Published:Updated:

திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா! - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள்

திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா! - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள்
திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா! - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள்

திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கும் ஆர்.கே.நகர் பார்முலா! - இடைத்தேர்தல் குறித்து செய்தி சேனல் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ரியாலிட்டி ஷோ, சினிமா, பொழுதுபோக்கு என்றிருந்த டிவி நேயர்கள் எல்லாரையும் தங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றன செய்தி சேனல்கள். அதற்கு ஒரே காரணம், தமிழ்நாடு அந்த அளவுக்கு பரபரப்பாக இருந்ததும், ஊடகவியலாளர்களின்  உழைப்பும்.   தங்கள் கட்சிக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட சேனல்களைத் தாண்டி, பல சேனல்கள் கட்சி சார்பற்று செய்திகளை வழங்கி, மக்களுக்கு உண்மை நிலவரங்களைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பிடித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்துப் பேசினேன்.

குணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர், நியூஸ் 18 தொலைக்காட்சி

ஆர்.கே.நகர்: மூன்று கட்சிகளின் கௌரவ பிரச்னை! 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிக்கையே, ஒரு பொதுத்தேர்தல் அறிவிப்பை போன்று இருக்கிறது. டி.டி.வி.தினகரன் அணியும்,

ஓ.பன்னீர்செல்வம் அணியும் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அதிகப்படியான வாக்குறுதிகள் தரவேண்டிய நிலைமையில், ஆர்.கே. நகர் தொகுதி இருக்கிறது என்றால், கடந்த ஐந்து வருடத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, என்ன செய்தார் என்ற கேள்வியையே, அந்த அறிக்கைகள் நினைவுப் படுத்துகின்றன. முக்கியமாக இத்தனை வாக்குறுதிகளையும் பார்க்கும்போது, ஜெயலலிதா தொகுதியிலேயே, இவ்ளோ பிரச்னையா என்று கேட்கத் தோன்றுகிறது. இடைத் தேர்தல் என்றால், 'திருமங்கலம் ஃபார்முலாதான்' அனைவருக்கும் ஞாபகம் வரும்.

ஆனால், தற்போது அதை முறியடித்து 'ஆர். கே.நகர் ஃபார்முலா' என்று சொல்லும் அளவுக்கு; கோடிகளில் பணம் வாரி இறைக்கப்படுகிறது. ஒரு பொதுத் தேர்தலுக்கு செலவு செய்வதுபோல், இந்த ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கு செலவு செய்யப்படுவது ஒரு சரித்திரமாக இருக்கும். இந்த இடைத்தேர்தல் எல்லாருக்கும் ஒரு கௌரவ பிரச்னையாக எழுந்து நிற்கிறது. அ.தி.மு.க யாருக்கு என்கிற விஷயம்.. டி.டி.வி.தினகரன் அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் மிகப் பெரும் பிரச்னையாக முன் நிற்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை மக்கள் ஏற்கிறார்களா, பிரிந்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையை மக்கள் ஏற்கிறார்களா என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.

டி.டி.வி.தினகரனின் வெற்றியை பொறுத்துதான், சசிகலா குடும்பத்தினரின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலமும் இனி தீர்மானிக்கப்படும். அதைவிட முக்கியம் மு.க.ஸ்டாலின், திமுகவின் செயல் தலைவர் பொறுப்பேற்று நடைபெறும் முதல் தேர்தல் இது. இரட்டை இலை முடக்கப்பட்டு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு, ஜெயலலிதா இல்லாத அதிமுக உடனான போட்டியில் வெற்றிப்பெற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் ஸ்டாலின் இருக்கிறார். திமுக தோற்றால்,  பிரதான எதிர்க்கட்சியான திமுகவினர் வலிமை குறித்து பலமான கேள்விகள் எழும்

