் என்னென்னு தான் முதல்ல பார்க்கத்தோணுது. அந்த அளவிற்கு ஆறேழு மாதமாக  தினம் தினம் அதிர்ச்சிகர சம்பவங்களும், அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டது. நாம் வீட்டிலேயே ‘லைவ்’வாக செய்திகளைப் பார்த்துவிடுகிறோம். ஆனா செய்தியை கொடுத்த நிருபர்கள் பெற்றதும் இழந்ததும் அதிகம். இந்த ஆறுமாத ப்ரேக்கிங்கில் நிருபர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அவர்களின் வார்த்தைகளில்.....

ஸ்டாலின் (புதியதலைமுறை):

“ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி இப்போ வரைக்கும் ப்ரேக்கிங் நியூஸ் தான். இந்த ஆறு மாசமும் வேலை தவிர வேற எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை. ஜெயலலிதா அட்மிட், ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஓ.பன்னீர்செல்வம் தியானம், சசிகலா தீர்ப்பு, அதற்குப் பின்னான அரசியல் மாற்றம்னு எல்லா விஷயங்களையும் மக்களிடம் கொண்டுபோனதுல நிறைய அனுபவங்கள். அ.தி.மு.க., தலைமைச்செயலகம் பகுதிக்கான செய்திகளை கவனிச்சுக்கிட்டு இருக்கேன். அதுனால எனக்கான பொறுப்பு அதிகமாவே இருந்துச்சு. டிசம்பர் 5ம் தேதி 11.30க்கு ஜெயலலிதா மரணங்கிற செய்தியை அதிகாரப்பூர்வமா 12.10க்கு பிரேக் பண்ணினேன். அதுமட்டுமில்லாம என் வேலைக்கான முழுமையான அங்கீகாரத்தை சேனலும் கொடுத்துச்சு. ஒவ்வொரு செய்தியிலயும் என்னோட பங்கும் இருக்கணுங்குறதுல கவனமா இருந்தாங்க. இந்த மாதிரியான நிகழ்வுகள்ல அனுபவம் மட்டுமன்றி, ஒரு நிருபருக்கான சந்தோஷமும் அடங்கியிருக்கு.

எனக்குள்ள அரசியல் ஆர்வம் வந்ததுக்கு என் அப்பா தான் காரணம். அங்க தொடங்கிய ஆர்வத்தை புதியதலைமுறை வளர்த்துச்சு. அதற்கான சரியான தீனிதான் இந்த ஆறுமாசம். 27 வருடம் நான் கத்துக்காததை இந்த ஆறு மாசம் சொல்லிக்கொடுத்துடுச்சு. அதுமட்டுமில்லாம விகடன் மாணவ பத்திரிகையாளரா வேலையில இருந்த நேரம் கத்துக்கிட்ட விஷயங்கள் நிறையவே இங்க கைக்கொடுத்திருக்கு. தூக்கத்துல எழுப்பிக்  கேட்டாக் கூட இந்த ஆறுமாசம் நடந்ததை அப்படியே சொல்லுவேன். டிசம்பர் 5 (ஜெ.மரணம்), டிசம்பர் 12 (வர்தா புயல்), பிப்ரவரி 7 (ஓபிஎஸ் தியானம்) மறக்கமுடியாத நாட்கள்.  இந்த நாட்களில் இரவும் பகலுமா வேலை பார்த்திருக்கேன். அதுமட்டுமில்லாம சில லைவ்க்கு போகலைனு கூட ஃபீல் பண்ணிருக்கேன். குறிப்பா ஓபிஎஸ் தியானம் பண்ணப்போறார்னு அவருக்கு மட்டும் தான் தெரியும். பொதுவாழ்க்கையிலிருந்து விலகிடுவார்னு எல்லோருமே நினைச்சோம், ஆனா அந்த 40 நிமிடமும் எல்லா மீடியாவும் வரணும்னு டைம் கொடுத்தார். அதை விஷூவலா ப்ரேக் பண்ணினேன். என் கூட இருந்த மற்ற ரிப்போர்ட்டர்ஸ், கேமராமேன்களின் உழைப்பும் ரொம்ப பெரிசு. பல வருடத்துக்கு அப்புறம் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கு. அதில் நாங்களும் இருந்திருக்கோங்குறது நிச்சயம் பெரிய பொக்கிஷத் தருணங்கள். எங்களையும் வரலாறு பேசும் பாஸ். 1988க்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை பார்த்த தலைமுறையும் நாம தான். அந்த பெருமையே போதும். பெயரும் புகழும் முக்கியமில்லை. ஆனா நம்ம பெயர் நாலு பேருக்காவது தெரிஞ்சுருக்கணும் அவ்வளவு தான்.’’

