Published:Updated:

இந்தியின் ’திருமதி செல்வம்’ யார் தெரியுமா? #RemakeSerials

இந்தியின் ’திருமதி செல்வம்’ யார் தெரியுமா? #RemakeSerials
இந்தியின் ’திருமதி செல்வம்’ யார் தெரியுமா? #RemakeSerials

இந்தியின் ’திருமதி செல்வம்’ யார் தெரியுமா? #RemakeSerials

சினிமா ரசிகர்களின் செல்லுலாய்ட் திரையில் மற்ற மொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கும், புத்தம்புது நடிகர்களுடன் மீண்டும் இயக்கப்படும் படங்களுக்கும் எப்படி பஞ்சமில்லையோ... அந்த தியரி சுவரில் பொருத்தப்பட்டு, நாலுக்குநாலு திரையைக் கொண்ட டிவிக்குள் இடம்பிடித்திருக்கும் சின்னத்திரைக்கும் பொருந்தும். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழ், இந்தியிலிருந்து தெலுங்கு, மலையாளத்திலிருந்து தமிழ் என்று ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக வீட்டுக்குள் இடம்பிடித்திருக்கும் சீரியல்கள் ஏராளம். மற்ற மொழிகளிலில் இருந்து கவரப்பட்டு, சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த மெகாத்தொடர்களின் ஒரு குட்டி அணிவகுப்பு இது.

ரீமேக் நம்பர் 1:

சன் டிவியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நெடுந்தொடர் ‘மெட்டி ஒலி’. சகோதரிகளாகப் பிறந்த ஐந்து பெண்களின் பாசப்பிணைப்பையும், திருமணத்துக்குப் பிறகான அவர்களது வாழ்க்கை, தந்தையின் நேசம் என அக்மார்க் குடும்ப சீரியலாக ஒளிப்பரப்பான இந்தத் தொடருக்கு குவிந்த ரசிகப் பெருமக்களும் ஜாஸ்தி. கதையின் வெற்றி, அதை அப்படியே இந்தி பேசும் நல்லுலகுக்கு கடத்திச் சென்றது சோனி டிவி. ’சுப் விவாக்’ என்னும் பெயரில் மெட்டி ஒலி ரீமேக்கப்பட்டது. இந்திக்கு ஏற்ப சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட கதையில் நடித்த நடிகர்கள், இந்தி டிவி உலகின் நட்சத்திரங்கள். அங்கும் வெற்றிகரமாக ஓடிய சீரியல், 2012 ஜூன் மாதம் முடிவடைந்தது. 

ரீமேக் நம்பர் 2:

மெட்டி ஒலி போலவே, மெகா தொடர் ரேஸில் மதிய நேரத்திலிருந்து, இரவு ப்ரைம் டைமுக்கு மாறுமளவிற்கு டி.ஆர்.பியைக் குவித்த மற்றொரு சீரியல் திருமதி செல்வம். செல்வம் என்னும் மெக்கானிக்கின் மனைவியான அர்ச்சனாவைச் சுற்றிச் சுழன்ற கதை. பாசம், அன்பு, துரோகம் என அத்தனை உணர்வுகளின் குவியலாகவும் ஒளிப்பரப்பான இந்தத் தொடர், இந்தியில் ‘பவித்ரா ரிஷ்டா’ என்றும், தெலுங்கில் ‘தேவதா’ என்றும், கன்னடத்தில் ’ஜோக்காளி’ என்றும், மலையாளத்தில் ‘நிலவிளக்கு’ என்றும் ரீமேக்கானது. எல்லாமே ரீமேக்தான். வேறுவேறு ஹீரோக்கள், வேறுவேறு ஹீரோயின்கள். இந்தியில் செல்வமாக நடித்தவர், சினிமாவில் ‘மகேந்திரசிங் தோனி’யாக கலக்கிய சுஷாந்த் சிங். அர்ச்சனாவாக  அங்கீதா என்பவர் நடித்திருந்தார். 

