Published:Updated:

‘படையெடுக்கும் பாம்புகள்’ - இது டிவி சீரியல் நாகங்களின் ஸ்டோரி!

டிவி சீரியல்களில் இது பாம்புகள் படையெடுக்கும் காலம். நாகினி கிளப்பிவிட்ட ‘ட்ரெண்ட்’ பற்றி எரிகிறது. விஷத்தைக் கக்கும் நாகங்கள் முதல், இச்சாதாரி நாகங்கள், கடவுள் நாகங்கள் என்று பாம்புகளின் எண்ணிக்கை புற்றுகளைவிட டிவி சேனல்களில் அதிகம். தமிழில் மட்டுமில்லாமல், இந்த ஸ்நேக் ஃபீவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எல்லா சேனல்களிலும் இப்போதைய ஹாட் ப்ராண்டிங். டி.ஆர் வாய்ஸில் இது அசத்தல் நாகினி, அஞ்சாத நாகினி, பெண் சிங்கம் நாகினி என்று டிவி உலகம் பாம்புகளுக்குப் புகழ் பாடாத குறைதான். இப்போதைய சீரியல் பாக்ஸ் ஆபிசில், டி.ஆர்.பி ஹிட் அடிக்கும் பாம்பு சீரியல்கள் இங்கே உங்களுக்காகப் படமெடுக்கின்றன.

நாகினி:

இந்தியில் ‘நாகின்’ என்ற பெயரில் ரவுண்டு கட்டி கலக்கிய பாம்பு சீரியல் இது. தமிழில் ‘நாகினி’ என்று டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிரப்பானது. இந்த சீரியலின் கதாநாயகி ஷிவன்யாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள். நாகமணியை உமிழும் இச்சாதாரி நாகங்களின் கதை. பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க வரும் நாகினியான ஷிவன்யா, அக்குடும்பத்திலேயே வாழ்க்கைப்பட்டு ஹீரோவுக்கு மனைவியாகி விடுகிறார். பெற்றோரைக் கொன்றவர்களை ஷிவன்யா கண்டுபிடித்தாரா? நாகமணி என்னவானது என்பதெல்லாம் மீதிக்கதையாக திரையில் விரிந்தது. தமிழில் கடந்த மாதம் முடிவடைந்த இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போது இந்தியில் மீண்டும் வைரல். 

நாகராணி:

இதுவும் நாகினியின் அதே கதைதான். நாகராணியின் பெற்றோரான நாகர் குல அரசரையும்  அரசியையும் ஒரு கும்பல் நாகமணிக்கு ஆசைப்பட்டுக் கொன்றுவிடுகிறது. அதைக் கண்டறிந்து நாகமணியைத் தேடிப் புறப்படும் ஹீரோயின், ஹீரோவின் காதல் வலையில் சிக்கி, அவரை மணம்புரிந்து கொள்கிறார். மீதிக்கதை சின்னத்திரையில். ‘ஜி தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் ஒரிஜினல் வெர்ஷன் கன்னடத்தின் நாகினி சீரியல். இதிலும் பாம்பாக வளைந்து நெளியும் ஹீரோயின் கிட்டதட்ட இந்தி நாகினியைப்போலவே அவ்வளவு அழகு. 

ப்ரியமுடன் நாகினி: 

இந்தியில் ‘இச்சா பியாரி நாகினி’தான் தமிழில் 'ப்ரியமுடன் நாகினி'யாக உருவெடுத்துள்ளது. மற்ற நாகினிகள் எல்லாம் பழிவாங்கத் துடிக்கும் பயங்கர பாம்புகள் என்றால், இதுவோ படுஜாலியான பெண் நாகம். ‘இச்சா’ எனும் பெயர் கொண்ட நாககுலத்தைச் சேர்ந்த ஒருத்தி, மனிதர்களிடையே நிலவும் பாம்புகள் குறித்த பயத்தை மாற்றி நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆசையுடன் பூமிக்கு வருவதுதான் கதை. டிவி சீரியல் பார்த்து ‘என்னப்பா, எப்போ பாரு நம்மளை கொடுமைக்காரங்களாவே காட்டறாங்க?’ என்று பாம்புக் குடும்பமே 'ஓ'வென்று கதறுவது ஹைலைட்டோ ஹைலைட்.

நந்தினி, கங்கா:

நாகினிக்குப் பிறகு ‘சன் டிவி’ லிஸ்ட்டில் புதிதாக இடம்பிடித்துள்ள அமானுஷ்ய சீரியல் நந்தினி. ஒரு குடும்பத்தையும், குழந்தை ஒன்றையும், மூன்று பெண்களையும் சுற்றிச் சுழலும் இக்கதையிலும் பாம்பு உண்டு. பழிவாங்குதல் படலமும் உண்டு. நாகினி வெற்றியைத் தொடர்ந்து சன் நெட்வொர்க்கின் சொந்தத் தயாரிப்பு இது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று ஒரே நேரத்தில் எல்லா மொழிகளிலும் நந்தினி மாஸ் ஹிட். அதேபோன்று, மாலை வேளையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கங்கா என்னும் அமானுஷ்ய சீரியலிலும் காவல் தெய்வம் ஒரு பாம்புதான். 

நீலி:

விஜய் டிவியின் ‘நீலி’ தொடரிலும் சுற்றிவருகிறது ஒரு மஞ்சள் நிறப்பாம்பு. தனது குழந்தையை சித்தியிடமிருந்தும், கெட்ட சக்திகளிடமிருந்தும் காப்பாற்ற ஒரு பொம்மைக்குள் புகுந்து கொள்ளும் தாயின் ஆவியையும், அக்குழந்தையையும் பின் தொடரும் பாம்பின் மர்மம்... கதையைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

புன்னகா:

தெலுங்கில் பாம்பினக் கதை பேசும் சீரியல் இது. நாக வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும், கருட வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் இக்காலகட்டத்திலும் தீராப்பகை. அதே நேரத்தில் நகரத்தில் படித்துவிட்டு வருகிற கருட இனத்தைச் சேர்ந்த ஹீரோவுக்கு, நாக இனத்தைச் சேர்ந்த புன்னகா என்னும் பெண்ணின் மீது காதல். இவர்கள் காதல் கைகூடியதா? தீரா நெடும்பகை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
 
மஞ்சள் பிரசாதம்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளையும் பாம்புகள் பேசிக் கொண்டிருக்க, மலையாளக்கரையோரமும் கதை பறைகிறது ஒரு பாம்பு. அது, ‘மஞ்சள் பிரசாதம்’ சீரியல். சர்ப்ப காவு, நாகங்களைத் தெய்வமாக வணங்கும் பகுதி. அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருத்தி, நகரத்தில் படித்து, வளர்ந்ததால் அக்கதைகளை நம்ப மறுக்கிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளும், பாம்பும்தான் மஞ்சள் பிரசாதம். 

ஹைடெக்காக உலகம் மாறிக்கொண்டிருந்தாலும், பாரம்பரியக் கருத்துகளுக்கும், நம்மைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து கிடக்கின்ற மர்மக்கதைகளுக்கும் மவுசு ஜாஸ்திதான் என்பதை நிரூபிக்கின்றன இந்தப் பாம்புக் கதைகள்!

- பா.விஜயலட்சுமி