சாரதா (நியூஸ் 18):

“ஆறுமாசத்துக்கு முன்னாடி எங்களுக்குப் பிடிச்ச செய்தியா தேடி கவர்ஸ்டோரி பண்ணுவோம். லைவ் கொஞ்சம் குறைவா இருக்கும். ஆனா இந்த ஆறு மாசமும் நியூஸைத் தேடி நாங்க போகலை. நியூஸ் தான் எங்களை இழுத்துட்டுப் போச்சு. வாக்கெடுப்புக்கு முந்தையநாள், கனவுல, ஓபிஎஸ் அணியிலிருந்து இரண்டு பேர் இபிஎஸ் அணிக்குப் போகுறமாதிரி தோணுது. கணக்கு மாறிப்போச்சேனு பதறி எந்திச்சா மணி 3.45 தான் ஆகுது. அப்புறம் அடுத்த நாள் சட்டசபையில வாக்கெடுப்பு முடிஞ்சதும் ப்ரேக்கிங் ஓவர்னு நினைச்சா, ஸ்டாலின் நடுரோட்டுல பேட்டி கொடுக்குறார். அப்படியே பரபரனு செய்திகள் தொடர்ந்துடுச்சு. ப்ரேக்கிங் தவிர, செய்திகள் சார்ந்து யாரெல்லாம் பேசலயோ அவங்களைத் தேடிப் பேட்டி எடுக்கறது சவாலா இருந்துச்சு. எங்களை விட அதிகமா கஷ்டப்பட்டது கேமராமேன். எல்லா சேனலுமே லைவ் பண்ணும் போது கண்டிப்பா டவர் பிரச்னைகள் வரும். அதுமட்டுமில்லாம திடீர்னு ரிசீவர் வேலை செய்யாது. இந்த மாதிரியான  டெக்னிக்கல் பிரச்னையெல்லாம் சரி செய்றது ரொம்பவே சவால். ரிப்போர்ட்டரோட வேலையை விட ரொம்ப முக்கியமானது கேமராமேனோட வேலை தானே. மொத்தத்துல ‘பாம் டிஃபியூஸ்’ பண்ணுறமாதிரியான பதற்றமான நாட்களாகத்தான் இந்த ஆறுமாசமும் போச்சு. ஆனா ரொம்ப சுவாரஸ்யமா, சவாலா இருந்துச்சு. கான்வாய் பின் தொடர்வதுல இருந்து, நேரலைக்கான விஷயம் வரைக்கும் திட்டமிட்டு செயல்படுத்தினேன். காலையில கிளம்பினா இரவுதான்  வீட்டுக்கு வருவேன். வீட்டுல திட்டிட்டு தான் இருப்பாங்க. ஆனா இந்த வேலையில் கிடைக்கும் சந்தோஷம் எல்லாத்தையுமே தவிடுபொடியாக்கிடும். இப்போல்லாம் ஆபீஸ்தான் பேமிலியா மாறிடுச்சு. ரொம்ப நாள் கழிச்சி நேத்துதான் என் ஆபீஸ் நண்பர்களோட டீ சாப்டேன். ஃபீல் ஹேப்பி.”

சரவணன் (பாலிமர் டிவி):

