Published:Updated:

அஜித்தின் 'அவள் வருவாளா'வுக்கும் 'நந்தினி' சீரியலுக்கும் என்ன சம்பந்தம்? #FunToKnow

அஜித்தின் 'அவள் வருவாளா'வுக்கும்  'நந்தினி' சீரியலுக்கும் என்ன சம்பந்தம்? #FunToKnow
அஜித்தின் 'அவள் வருவாளா'வுக்கும் 'நந்தினி' சீரியலுக்கும் என்ன சம்பந்தம்? #FunToKnow

இரண்டரை மணி நேர வண்ணத்திரையாக இருந்தாலும் சரி, இரண்டாயிரம் எபிஸோட் சீரியல் சின்னத்திரையாக  இருந்தாலும் சரி... இரண்டிலும் கலக்கிய இயக்குநர்களின் லிஸ்ட் இதோ...

கே.பாலச்சந்தர் :

கே.பாலசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்களில் பெண் கதாபாத்திரங்களை  வலிமையான, சுதந்திரமான‌ பாத்திரங்களாக உருவாக்கியிருப்பார். அதேபோல, அவரது அக்மார்க் பெண் கதாபாத்திரங்களை முன்னணி பாத்திரமாக வைத்து சில சின்னத்திரை சீரியல்களையும் இயக்கினார். சன் டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, தூர்தர்ஷன் என பல சேனல்களில் அவரது நாடகங்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. ரயில் சிநேகம், காசளவு நேசம்,காதல் பகடை, சஹானா ஆகியன அவர் இயக்கிய நாடங்களில் சில. இதில் சஹானா எனும் நாடகம் அவர் இயக்கிய‌'சிந்து பைரவி' படத்தின் சீக்வல்.

பாலுமகேந்திரா :

சினிமாவிற்குள் யதார்த்தத்தை புகுத்திய மகா கலைஞன். அழியாத கோலங்கள், வீடு, ரெட்டைவால் குருவி, மூடுபனி போன்ற க்ளாஸிக் திரைப்படங்களை இயக்கியவர். முள்ளும் மலரும் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். பாலுமகேந்திரா தொலைக்காட்சியில் 'கதை நேரம்' என்ற பெயரில் குறும்படங்கள் இயக்கினார். யதார்த்த வாழ்வியலை அழகாக பேசும் அத்தனை குறும்படங்களுமே பாலு மகேந்திரா ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து.

பாரதிராஜா :

கிராமிய மணம் மணக்கும் படங்களை திரையில் காட்டிய நம் இனிய பாரதிராஜா, அதே கிராமிய பின்னணி கொண்ட நாடகங்களையும் சின்னத்திரையில் இயக்கியுள்ளார். தெக்கத்தி பொண்ணு, அப்பனும் ஆத்தாளும், முதல் மரியாதை என இதுவரை மூன்று நாடகங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் இமயம்.

கே.பாக்யராஜ் :

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர் எனப் போற்றப்படுபவர். அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய கே.பாக்யராஜ் 'விளக்கு வச்ச நேரத்துல' எனும் நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார்.

சுஹாசினி மணிரத்னம் :

நடிகை, இயக்குநர்,தயாரிப்பாளர்,எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்டவர் சுஹாசினி மணிரத்னம். அனுஹாசன், அரவிந்த்சாமி நடிப்பில் 'இந்திரா' திரைப்படத்தை இயக்கிய சுஹாசினி, 1991 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் 'பெண்' என்ற தலைப்பில் டெலி பிலிம்களும் இயக்கினார். ரேவதி,ராதிகா,அமலா,பானுப்ரியா,சரண்யா, ஷோபனா, ஜெமினி கணேசன் போன்ற பல திரைப்பிரபலங்கள் நடித்த அந்த டெலிபிலிம்களுக்கு இசையமைத்தது இளையராஜா.

ராஜ்கபூர் :

டைட்டில் விஷயத்துக்கு வருவோம். அஜித் நடிப்பில் அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜ்கபூர். இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சியில் தயாரிப்பில் உருவாகி தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'நந்தினி' தொலைக்காட்சி தொடரின் இயக்குநரும் இவர் தான். முறைமாமன், அருணாச்சலம், அரண்மனை என சுந்தர்.சி இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யு.கே.செந்தில்குமார் தான் இந்த தொலைக்காட்சி தொடருக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹிப்ஹாப் தமிழா டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

யார் கண்னன் :

ஜென்மம் எக்ஸ், ஜனனம், அனுபல்லவி நாடகமெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? அவற்றை இயக்கியது இயக்குநர் 'யார்' கண்ணன் தான். ஜென்மம் எக்ஸ் திகில் நாடத்தின் டைட்டில் பாடலில் 'ஜென்மம்...' என ஆடி பாடி சிறுவயதில் நம்மை பயமுறுத்தியதும் இவரே தான்.

நாகா :

சின்னத்திரையில் மர்மதேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் என நம்மை திகில் மோடிலேயே வைத்திருந்த இயக்குநர் நாகா தான், நந்தா-சாயாசிங் நடிப்பில் ' அனந்தபுரத்து வீடு' எனும் 'யு' சர்டிபிகேட் ஹாரர் படத்தை நமக்கு வழங்கினார்.

-ப.சூரியராஜ்
 

பின் செல்ல