Published:Updated:

‘என்னை நல்லவன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா..!?’ - ‘சீரியல் டூ சினிமா’ டேவிட்

ரா.அருள் வளன் அரசு
‘என்னை நல்லவன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா..!?’ - ‘சீரியல் டூ சினிமா’ டேவிட்
‘என்னை நல்லவன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா..!?’ - ‘சீரியல் டூ சினிமா’ டேவிட்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' சீரியலில் HR ஆக நடித்து அனைவர் மனதிலும் பதிந்தவர் நடிகர் டேவிட். சின்னத்திரையில் அறிமுகமான அவர், கிருமி, கொடி, கத்தி, என பல்வேறு படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து தனது திறமையால் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகிறார். தற்போது சன் டி.வி.யில் ஒளிப்பரப்படும் 'விதி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்தவரை ஓரம் கட்டினோம்.

"கோவை சூரியன் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாக எனது கலை உலக வாழ்க்கை தொடங்கி, ஹலோ எஃப் .எம் வரை கோவையில் நீடித்தது. சென்னைக்கு வந்தால், பெரிய ஆளாக வரலாம் என்று ஊரில் இருந்து கிளம்பி வந்தேன். சென்னை வந்ததும், பல தேடலுக்கு மத்தியில் கேப்டன் டி.வி.யில் செய்தி வசிப்பாளராக சேர்ந்தேன். ஒரு கட்டத்தில், மீடியாவுக்கே உள்ள பாணியில், எல்லா விதத்திலும் சிரமப்படத் தொடங்கினேன். 

'நமக்குத்தான் நிறையத் திறமை இருக்கே. சென்னை வந்தால், எப்படியும் பொழச்சிக்கலாம்' என்று எனக்குள் இருந்த திமிர், அந்த ஈகோ எல்லாவற்றையும், எனது வறுமை சுக்குநூறாக உடைத்தெறிந்தது. நட்பு, வாழ்க்கை, கலை உலகம் என நிறைய விஷயங்களை.. வறுமை நிறைந்த அந்தத் தருணம் கற்றுத் தந்தது. மனித வாழ்க்கையின் எளிமையைப் புரிய வைத்தது. நானும் நிறைய விஷயங்களை அனுபவித்து கற்றுக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிம்புக்கே சென்ற எனக்கு தி.நகரில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயில் வாசலில் வைத்து அந்த மாற்றம் நிகழ்ந்தது.
 
'ஹாய் டேவிட்...' திரும்பி பாத்தா.. பாலாஜி வேணுகோபால். சென்னை ஹலோ எப்.எம்.மில் தற்போது ஆர்.ஜே வாக பணியாற்றி கொண்டு இருக்கிறார். நான் கோவை ஹலோ எப்.எம்.மில் பணியாற்றிய போது அவர் என்னுடைய ஹெட். இவர் மூலமாக அந்த மாற்றம் நிகழும் என்று எனக்கு தெரியவில்லை அப்போது.

அவர், என்னிடம் பேசப் பேச.. என் கண்ணெல்லாம் கலங்க ஆரம்பிச்சது. அவரிடம் என் சூழ்நிலை சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவர் என் சூழலை புரிந்துகொண்டு, என்னைப் போன் பண்ணச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரிடம் போனில் பேசும்போது, 'நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்' ஆனால், எனக்கு இங்கு யாரையும் தெரியாது என்றேன். அப்போது அவர் கொடுத்த அறிமுகம்தான் விஜய் டி.வி.யின் Executive தயாரிப்பாளர் ரமணா கிரிவாசன். அவர்தான் 'ஆபிஸ்' சீரியலின் டயலாக் ரைட்டராகவும் இருந்தார். சாதாரண மனிதனையும் மதிக்கத் தெரிந்த மிகப்பெரிய லெஜன்ட் அவர். நாங்கள் எல்லாம் அவரை 'பிதாமகன்' என்றுதான் சொல்வோம். அவர், விஜய் டி.வி.யில் நிறையப் பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்படித்தான், என்னையும் முதன் முதலாக சின்னதிரையில், அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார். நடித்த முதல் சீரியலே, என்னை மிகப் பெரிய அளவில் பேசும்படி செய்தது. இதனால், விஜய் டி.வி.யில் வந்த 7c, புதுக்கவிதை, தாயுமானவன் என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதன் மூலம் சின்னதிரையில் நான் அதிகம் அறியப்பட்டேன்.