“சீரியல், சினிமா நிகழ்ச்சிகள் பார்க்கற மாதிரி மக்கள் நியூஸ் சேனல் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சது இந்த ஆறு மாசத்துலதான். ப்ரேக்கிங் நியூஸ்காக ஓடறதுனால மன பதற்றம் அதிகமாகிடுச்சு. நாங்க அதிகமா பாதிக்கப்பட்டதே சோஷியல் நெட் ஒர்க்குனால தான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, திடீர்னு ஒரு செய்தி, வாட்ஸ் அப்ல பரவும். அந்த செய்தியை வதந்தினு நிரூபிக்கவே நிறைய உழைக்கவேண்டி இருந்துச்சு. எடுத்துக்காட்டுக்கு ஒண்ணு சொல்றேன்... ‘பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருத்தர் இறந்துட்டார்னு செய்தி பரவ ஆரம்பிச்சிடுச்சு. யார்னு விசாரிச்சு செய்தியை உண்மையில்லைனு உறுதிப்படுத்துனேன். தொடர்ந்து லைவ்ல இருக்குறதுனால சாப்பிடவோ, தண்ணி குடிக்கவோகூட நேரம் இருக்காது. அதனால உடல்நிலை ரொம்பவே மோசமாகிடுச்சு. இருந்தாலும் நிறைய அனுபவங்கள். கத்துக்க சரியான தளமா இந்த நாட்கள் இருந்துச்சு. வேலை நேரத்துல பர்சனல் போன்களை எடுக்கமாட்டேன். இதுனால வீட்டுல சண்டை, நிறைய நண்பர்களை இழந்துட்டேன்னு கூட சொல்லலாம். ஒவ்வொரு செய்திக்கும் ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. ஏதும் தப்பான செய்தினா உடனே ஆபீஸூக்கு போன் பண்ணி மக்கள் திட்டக்கூட செய்வாங்க. ஆடியன்ஸ் என்ன எதிர்பார்க்கறாங்கனு, தெரிஞ்சு செய்தி கொடுக்கவேண்டி இருந்துச்சு. ஏதாவது ஒண்ணு தப்புனா கூட இவ்வளவு நாள் உழைப்பும் தவிடுபொடியாகிடுங்கறதுனால ரொம்ப கவனமா இருந்தேன். அரசியல் மாற்றம் நிகழ்ந்துட்டிருக்கறப்பதான் ஹாசினி சம்பவமும் நடந்துச்சு.  இந்த மாதிரியான சமுக பொறுப்புணர்ச்சியுடனான செய்திகளையும் ஒளிபரப்பத் தவறமாட்டோம். எல்லா சேனல் ரிப்போர்ட்டர்களுமே நட்பா தான் இருப்போம். ஆனாலும் நட்பும் தொழிலும் வேற தானே. முதல் ப்ரேக்கிங் நம்ம தான் கொடுக்கணும்கற  எண்ணம் எல்லா நிருபருக்குமே இருக்கும். எந்தச் செய்தியையுமே மிஸ் பண்ணிடக்கூடாது. அதுவே பெரிய சவால்தான்.. இல்லையா?  ரெண்டு நாளா  எந்த ப்ரேக்கிங்கும் இல்லாம அமைதியா இருக்கு. அமைதியா இருக்குறதுமே அடுத்த ப்ரேக்கிங்குக்குத்தானோனு தோணுது.’’

லாவண்யா (நியூஸ் 7):

ப்ரேக்கிங் நேரத்தில் ரொம்பவே டென்ஷனா இருக்கும். ஏன்னா எந்தச் செய்தியையும் மிஸ் பண்ணிடக்கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். எல்லா நிருபருக்குமே ‘சோர்ஸ்’ இருக்கும். நமக்கான செய்தி உண்மைதானானு நாலு பேரிடம் விசாரிச்சுட்டுத்தான் நியூஸ் லைவ்லயே சொல்லுவேன். தவிர, மற்ற செய்திகளை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு தான் ப்ரேக் பண்ணுவோம். என்னைக்குமே நேரலையில்  ‘இருக்கலாம்... நடக்கலாம்...’னு சொல்ல முடியாது. எந்த செய்தியா இருந்தாலும் உறுதிப்படுத்தணும்னுதான் மக்கள் விரும்புவாங்க. நமக்கான செய்தி கிடைக்கிறவரைக்கும் காத்திருக்கணும். ஒவ்வொரு நாளும் தூக்கத்துல அரசியல் விஷயங்களை இப்போ உளற ஆரம்பிச்சிட்டேன். ஆறுமாசம் சரியா தூங்காததுனால இப்போல்லாம் தூக்கமே வரதில்லை. அதுமட்டுமில்லாம எந்தக் குடும்ப நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கமுடியலை. நான் மைக்க தூக்கிட்டு எங்கனாலும் போய்டுவேன். ஆனா கேமராவையும் தூக்கிட்டு நியூஸூக்காக கேமரா மேன் ஓட வேண்டியிருக்கும். பாதியிலயே சாப்பாட வச்சிட்டு கேமிராவ தூக்கிட்டு வருவாங்க. அவங்க தான் நிஜ ஹீரோ. மொத்தத்துல ரோபோ மாதிரி தான் வேலை பார்க்கணும். ஆனாலும் அந்த நாட்கள்ல நிறையவே கத்துக்கவும் முடிஞ்சது. இதுக்கெல்லாம் முழு ஆதரவா எங்க ஆபீஸ்ல இருந்தாங்க. செட்ல உட்கார்ந்து, பதறாம ப்ரேக்கிங் நியூஸ் வாசிக்கறதும் சவால்தானே!  தெரிஞ்சவங்களைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போனா கூட, இங்கயும் ப்ரேக்கிங்கானு  கேட்பாங்க. இருந்தாலும் ஐ லவ் மை ஜாப்.  இன்னும் எத்தனை ப்ரேக்கிங்னாலும் நாங்க ரெடி.’’

-முத்து பகவத்-