Published:Updated:

‘அந்த விமர்சனங்களுக்கு எனக்குக் கிடைத்த விகடன் விருதே பதில்!' - ஆர்.ஜே.மிருதுளா #Video

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘அந்த விமர்சனங்களுக்கு எனக்குக் கிடைத்த விகடன் விருதே பதில்!' - ஆர்.ஜே.மிருதுளா #Video
‘அந்த விமர்சனங்களுக்கு எனக்குக் கிடைத்த விகடன் விருதே பதில்!' - ஆர்.ஜே.மிருதுளா #Video

‘அந்த விமர்சனங்களுக்கு எனக்குக் கிடைத்த விகடன் விருதே பதில்!' - ஆர்.ஜே.மிருதுளா #Video

வரும் ஞாயிறன்று சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது விகடன் நம்பிக்கை விருதுகள். டாப் 10 மனிதர்கள், டாப் 10 இளைஞர்கள் மற்றும் இலக்கியம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் நம்பிக்கை ஒளிபாய்ச்சும் ஆளுமைகளை மேடையேற்றி கௌரவித்த விழா. 

2016ன் சிறந்த பண்பலைத்தொகுப்பாளராக விகடன் விருதுபெற்றவர் மிருதுளா. 'ஹாய் வணக்கம்.. வெரி குட்மார்னிங், 92.7 கேட்டுகிட்டு இருக்கிங்க. டாப் 100 கலக்கல் ஹிட்ஸ் சாங்ஸ் உடன், நான் உங்கள் ஆர்.ஜே. மிருதுளா. உள்ளே வெளியேவுக்காக..' என்று Big எப்.எம்.மில் வரும் வசீகரிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பெண்கள் தொடர்பான சமூக பிரச்னைகளை, நேரலையில் அனைத்துக் கோணங்களிலும் அலசுவதில் தனித்து நிற்கும் நம்பிக்கை மனுஷி.  

" 'மிருதுளா..' என்ன அர்த்தம்? 

"மென்மையானவள். ஆனால், நான் அவ்வளவு மென்மையானவள் எல்லாம் இல்ல. கொஞ்சம் பிடிவாதக்காரி. தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி."  

"அந்தப் பெட்டியில் என்ன இருக்கு? போலீஸ்காரங்களையே கேள்வி கேட்டு கலாய்க்கறீங்க?" 

"என் மனச ஒளிச்சு வைச்சிருக்கேன்!" சொல்லிக்கொண்டே சிரிக்கிறார். ''நான் பண்ற 'உள்ளே வெளியே' ஷோவோட கான்செப்ட்டே, சமூக பிரச்னைதான். உதாரணமா இன்னக்கு வெங்காயம் விலை அதிகமாயிருச்சுன்னா, அந்த பெட்டியில வெங்காயத்தை ஒளித்து வைத்துக்கொண்டு, அது தொடர்பாக சுற்றிச் சுற்றிக் கேள்வி கேட்பேன். இறுதியில், நானே அதற்கான விளக்கத்தைச் சொல்லி, அந்தப் பெட்டியை ஓபன் பண்ணி பதிலயும் சொல்லியிருவேன். அந்த நிகழ்ச்சியை கேட்டுப்பாருங்க. அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். தொடர்ந்து கேளுங்க 'உள்ளே வெளியே'.”

"ஆர்.ஜே. எப்படி?" 

"நான் வளர வளர.. சமூகத்தில் நடக்கும் பெண்கள் தொடர்பான பல நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்தன. அதனால், மூன்று நாள் கூட சாப்பிடாமல், தூங்காமல் ரொம்ப சிரமப்பட்டேன். சில நாட்களில் நான் இயல்பு நிலைக்கு மாறினாலும், அதன் தாக்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் சூரியன் எப்.எம்.மில் சேர்ந்தேன். ரொம்ப ஹார்டு ஒர்க் பண்ணினேன். நிறைய விஷயங்களைத் தேடித் தேடி படிக்கத் தொடங்கினேன். படிச்ச, பாதிச்ச விஷயங்களை ஷோவில் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுக்கு அது பிடிச்சதா ஆகிடுது. அது எனக்கு பெரிய ஆறுதலாவும், மகிழ்ச்சியாவும் இருக்கு.” 