விஜய் டி.வி. சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, சன் டி.வி.யில் வந்த 'தென்றல்' சீரியலில் கமிஷ்னர் கதாபாத்திரத்தில் நடித்தேன். அது என்னுடைய திறமையை நிரூபிக்க மேலும் ஒரு வாய்ப்பாக இருந்தது. பெரும்பாலும்.. எல்லா சீரியலையும் ஒரு வில்லத்தனமான கேரக்டர்தான் எனக்கு கிடைச்சது. என் முகத்துக்கு அதான் சூட்டாகுகிறது போல!?" என்று சிரித்துக்கொள்கிறார். "என்ன பார்த்தாலே, நல்ல பையனு யாரும் சொல்ல மாட்டார்கள். வில்லத்தனமான 'ஒரு லுக்' எனக்கு இருக்கிறதுகூட ஒரு காரணமா இருக்கலாம். ஆனால், ஒரு சீரியல் அல்லது ஒரு படத்துலயாவது பாசிட்டிவான ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அந்த ஆசை எப்ப நிறைவேறுமோ?!" சிரித்துவிட்டு மீண்டும் தொடர்கிறார், "அதன்பிறகு 'நாதஸ்வரம்' சீரியலில் அன்னதாண்டவம், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது...பிறகு 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என அடுத்தடுத்து சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போது படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

முதல் படம் 'கணிதன்'. ஆனால், லேட்டா ரீலீஸ் ஆச்சு. பிறகு அரிமா நம்பி, காக்கிசட்டை என பல படங்களில் நடிக்கத் தொடங்கினேன். பிறகு 'கிருமி' படத்தில் மிகப் பெரிய ரோல். அந்தப் படம்தான் என்னை மிகப் பெரிய அளவில் பேச வைத்தது. தொடர்ச்சியாகக் கத்தி, எனக்குள் ஒருவன், தனி ஒருவன், கிடாரி, காஷ்மோரா, கொடி, மாலை நேரத்து மயக்கம் என இதுவரை 23 படங்களில், கேரக்டர் ரோலில் நடித்துவிட்டேன். 

தற்போது, சன் டி.வி.யில் 'விதி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் வாய்ப்புகள் குறைந்துள்ளன என்று சொல்ல முடியாது. சின்னத்திரைக்குள்ள வந்துட்டா அது நம்மளை சும்மா இருக்க விடாது. அடுத்து அடுத்துனு நம்மளை யோசிக்க வைக்கும். இப்போது யோசிப்பதற்கு அதிகம் நேரம் கிடைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

சும்மா இருப்பதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. அதனால், வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், விளம்பரங்களுக்கு டப்பிங் வாய்ஸ் நிறைய கொடுத்துக்கொண்டு வருகிறேன். அது மட்டும் இல்லாமல், நான் ஒரு சவுண்ட்  இஞ்சினியர். மேடைப்பாடகனும் கூட.... ஆர்க்கெஸ்ட்ராவில் 500 மேடைகளுக்கு மேல் பாடிய அனுபவம்  உள்ளதால், மீண்டும் இங்கு சென்னையில் தொடர்ந்து பாடகனாக உருவெடுத்துள்ளேன். இவற்றுடன் தி.நகரில் உள்ள 'மிராஜ் பிலிம் இன்ஸ்டியூட்டில்' எனது நண்பன் சாம் உதவியோடு ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி, நியூஸ் ரீடிங், டப்பிங், ஆக்டிங், என கலைத்துறை சம்மந்தமாக சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறேன். இப்போது ஒன்று புரிகிறது. நமக்கு இருக்கும் திறமைகளைத் தேவைப்படும் இடங்களில் செலுத்தினாலே வெற்றி நம்மைத் தேடிவரும். அப்படித்தானே பலர் இன்னைக்கு சின்னத்திரைல இருந்து பெரிய திரைல கலக்கிட்டிருக்காங்க? 

கலைப்பசியோடு, நல்ல சாப்பாட்டிற்காகக் காத்துட்டிருக்கேன் பாஸ்!” என்று முடித்தார். 

- ரா.அருள் வளன் அரசு,

படங்கள்: பா.காளிமுத்து