இந்த இடைத்தேர்தல், பொதுதேர்தலைவிட சுவாரஸ்யமானதாக இருக்கிறது. தீபா, எந்த நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே தெரியவில்லை. 'தான் ஒட்டு கேட்டுப் போவதையே', மக்கள் சேவையாக.. அவர் பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தல் நடப்பதும், இதை இந்தியாவோட மிகப்பெரிய பிரச்னைப் போன்று டி.டி.வி.தினகரன் அணியினர், பிரமாண்டப்படுத்தி பேசுவதும், ஜெயலலிதாவின் மாதிரி சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒட்டுக்கேட்பதும் என அதிமுகவின் உட்கட்சி தேர்தல் போலவே ஆகிவிட்டது. தேர்தல் செலவு உச்சத்தை தொட்டிருப்பதும், ஓட்டு கேட்கும் விதம் அதள பாதாளத்திற்கு சென்றிருப்பதும் நாட்டுக்கு நல்லதல்ல. எப்போதும் அமைதியாக இருக்கும் தேர்தல் ஆணையம், இந்த முறை நாங்களும் இருக்கிறோம் என்று பல அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், சிலருக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தனை ஆண்டுகள் இருப்பது தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டு, இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள் என்ற கேள்வி பல வண்ணங்களில் எழுகின்றன. நியாமான தேர்தல் நடக்க.. நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். ஆனால், பொதுத்தேர்தலில் கட்டாத அதீத அக்கறையை, தேர்தல் ஆணையம் இப்போது காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  

கார்த்திகைச் செல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை தொலைக்காட்சி

நான் ஒரு அரசியல் பார்வையாளன்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்றாலும், தொகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளை தீர்க்கப் போகும் தீர்க்கதரிசி யார் என்ற மில்லியன் டாலர் கேள்விகள் எழத்தான் செய்கிறது. பல்வேறு எதிர்மறையான செயல்களுக்கு நடுவில், தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்று எல்லோருமே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவிலேயே அதிகமாக தேர்தல் செலவு செய்கிற மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும், கோடிக் கணக்கில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. பணம் கொடுத்தால், ஓட்டு கிடைக்கும் என்பதும், தேர்தல் விதிமுறைகளை தேர்தலுக்கு தேர்தல் மீறுவது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. இந்த மாதிரியான அணுகுமுறை, ஒருகட்டத்தில் வேறு மாதிரியான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். 

'கை நீட்டிப் பணம் வாங்கிட்டோம். இப்ப என்ன பண்றதுனு தெரியல' என்று சொல்லக்கூடிய வாக்காளர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள்.  அதேபோல், நாள் ஒன்றுக்கு 200, 300 ரூபாய் சம்பாதிப்பவர்களிடம் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், எப்படி வாங்கிகொள்ளாமல் இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதில், பணம் வாங்கும் பொதுமக்களை குறை சொல்வதா? பணம் தரும் அரசியல் கட்சிகளைக் குறைசொல்வதா? மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் வேறு மாதிரியாக இருக்கிறது. ஆனால், களத்தில் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்தச் சூழலில், நேர்மையான அரசியல் எப்படி மலரும் என்று கேள்வி பலமாக எதிரொலிக்கிறது. ஆனால், இந்தச் சூழல் ஒரு கட்டத்தில் வெடித்து, ஒரு புது மாதிரியான சூழல் பிறக்கும். அப்போது, நிச்சயம் நேர்மையான அரசியல் மலர்ந்தே தீரும். நான் ஒரு அரசியல் பார்வையாளன் என்பதால், அந்த நாளுக்காக நானும், கூட்டத்தில் ஒருவனாய் காத்திருக்கிறேன்!

க.அரவிந்த் குமார், செய்தி ஆசிரியர், காவேரி நியூஸ் தொலைக்காட்சி

நிழலுக்கும் - நிஜத்துக்குமான போர் இது!

