Published:Updated:

அரசியல் தலைவர்களே என்னைப் பார்த்து ‘கேமரா உமனா?’னு ஆச்சர்யப்படுவாங்க! - தன்யா கலகல! #VikatanExclusive

அரசியல் தலைவர்களே என்னைப் பார்த்து ‘கேமரா உமனா?’னு ஆச்சர்யப்படுவாங்க! - தன்யா கலகல! #VikatanExclusive
அரசியல் தலைவர்களே என்னைப் பார்த்து ‘கேமரா உமனா?’னு ஆச்சர்யப்படுவாங்க! - தன்யா கலகல! #VikatanExclusive

அரசியல் தலைவர்களே என்னைப் பார்த்து ‘கேமரா உமனா?’னு ஆச்சர்யப்படுவாங்க! - தன்யா கலகல! #VikatanExclusive

ஆண்களின் கோட்டையாக கருதப்பட்ட துறைகளில் எல்லாம், பெண்கள் சாதித்துக்கொண்டும், முத்திரை பதித்துக்கொண்டும் வருகின்றனர். அந்த வகையில் மீடியாவில் கேமரா உமனாக  சாதித்துக்கொண்டு வருகிறார் காவிரி நியூஸ் சேனலின் கேமரா உமன் தன்யா. தோளில் மூவி கேமரா, கையில் ஸ்டில் கேமரா, செல்போன் என்று  பரபரப்பாகவே இருப்பவரிடம் ஒரு கலகல பேட்டி!  

“உங்களைப் பற்றி சொல்லுங்க?"

"நான் மன்னார்குடி பொண்ணு. அம்மா, அப்பா, அக்கா இதுதான் என் உலகம். என் வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பரிசு என் குடும்பம்தான். சின்ன வயசுல அம்மா பின்னாடியே சுத்திட்டு இருக்கிற பொண்ணா தான் இருந்தேன். அம்மா விட்டா பாட்டி, வேற ஒண்ணும் தெரியாது. மன்னார்குடியில்தான் என் பள்ளி வாழ்க்கை. அதுக்கப்பறம் யூஜி விஸ்காம் தான் படிக்கணும்னு நெனச்சேன். நமக்குப் பேசிக்கலி இந்தக் கணக்கு, பிசிக்ஸ், கேமிஸ்ட்ரி  எல்லாம் வீக். நமக்கு இந்த ஆர்ட்ஸ் தான் இன்டரஸ்ட் அதிகம். அப்போ வெளில போய் படிக்கணும்போது, எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தது அம்மாவும் அக்காவும்தான். எனக்கு தைரியம்னா என்னானு சொல்லித் தந்தது என் அம்மாதான். அப்பா ரொம்ப கேரிங். என் குடும்பமும், என் நண்பர்களும் இல்லைனா, இப்ப இந்த தன்யா இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டாள்."

"இது நீங்களா தேர்வு செஞ்சு வந்த இடமா?”  

"நான் ரொம்ப திட்டமிட்டெல்லாம் இதைத் தேர்வு செய்யல. Masters in electronic media பண்ணிருக்கேன். படிச்சு முடிச்சதும் எனக்கு நியூஸ் 7 சேனல்ல கேமரா உமனா வேலைபார்க்க வாய்ப்பு கிடைத்தது. கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்தி, என் கேமரா வாழ்க்கையை நான் ஆரம்பிச்சேன். இப்போது காவேரி நியூஸ் சேனல்ல கேமரா உமனா என் பயணம் தொடர்கிறது."

"வேலை பிடிச்சிருக்கா?”  

"ஃபீல்டுக்குப் போனா, ஓடிட்டே இருக்கணும். மொட்டை மாடி, ஓடற வண்டினு எங்க வேணும்னாலும் நின்னு ஷுட் பண்ண வேண்டிருக்கு, கேமராவையும் தூக்கிட்டு இதைச் செய்ய வேண்டி இருக்கும்.  

ஆரம்பத்துல 'ஏலியன்' மாதிரிதான் என்னை எல்லாரும் பாத்தாங்க,  நான் வேலை பார்த்த இரண்டு சேனல்களையும், என் வேலை வீடியோ ஜெர்னலிஸ்ட்தான், அதுக்கு ஏற்ற மாதிரி எனக்கு பீல்ட்ல போய் வேலை செய்வதுதான் எனக்குப் பிடிச்சிருக்குனு கர்வமா சொல்லுவேன். அதிகாலை 5 மணிக்கு போயிட்டு, நைட் 10 மணிக்குத் திரும்பி வந்தாலும், 'சாப்பாடு இருக்கு.. சாப்பிட்டு தூங்குன்னு' சொல்லுவாங்க என் நண்பர்கள். இதெல்லாம் எனக்குக் கிடைச்ச வரங்கள்!."

"கேமரா உமனாக இருப்பதற்கும் - கேமரா மேனாக இருப்பதற்கும் வித்தியாசம் என்ன?"

