Published:Updated:

''என் கல்யாணப் பரிசை 18 வருஷமா பொக்கிஷமா வைச்சுருக்கேன்!’’ நெகிழும் நடிகை ரேணுகா

''என் கல்யாணப் பரிசை 18 வருஷமா பொக்கிஷமா வைச்சுருக்கேன்!’’ நெகிழும் நடிகை ரேணுகா
''என் கல்யாணப் பரிசை 18 வருஷமா பொக்கிஷமா வைச்சுருக்கேன்!’’ நெகிழும் நடிகை ரேணுகா

''சூர்யா, ஆர்யா எனபல நடிகர்களுக்கு ஜாலியான, கெடுபிடியான அம்மாவாக நடித்துப் பெயர் பெற்றவர் ரேணுகா. மக்கள் மனதை கொள்ளை கொண்ட இந்த அம்மாவுக்கு... அவருடைய அம்மா என்றால் உயிர். 'உலகத்தில் உள்ள அம்மாக்களிலேயே எந்தக் குறையும் இல்லாத ஒரே அம்மா என்னோட அம்மாதான்' என நா தழுதழுக்கப் பேச ஆரம்பிக்கும்போதே தெரிகிறது, தன் தாய் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறார் என்று...

''எனக்குப் பத்து வயசு இருக்கும்போதே அப்பா தவறிட்டார். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். இரண்டு சின்ன தம்பிகள். என்ன செய்றதுனு தெரியாம தவிச்சோம். குடும்பத்தைத் தலை நிமிர்த்த டிராமாவுல நுழைஞ்சேன். அதுக்குப் பிறகு தான் டிராமாவில் இருந்து சினிமா வரை படிப்படியாக வளர ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் சினிமா வேண்டாம்னு பல பேர் அட்வைஸ் கொடுத்தாங்க. திக்கு தெரியாம தவிச்ச என்னை தன்னோட டிராமா ட்ரூப்சில் சேர்த்துக்கிட்டார் கே.பி சார். அவர்கூட கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருடங்கள் தொடர்ந்து பயணம் பண்ணினேன். இது நான் செய்த பாக்கியம். இப்போ நான் பிரபலமா இருக்கேனா அதுக்கு காரணம் கே.பி.சார்தான். அதே மாதிரி சினிமாவுக்கு நான் வரக்காரணம் டி.ஆர்.சார் தான். இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா நான் இல்லை. கே.பி.சாருடைய சீரியல்களான 'கையளவு மனசு', 'காதல் பகடை', 'அமுதா ஓர் ஆச்சர்யக்குறி' எனப் பல சீரியல்களில் நடிச்சேன். கே.பி.சார் கடைசியா எடுத்த 'ஒரு கூடைபாசம்', 'பெளர்ணமி' என்கிற இரண்டு ட்ராமவுல நடிச்சிருக்கேன். கே.பி. சாருக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் தகும்" என்பவரின் பேச்சு அம்மா பக்கம் திரும்புகிறது.

''கல்யாணத்துக்குப் பிறகும் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை எங்கிருந்தாலும் அம்மா வீட்டில் ஆஜராகி, அவங்க கையாலசாப்பிட்டிருவேன். 'ஏம்மா இவ்வளவு கஷ்டப்படுற, பேசாம ஒரு நாள் ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்'னு பல தடவை சொல்லியிருக்கேன்.'வாரம் முழுக்க உன் தம்பிகளுக்கு சமைச்சுப் போடுறேன். உனக்கு வாரத்துல ஒரு நாள் தான் சமைச்சுத் தர முடியுது. அதுவேகவலையா இருக்கும்மா'னு சொல்லிட்டே சமையல் வேலைப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. சமைக்கும்போது உதவிக்குப் போனாக்கூட, வேண்டாம்னு சொல்லி என்னை ஓய்வெடுக்கச் சொல்லுவாங்க. அன்றைக்கு நாள் முழுக்க அக்கம்பக்கம், சொந்தக்காரங்களோட சேர்ந்து அரட்டை அடிப்போம். அடுத்து ஒரு வாரத்துக்கு எனக்கு அந்த எனர்ஜி உதவியா இருக்கும். முன் ஜென்மத்துல புண்ணியம் செய்திருக்கேன் இப்படிப்பட்ட அம்மா கிடைக்க.

என்னோட கணவரும் அப்படித்தான். நான் என்ன கேட்டாலும் அதைச் செய்து கொடுத்துடுவார். என்ன வேணுமோ வாங்கிக்கோ, சரியான நேரத்துக்கு முன்னாடியேப் போய் டயலாக் மனப்பாடம் பண்ணு. நடிச்சி பிராக்டிஸ் பண்ணிப்பாரு''னு ஒரு குழந்தைக்கு கிளாஸ் எடுக்கிற மாதிரி அக்கறையா சொல்வார். எங்க கல்யாணப் பரிசை பதினெட்டு வருஷமா பொக்கிஷம் மாதிரி பாதுகாத்துட்டு வர்றேன். அது வேற ஒண்ணுமில்லை, டைட்டன் வாட்ச். என் கணவர் வாங்கிக் கொடுத்தது. எத்தனையோ தடவ வேற வாட்ச் வாங்கிக்கோனு சொல்லியிருக்கார். ஆனா நான் கேட்கலை. அதுல ஒரு பிரியம், அன்பு, காதல் கலந்திருக்கிறதா நினைக்கிறேன். அதான் வாட்சை மாத்தலை" என்கிறார் பழைய நினைவுகளில் மூழ்கியபடி.

''இப்பவும் எனக்கு வரக்கூடிய எல்லா அம்மா கதாபாத்திரத்தையும் நான் ஏத்துக்கிடுறது இல்ல. கண்ணைக் கசக்கிட்டு ரெண்டு டயலாக்கோட முடியிற எந்த கதாபாத்திரத்திற்கும் என்னை யாரும் அழைக்கிறது இல்ல. எனக்கும் அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பம் இல்ல.

அம்மானா பாந்தமா இல்லாம,'டமால் டுமீல்' ரோலில்தான் நடிக்கிறேன். அதுதான் என்னோட கேரக்டரும் கூட. அமைதியான அம்மாவாக சத்தியமா நடிக்க வராதுங்க. இப்போ சந்தானம் நடிக்கும்'ஓடி ஓடி உழைக்கணும்', விஜய்சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' படங்கள்ல அம்மா கதாபாத்திரத்துல நடிச்சிட்டு இருக்கேன். ஒவ்வொரு படத்துக்கு கமிட் ஆகும் போதும் சரி, எந்த ஒரு செயலை செய்யும் போதும் சரி ஆஞ்சநேயரை நினைக்காம செய்யுறதே இல்ல. இதெல்லாம் என் சின்ன வயசுல இருந்து தொடர்ற ஒரு ஆன்மீகப் பழக்கம்னு சொல்லலாம். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் எல்லாம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காம எடுத்ததுதான். இப்போ வரைக்கும் கடவுளைத் தவிர வேறு யாரோட உதவியையும் எதிர்பார்த்து நின்னது இல்ல'' என முடிக்கிறார் ரேணுகா.

-வே.கிருஷ்ணவேணி

பின் செல்ல