 ஜெயலலிதாவின் மரணம் எப்படி நடந்தது என்பதுதான், இந்தத் தேர்தலின் மையக்கரு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். பணப்பட்டுவாடா குறித்து எல்லாக் கட்சிகளும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், இந்த முறை பணநாயகம் என்பது இரண்டாம் பட்சம்தான். அ,தி.மு.க  தொண்டர்களைத் தாண்டி கட்சி பேதமில்லாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை வேஷதாரிகளைப்  போன்றுதான் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் பொதுமக்கள் பார்க்கின்றனர். வெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மட்டும் அல்ல இது. ஒட்டுமொத்த தமிழகமும் இந்த தேர்தலின் வாக்குறுதிகளை, பிரசாரங்களை, வெற்றி - தோல்வியை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. எந்தெந்த அரசியல் கட்சிகளை பொதுமக்கள் எந்தெந்த இடத்தில் வைத்துள்ளனர்; என்பதற்கு ஒரு தராசாகவும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
 
அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி களத்தில் இல்லாமல் இருக்கும்போது நடக்கும் தேர்தல்; எம்.ஜி.ஆர்.ருக்குப் பிறகு அசைக்க முடியாத ஆளுமையாக எழுந்த ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நடக்கும் முதலாவது தேர்தல் என்பதெல்லாம் இத்தேர்தலுக்கு  கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. தொகுதிப் பிரச்னைகளைப் பேசாமல்,  உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஊசலாட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  

நாளும் நடைபெறும் பிரசாரங்கள் பொதுமக்களை வெறுப்பின் பக்கமே தள்ளிக் கொண்டிருக்கிறது. சவப்பெட்டி போன்ற பிரசாரத்தைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இனி வரும் அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியது வெளிப்படைத்தன்மையே. எந்த ஒன்றை மறைத்தாலும், அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் சொல்லப்போகின்றன.  

நெல்சன் சேவியர், இணை ஆசிரியர், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி

கட்சிகளின் மதிப்பு குறைந்து வருகிறது..!

"உண்மையில், அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் மீது மதிப்பேதும் இருப்பதில்லை. 'உங்கள் வாக்கை வாங்கும் கலை எங்களுக்குத்

தெரியும்' என்றுதான் பிரதான கட்சிகள் உறுதியாக நினைக்கிறார்கள். பணம் கொடுத்து வாக்குகளை 'வாங்குவது' எளிதானது என்று அழுத்தமாக நம்புகிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. எவ்வளவு துல்லியமாகப் பணப்பட்டுவாடா செய்தாலும், வெற்றிக்குப் பணமும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, அதுமட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. இங்கே இன்னொரு கோணமும் இருக்கிறது. வாக்குக்குப் பணம் வாங்கிய பிறகு, அது தவறு என்று நன்றாக உணர்ந்திருந்தும்கூட, வாங்கிய பணத்துக்குச் சரியாக வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் இருக்கும் குறைந்தபட்ச நேர்மைகூட உண்மையில் அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பது  நெஞ்சைச் சுடும் நிஜமாக இருக்கிறது.

ஆர்.கே. நகர் தெருக்களில் மக்கள் காலை நேரத்தில் வீடுகளைத் திறந்தால் வாசலில் முதலமைச்சர் நிற்கிறார். மதியத்தில் முன்னாள் முதலமைச்சர் வாக்கு கேட்கிறார். மாலையில் எதிர்க்கட்சித் தலைவர் கையெடுத்துக் கும்பிடுகிறார். தமிழகத்தின் அதிகார பீடங்கள் செய்யும் இத்தகைய முறைவாசல் காட்சிகள்தான் ஜனநாயகத்தில் வாக்காளர்களின் மதிப்பை அவர்களுக்கே சொல்லிக்கொடுக்கின்றன. 

உண்மையில், பணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் தாண்டி, வாக்காளரின் உண்மையான மதிப்பை வாக்காளர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். கட்சிகள் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது. வாக்கிற்கு வழங்கப்படும் பணத்தின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே போகிறதென்றால் கட்சிகளின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறதென்று அர்த்தம்.  

- ரா.அருள் வளன் அரசு,

அடுத்த கட்டுரைக்கு