ரீமேக் நம்பர் 3:

சீதாவும், நித்யா தாஸூம் ஹீரோயின்களாக இணைந்து நடித்த ‘இதயம்’ சீரியலை ஞாபகமிருக்கிறதா? மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை சொன்ன இந்தத் தொடரும் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. ‘தில் சே தியா வசான்’ என்பது டைட்டில். நித்யாவுக்குப் பதில் வந்தனா ஜோஷியும், சீதாவுக்குப் பதிலாக நீனா குப்தாவும் நடித்திருந்தார்கள். 2011ம் ஆண்டு, ஏப்ரலில் இத்தொடர் முடிவினை எட்டியது.

ரீமேக் நம்பர் 4:

விஜய் டிவியின் ’தெய்வம் தந்த வீடு’ சீரியலின் பூர்வீகம் இந்தி சீரியலான ‘சாத் நிபானா சாத்தியா’. இதுவும் மாமியார், மருமகளின் கதைதான். எளிய பெண்ணான சீதா, ஒரு பெரும்பணக்கார குடும்பத்தின் மருமகளாக சந்திக்கும் சவால்கள்தான் கதைக்கரு. கன்னடத்தில் அம்ருதவர்ஷினியாகவும், மலையாளத்தில் சந்தனமழாவாகவும் ரீமேக் ஆகியுள்ள இத்தொடர், மராத்தி, பெங்காலி மொழிகளையும் விட்டு வைக்கவில்லை. மராத்தியில் இத்தொடரின் பெயர் புத்சா பவ்ல். பெங்காலியில் போதுபோரன். 

ரீமேக் நம்பர் 5:

கன்னட ஸ்டார் ஸ்வர்ணா சேனலின் ‘நீலி’, அதே பெயருடன் தமிழில் ரீமேக் ஆகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அம்மா, மகளுக்கிடையேயான அன்பையும், புரிதலையும் சொல்லும் நீலி ஒரு அமானுஷ்யத் தொடர். இறந்தபின்னும் மகளைத் தொடரும் அம்மாவின் ஆத்மாவும், அவரது பெண்குழந்தையும்தான் கதையின் நாயகிகள். விஜய் டிவியில் தற்போது இத்தொடர் ஹாட் ஹிட்.

ரீமேக் நம்பர் 6:

கொஞ்சமே கொஞ்சம் நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் சுபம் போட்ட சீரியல் ‘கல்யாணம் முதல் காதல் வரை’. இந்தியில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘யே ஹெய் மொகபத்தீன்’ என்னும் சீரியலின் ரீமேக் இது. சிலபல காரணங்களுக்காக கதையின் போக்கையே மாற்றி எண்ட் கார்டு போடப்பட்டுவிட்டது. மேற்படி சீரியல், மலையாளத்தில் ப்ரணயம், பெங்காலியில் மான் நியே கச்சாகச்சி, கன்னடத்தில் அவனு மட்டே ஷ்ரவனி. 

ரீமேக் நம்பர் 7:

இந்தியின் கும்கும்பாக்யா, தமிழில் இனிய இருமலர்களாக டப் ஆனது தெரியும். அதே சீரியல், தற்போது கன்னடத்தில் சுபவிவாகாவாக மாற்றம் பெற்றிருக்கிறது. இரண்டு சகோதரிகள், அவர்களது திருமணம், அதைச்சார்ந்த கதைதான் கும்கும்பாக்யா. 

மெகாதொடர்களை டப் செய்து வெளியிடுவதைக் காட்டிலும், இந்த ரீமேக் சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே மவுசு அதிகம்தான். ஒரே முகங்களை, ஒரு கதையில் பார்ப்பதைவிட, ஒரே கதாப்பாத்திரத்தில் வெவ்வெறு முகங்களைப் பார்ப்பதும் இன்ட்ரஸ்டிங்தானே!

-பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு