Published:Updated:

27.5 டூ 85 கிலோ... வி.ஜே. ரம்யாவின் ‘வெய்ட் லிஃப்டிங்’ ரகசியம் என்ன? #Inspiring

27.5 டூ 85 கிலோ... வி.ஜே. ரம்யாவின் ‘வெய்ட் லிஃப்டிங்’ ரகசியம் என்ன? #Inspiring
27.5 டூ 85 கிலோ... வி.ஜே. ரம்யாவின் ‘வெய்ட் லிஃப்டிங்’ ரகசியம் என்ன? #Inspiring

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமானவர் நடிகை ரம்யா. நடிகை, எப்.எம். ஆர்.ஜே, மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவர். இப்போது 'வெயிட் லிஃப்டிங்' எனும் பளு தூக்கும் போட்டியிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் 80 கிலோ எடைப் பிரிவில், தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிற ஒருவர், ஃபிட்னஸில் தன்னை நிரூபித்து இதைச் சாதித்தது எப்படி? அவரிடமே கேட்டோம்:-
 

"சிறுவயது முதல் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் தினமும் உடற்பயிற்சி செய்வேன். டயட் கட்டுப்பாடு எப்போதும் உண்டு. தொகுப்பாளர், நடிகை என்று ஆனபிறகு, இன்னும் அதிக கவனம் இருந்தது. வாழ்க்கையில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது. சில மாறுதலுக்காக எடுத்த புதிய முயற்சிதான் 'வெயிட் லிஃப்டிங்'. மீண்டும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். 

முதலில் 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்தேன். பின்னர், 32.5 கிலோ பிரிவு, அடுத்து 35 கிலோ பிரிவில் பங்கேற்கத் தொடங்கினேன். வெயிட் தூக்கத் தொடங்கியதால் உடல் வலி வேறு. போகப் போக உடலும் பிட்டாகி, செட்டானது. படிப்படியாக 40, 50, தொடங்கி இப்போது 85 கிலோ வரை வெயிட் தூக்குகிறேன். பத்து பத்து கிலோவாக அதிகமாக வெயிட் தூக்கி முன்னேறிச் செல்ல முயன்ற ஒவ்வொரு தருணங்களிலும், நான் எடுத்த முயற்சிகள், வலிகள் நிறைந்தது.  எனது எதிர்மறையான எண்ணங்களின்மீதான, ஒட்டு மொத்த கோபத்தை 'வெயிட் லிஃப்டிங்கில்' காட்டத் தொடங்கினேன். அந்த வெறிதான், இப்போது வெற்றியாக, தங்கப் பதக்கமாக மாறி எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது." 

வெயிட் லிஃப்டிங்கிற்கு நல்ல அசைவ சாப்பாடு வேண்டும். ஆனால், ரம்யா சுத்த சைவம். அது பற்றி கேட்டால், ''சாப்பாடு குறித்தெல்லாம் அக்கறை இல்லை. நல்லா புரோட்டின் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொள்வேன். எல்லாவற்றையும் விட மனசுல உள்ள தாகம்தான் முக்கியம். பளுதூக்கும் போட்டியில் வெற்றிபெறும்போது நான் அடையும் சந்தோஷத்தைப் போலவே, ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி செய்து முடிக்கும்போதும் நான் உற்சாகம் அடைகிறேன். அப்படி ஒரு உற்சாகம் கிடைக்கும். அந்த நிமிடத்தில், வாழ்க்கையில் எதையோ சாதித்துவிட்ட ஃபீல் பண்ணுவேன். அந்த பீல்... அன்றைய தினம் முழுவதையும், என்னை இன்னும் உற்சாகம் கொண்டவளாக திகழச்செய்கிறது.  

"நாட்டுக்காக விளையாட எனக்கு ஆசைதான். ஆனால், அதற்கு இன்னும் என்னைத் தயார்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சியையும் நான் இன்னும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இப்போது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் இலக்கு. பிட்னஸ் தொடர்பாக, சோஷியல் மீடியாவில் அவ்வப்போது சில வீடியோக்களை நான் பதிவு செய்வேன். அதற்கு நல்ல வரவேற்பு. அந்த வீடியோக்களையும் பார்த்த பலரும், குழந்தைகளுக்கு 'வெயிட் லிஃப்டிங் பயிற்சியாளராக' என்னை அழைக்கிறார்கள். அதற்கான தகுதிகள் எனக்கு இன்னும் தேவை என்றே நினைக்கிறேன். அந்த தகுதிகளை நான் அடைந்ததும், நிச்சயம் பயிற்சியாளராக மாறுவேன்.  

பளுதூக்குவதன் காரணமாக நான் முன்பு போல் Chubby -யாக  இல்லை.." என்று வெட்கம் பொங்க சிரிக்கிறார். "இப்ப ரொம்பவே மெலிஞ்சிட்டேன். பலரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். தங்கம் வென்றபோதுகூட பல நடிகர்- நடிகைகள் போன் செஞ்சு வாழ்த்துனாங்க. வாழ்த்து மழையில் நனைந்தாலும், எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவில்லை. பல அனுபவங்களுக்குப் பிறகு, சில புரிதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றி, என்னை இன்னும் தன்னம்பிக்கை உள்ளவளாக மாற்றிவிட்டது. தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும். பிட்னஸ் தொடர்பாக 'யூ டியூப் சேனல்' ஆரம்பித்து, தொடர்ந்து டிப்ஸ் கொடுக்க வேண்டும். பிட்னஸ் ஜிம் தொடங்கணும் என சில இலக்குகளை எனக்குள் நான் ஏற்படுத்திக்கொண்டேன். நடிகை, வி.ஜே, ஆர்.ஜே என வாழ்க்கை சென்றாலும், இன்னொரு பக்கம் எனக்காக, எனக்குப் பிடித்த மாதிரி வாழ இப்படியான ஒரு வாழ்க்கை முறையை நான் தேர்த்தெடுத்துக்கொண்டேன். வெயிட் லிஃப்டர்... இதான் இப்ப ரம்யா!" என்று உற்சாகம் பொங்கினார். 

 - ரா.அருள் வளன் அரசு 

பின் செல்ல