"சொன்னா சிரிக்கக்கூடாது..." என சிரித்துக்கொண்டே தொடர்ந்தார், "நான் பண்ற நிறைய விஷயம் பையன் மாதிரி தான் இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொல்லுவாங்க" என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சிரிக்கிறார். “கேமராவுக்கு பையன் - பெண்ணுன்னு வித்தியாசம் எல்லாம் தெரியாது. எல்லாமே, ஃபிரேமிங் + லைட்டிங்கலதான் இருக்கு. நம்ம எடுக்கிற காட்சிகள், சும்மா லட்டு மாதிரி இருக்கணும். நம்ம பார்வையில் தான் அது இருக்கு. நம்ம எடுக்கும் காட்சி, பார்வையாளர்களுக்குப் பிடிக்கணும்னா, முதல்ல நமக்கு பிடிக்கனும். எப்போதுமே நமக்குப் பிடிச்ச மாதிரி வேலை செஞ்சா  நூற்றுக்கு நூறுதான். "

"கேமரா உமனா பீல்ட் அனுபவங்கள்?"

" 'கேமரா வெயிட் கூட நீ இல்லயே, எப்படி கேமராவ தூக்கிட்டு வேல செய்யற?’ ‘ஒரு டிரைப்பேடே இன்னொரு டிரைப்பேட தூக்கிட்டு போகுதே...' இதெல்லாம் தான், நான் தினமும் கேக்குற பாராட்டுக்கள்." சொல்லிக்கொண்டே சிரிக்கிறார்.

"நியூஸ் 7 சேனல் அறிமுகம் ஆனபோது, நான் முதன் முதலாக எடுத்த 'ஆல் உமன் டீம் லான்ஜ் புரோகிராம்' காட்சிகளைத்தான், சேனலில் முதல் காட்சியாக ஒளிபரப்பு செய்தார்கள். அதனால், எனக்கு அளவு கடந்த  மகிழ்ச்சி. அப்பறம் பீல்ட்ல ஒர்க் பண்றப்ப பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட.. 'கேமரா உமனா?'னு ஆச்சரியமா கேப்பாங்க. அப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். அது மாதிரி இயக்குநர் மிஷ்கின் சார், இயக்குநர் சற்குணம் சார்னு பலர் பாராட்டிய தருணங்கள் எல்லாம் மறக்கமுடியாத தருணங்கள்.

 காவேரி நியூஸ் சேனல்ல சேர்ந்த கொஞ்ச நாளிலேயே, தமிழ்நாடு பரபரப்பா ஆச்சு. எந்த நேரமும் பிரேக்கிங்தான். அப்போலோ நியூஸ், வர்தா புயல், ஜல்லிக்கட்டுப் போராட்டம், அதிமுக விரிசல் என தொடர்ச்சியான நேரலைகள். அலுவலகத்துலயும் நல்ல பேரு. 

சிலர் மட்டும் 'பொண்ணா இருந்துட்டு, ஏன் இந்த பீல்ட்டுக்கு வந்தே'னு கேட்பாங்க. நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படல

பொதுவாக பிரஸ்மீட் உள்ளிட்ட சில இடங்கள்ல ஒரே இடத்தில் நின்று வீடியோ எடுப்பது ஈசி. ஆனால், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று செய்திகளை கவரேஜ் பண்ணச் செல்லும்போது, அவர்கள் பின்னாடியே ஓடி ஓடி சென்று காட்சிப்படுத்த வேண்டும். அந்த மாதிரி நேரத்துல, நான் என்ன பண்ணுவேனே எனக்கே தெரியாது. அங்கேயும், இங்கேயும் ஓடி எப்படியாவது அந்த காட்சிகளை படமாக்கிடுவேன். அதன்பிறகு, அந்த தருணங்களை யோசிச்சுப் பார்த்தா, நான் இப்படி ஓடி ஓடி எடுத்ததை நினைச்சு சிரிச்சிப்பேன். இந்த வேலையை மனசுக்கு பிடிச்சு செய்வதால், இதன் கஷ்டம் தெரியல. இப்ப ஆர்.கே.நகர் தேர்தலை கவர் பண்றேன். அச்சச்சோ.. எல்லா கட்சிக்காரங்களும் ஓட்டு கேட்டு கிளம்பிட்டாங்க பாஸ்... நான் உங்கள அப்பறம் பாக்குறேன்" என்று கேமராவை தூக்கியவர், ஒரு நிமிஷம் நின்றார். 

“இதைச் சொல்லியே ஆகணும். நான் பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் படிக்கும்போது ‘அவள் விகடன்’ல  விஸ்காம் மாணவர்களைப்  பற்றி ஒரு ஆர்ட்டிக்கள் பண்ணினாங்க. அதுல ஸ்டில் கேமரா வச்சிருக்கற மாதிரி என்னுடைய ஒரு போட்டோவும் வந்திருந்தது. இப்போ விகடனுக்காக ஒரு கேமரா உமனா மறுபடியும் என்னை இன்டர்வியூ பண்றாங்கனு நினைக்குறப்ப, எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. தேங்ஸ். 'பரவால்ல தன்யா, யூ ஆர் கிரேட்' என்று ஓடினார்!

இந்த ஓட்டம், உங்களை இன்னும் உயர்த்தும்! 

- ரா.அருள் வளன் அரசு,  

படங்கள்: தி.குமரகுருபரன்


 

அடுத்த கட்டுரைக்கு