Published:Updated:

ஹூடிபாபா, கலக்குறே சந்துரு... இந்த விளம்பரங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கா?

ஹூடிபாபா, கலக்குறே சந்துரு... இந்த விளம்பரங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கா?
ஹூடிபாபா, கலக்குறே சந்துரு... இந்த விளம்பரங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கா?

ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு ஓடிவந்து, முதல் வேலையாக ரிமோட்டை தூக்கி, டிவியே கதினு உட்கார்ந்திருந்த 90'ஸ் கிட்ஸ் யாருக்கும் இந்த விளம்பரங்கள் மனதில் இருந்து என்றும் மறக்காது. சொன்னது சரி தானானு படிச்சுப் பாருங்க மக்கா... 

வெள்ளைத்தாடி வெச்சுருக்கும் தாத்தாவின் முகம், பாலகனின் பால் வடியும் முகமாக மாறி அப்படியே ஜிமிக்கி போட்ட அக்காவின் முகமாய் மாறும் `நிஜாம் பாக்கு' விளம்பரத்தை மறக்க முடியுமா..! பள்ளிக்கூடத்தில் படிச்ச ரைம்ஸை விட அந்த விளம்பரத்தில் வரும் பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கே. ' பெரியவர் சிறியவர் அனைவரும் சுவைத்திடும் நிஜாம் பாக்கு... அன்றும் இன்றும் என்றும் தரமே நிஜாம் பாக்கு' அதே அதே...

ஒன்டர் கேக்கின் வெவ்வேறு சுவைகளை ஒரே பாட்டில் சொன்ன `ஓ ஓ ஓ ஓன்டர் கேக்' விளம்பரம். `பைனாப்பிள்' என சொல்லும்போது மஞ்சள் கலர் டி-ஷர்டும், `சாக்லேட்' என சொல்லும்போது பிரவுன் கலர் டி-ஷர்டும் அணிந்து கெத்து காட்டும் அந்த சின்ன பையன் இப்போ பெரிய பையன் ஆகியிருப்பார்ல? 

நீர்வீழ்ச்சி, காடு என சுற்றிதிரியும் அந்த காதல் ஜோடிதானே, ஆப்பிள் மரத்தில் காய்க்கும் என்பதை நமக்கு கண் முன்னே காட்டியது. `ஆயுர்வேத மூலிகைகளாலே உள்நாட்டிலே தயாரானது' என்ற வரி முடிந்தவுடன் ஒரு தாத்தா பல்லைக்காட்டி சிரிப்பாரே ஞாபகம் வந்துடுச்சா...

`ஹூடிபாபா...' என ஹஸ்கி வாய்ஸில் ஆரம்பிக்கும் அந்த பஜாஜ் கேலிபர் விளம்பரம் ஞாபகம் இருக்கிறதா? கருப்பு ஜெர்கின், கருப்பு கண்ணாடி, கருப்பு ஹெல்மெட் என செம ஸ்டைலாக பைக்கில் ஸ்லோ மோஷனில் பறந்து வருவாரே. அதை பார்த்துவிட்டு சைக்கிள் ஓட்டும்போது கூட `ஹூடிபாபா... ஹூடிபாபா...' என சொல்லிக்கொண்டே தானே ஓட்டினோம்.

'நிர்மா' எனும் வார்த்தையை காதில் கேட்டாலே, `வாஷிங் பவுடர் நிர்மா...' பாடலை வாய் முனுமுனுக்க துவங்கிவிடும். அந்தக்கால விளம்பரங்கள் என்றவுடன் பெரும்பாலும் நம் நினைவுக்கு வரும் முதல் விளம்பரமும் இது தான்.

`கலக்குறே சந்துரு... புது வீடு, புது வண்டி, புது மனைவி... ஹ்ம்ம்ம் பிரமாதம்'. விளம்பரம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் நாமும் இந்த வசனத்தை கூடவே சொல்வோம். நம் நண்பர்கள் ஏதேனும் புது பொருட்கள் வைத்திருந்தால் `கலக்குறே சந்துரு...' என்பதை மறுக்க முடியுமா! எங்கே இருக்க சந்துரு? 

'ஏர்டெல்' விளம்பரங்களின் ஆஸ்தான இசை ஆரம்பித்ததே அங்கு தான். அழுதுக்கொண்டிருக்கும் சிறுவனை மௌத் ஆர்கன் வாசித்து சமாதனப்படுத்தும் ஏ.ஆர்.ஆர், அதை அப்படியே தொலைபேசி தன் நண்பர்களுக்கும் வாசித்து காட்டுவார். ரஹ்மானின் இசைக்காகவே அந்த ஒரு நிமிட விளம்பரத்தை எவ்வளவு முறையேனும் பார்க்கலாம்.

ராமு அண்ணன் கடைக்கு வழி சொன்னதற்காக பரிசாக கிடைக்கும் பெர்க்கை ருசிப்பார் ராணி முகர்ஜி. அதன் ருசியில் மயங்கிப்போகும் ராணி முகர்ஜி பண்ணும் கலாட்டாக்கள் தான் மொத்த விளம்பரமும்.  தாங்க்யூ என்பதை ‘தன்கூ’ என சொல்லவைத்ததும்  இந்த விளம்பரம்தான்! ஹே...தன்கூ...

இரண்டு பேர் மட்டுமே கலந்துக்கொண்ட பந்தயத்தில் தான் இரண்டாவது வந்ததைப் பெருமையாக சொல்லி குலோப் ஜாமுனை வெளுத்துக்கட்டும் இந்த விளம்பரம் ஞாபகம் இருக்கா...

`வோடாஃபோன்' நிறுவனம் முன்னர் `ஹட்ச்' என்ற பெயரில் இருந்தபோது வந்த அட்டகாசமான விளம்பரம். அந்த சிறுவனையும், அவனுடனே இருக்கும் அந்த நாயையும் மறக்கவே முடியாது. பசுமையான இடங்கள், கார் மேகங்கள், பனிமூட்டம் என அந்த விளம்பரமே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். You and I, in this beautiful world... 

இவைகள் போல இன்னும் சில விளம்பரங்கள் இருக்கு. அடுத்தமுறை அவைகளைப் பார்ப்போம் 90ஸ் கிட்ஸ் உறவுகளே...

- ப.சூரியராஜ்