Published:Updated:

8 வயதில் ஸ்மால் ஸ்க்ரீன், சிவகார்த்திகேயனின் பிக் பாராட்டு..! - குஷி சிநேகாஸ்ரீ

முத்து பகவத்
8 வயதில் ஸ்மால் ஸ்க்ரீன், சிவகார்த்திகேயனின் பிக் பாராட்டு..! - குஷி சிநேகாஸ்ரீ
8 வயதில் ஸ்மால் ஸ்க்ரீன், சிவகார்த்திகேயனின் பிக் பாராட்டு..! - குஷி சிநேகாஸ்ரீ

கலாய் காமெடிகளாலும், அடுக்குமொழி வசனங்களாலும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலக்கிக்கொண்டிருக்கும் குட்டி, சுட்டிப் போட்டியாளர் சினேகா ஸ்ரீ. செமி ஃபைனல் வரை வந்து அசத்தியிருக்கும் சினேகா, கோபிசெட்டிப்பாளையத்தில் தாய்தமிழ் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறார். இவரின் சாதனைப் பயணம் அத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கிறது.  

சன் டிவியில் டி.ராஜேந்தர் தொகுத்துவழங்கிய ‘அரட்டை அரங்கம்’ தான் சினேகா ஸ்ரீயின் முதல் டிவி நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவருக்கு வயது எட்டு. அடுத்தடுத்து கலைஞர் டிவி, வேந்தர் டிவி,  ராஜ் டிவி என அனைத்து சேனல்களின் பேச்சரங்க நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசரடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி நடனத்திலும் கில்லி இவர். கலைஞர் டிவியில் ‘ஓடிவிளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் 13 -எபிசோட் வரை நடனமாடிக் கலக்கியிருக்கிறார். 

சினேகாவின் தந்தை செளந்தர்ராஜன் பனியன் கம்பெனியில் வேலை செய்து மகளை படிக்கவைக்கிறார். இவரின் அம்மா கவிதா பேசும்போது, “ எட்டுவயசுல இருந்தே பல மேடைகளில், பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பிச்சிட்டா சினேகா. கோவில் திருவிழாவில் கலந்து பரதம், காமெடி ஷோக்கள் பண்ணுவா. அதுல சம்பாதிக்கிறப் பணத்தை எடுத்துட்டுத்தான் டிவி நிகழ்ச்சிகள் கலந்துக்க சென்னைக்கு வருவோம். அவளோட முதல் மேடை நிகழ்ச்சிக்கு வாங்குன சம்பளம் 150 ரூபாய்.  அவளோட படிப்புல தொடங்கி வீட்டுச்செலவு வரைக்கும் இந்த வயசுலயே பண்ணுறா. 

அந்தநேரத்தில்தான் கலைஞர் டிவி வாய்ப்பு கிடைச்சது. கலைஞரில் ‘ஓடிவிளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில்  நிறைய கஷ்டங்களுக்கு நடுவுல கலந்துட்டா. 13வது சுற்றுக்குப் பிறகு நல்லா பண்ணலைன்னு எலிமினேட் பண்ணிட்டாங்க.  அடுத்ததா தான் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைச்சது. 

ஒவ்வொரு எபிசோடுக்கும் பணம் தயார் செய்துட்டு வந்துட்டுப் போகுறதுக்குள்ள கண்ணு முழியெல்லாம் பிதுங்கிடும். ஆனால் மேடையில நல்லா பெர்ஃபார்ம் பண்ணும் போது, அந்த சோகமெல்லாம் மறைஞ்சிடும்.  ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலேயே பாலாஜி சார் ‘உங்களுக்கு ஒரு தம்பி இருக்கிறதா நினைச்சிக்கோங்க. என்ன உதவினாலும் கேளுங்க’ன்னு சொல்லியிருக்கார்.  இதுவரைக்கும் யார்கிட்டயும் போய்நின்னது இல்லை. ஆனா அவளுக்கு வாய்ப்பும் உதவியும் கிடைச்சாதானே அடுத்தக் கட்டத்துக்கு போக முடியும்.

இவளுக்கு கான்செப்ட் செல்லிக்குடுக்குறது நண்பர் பாலா தங்க சாமி சார் தான்” என்று சொல்லும் போதே பேசத்தொடங்கிவிட்டார் பாலா, “அரசுப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் வேலை செய்றேன். இயக்குநர் ராஜகுமாரன் சாரிடம் ஆறுவருடம் உதவி இயக்குநரா வேலை செய்தேன். ‘காதலுடன்’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படங்களில் வேலை செய்திருக்கேன். அதுமட்டுமில்லாம விஜய் மில்டன் சாரிடம் வேலைப் பார்த்தேன்.  பாப்பாவின் திறமைப் பார்த்துட்டுத்தான் சினேகாவிற்கு ஸ்கிரிட்டும், கான்செப்டும் எழுதிக் கொடுக்க ஆரம்பிச்சேன். செமி ஃபைனல் ரவுண்ட எலிமினேட் ஆகிட்டாங்க. ஆனா ஒயில்ட் கார்ட் ரவுண்டுல  எப்படியாவது ஜெயிச்சி ஃபைனல் போகிடணுங்கிறதுதான் எனக்கு ஆசை”  என்றார் பாலா.  

“தாய்தமிழ் உயர்நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். பள்ளிக்கு அதிகமா லீவ் போடுவேன். ஆனா எங்க ஸ்கூல்ல எனக்கு மட்டும் ஸ்பெஷல் பர்மிஷன்.  பள்ளிக்குப் போகாட்டாலும் எப்படியும் முதல் ரேங்க் எடுத்துடுவேன். சின்ன வயசுல இருந்தே மெமரி பவர் ஜாஸ்தி. எந்த விஷயம்னாலும் ஈஸியா பண்ணிடுவேன். இதுவரைக்கும் 100க்கும் மேல நாட்டியத்துக்காக ஷீல்டு ஜெயிச்சிருக்கேன். ஒருநாள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் அண்ணா வந்திருந்தார். ‘ரொம்ப சூப்பரா பண்றே’னு சொன்னார் ...! அது எனக்குப் பிடிச்ச எல்லா பாராட்டுகளுக்கும் ஒரு படி மேல. ஏன்னா, சிவா அண்ணன்னா ரொம்ப பிடிக்கும். 

‘சரி, உனக்கு எதிர்காலத்துல என்னவாகணும்? என்று கேள்வியை முடிப்பதற்குள்...’ “பரதம்னா எனக்கு உயிர். பரதநாட்டியத்துல டிகிரி படிக்கணுங்கிறது தான் என் ஆசை. இப்பவே அதுக்கான காசு சேர்க்க ஆரம்பிச்சிட்டேன்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இளம் திறமைசாலி சினேகா ஸ்ரீ. 

-முத்துபகவத்-