"உங்கள் குரலில்.. ஒரு 'லைவ்' உயிரோட்டம் இருக்கிறதே?" 

"கடவுள் இயற்கையாகக் கொடுத்த குரல் வளம் இது. முதலில் நான் என்னை ரசிப்பேன். இந்த உலகத்திலேயே  ரொம்ப சந்தோஷமானவளா என்னை நினைச்சுக்குவேன். அந்த நினைப்போடதான், என் ஷோ பண்ணுவேன். அந்த அதிர்வலைகள், கேட்பவர்களையும் ஏதோ செய்துவிடுகிறது போல!  போன வருஷம் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அந்த நிகழச்சிக்கு வந்த ஒரு 65-70 வயது மதிக்கத் தக்க பாட்டி ஒருத்தங்க.. 'நீங்கதான் மிருதுளாவா' என்று என் கையை இறுக்கமா பிடிச்சிகிட்டு என் கன்னத்தை வருடி முத்தமிட்டாங்க. அந்த மாதிரியான அன்பான நேயர்கள்தான் எங்களுக்கெல்லாம் பலம். 

பெண் என்பதாலேயே எதுவும் கடினமோ, ஈசியோ கிடையாது. முதலில் என் குரலுக்கு என்ன வரும் என்று தீர்மானிப்பேன். அதை வைத்து, என்ன பேச வேண்டும் என்று யோசித்து, அதன்படி இப்ப வரைக்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு  வரேன்." 

"முதல் நாள் முதல் ஷோ?" 

"நல்லா ஞாபகம் இருக்கு. ரொம்ப பயமா இருந்தது. நிறையத் தடவை கண்ணாடி முன்னாடி நின்னும், நண்பர்கள் முன்னாடி நின்னும் பேசிப் பேசிப் பார்த்தேன். அதே மாதிரியே... முதல் நாள் முதல் ஷோவுல அசத்திட்டேன். உள்ளுக்குள்ள பயம் இருந்தது தனிக்கதை. இப்ப நினைச்சா கூட த்ரிலிங்கா இருக்கு. இப்ப அந்தப் பயம், கூச்சம் எல்லாம் போயே போச்சு. அதெல்லாம் ஸ்வீட்டான மெமரிஸ்."  

"சவால்கள்?" 

"வித்தியாசமான அனுபவங்கள்.. மறக்க முடியாத அனுபவங்கள் என்று நிறைய இருக்கு. அவை எல்லாம் சவாலான ஒன்றுதான். முக்கியமா ஒரு புது விஷயத்தை முயற்சி பண்ணிட்டு, யாராவது தோத்துருப்பாங்க. அதை இன்னொருத்தர், மறுபடியும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, முடியாது என்றவுடன், அது மூலையில் போய் முடங்கிவிடும்.  அதை நான் பிரேக் பண்ண நினைப்பேன். அதுபோன்ற புது ஐடியாக்களை எடுத்து சக்சஸ் பண்ணத் துடிப்பேன். அதைச் சாதிக்கும்போதுதான், நம்ம எதையோ ஒன்றைச் சாதித்துவிட்ட பீல் கிடைக்கும். இதுதான் நான். இப்படிதான் சவால்கள் நான் எதிர்கொள்வேன். இதுதான், அது மட்டும்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல், நமக்கென்று வரையறுக்கப்பட்ட கட்டத்துக்குள்ள, நம்மால் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அதை நான் எப்போதும் நம்புவேன்.”  

" ‘மாரத்தான் ஷோ’ சாதனை பற்றி?" 

"பெண்கள் தொடர்பான விஷயங்களை எடுத்துக்கொண்டு, சமூக வெளியில் சில விழிப்புஉணர்வை ஏற்படுத்த 4 நாட்கள், 48 மணி நேரம் எனத் தொடர்ந்து இரவுகளில் தெருத்தெருவாக அலைந்து திரிந்து தொடர்ச்சியாகக் கண்விழித்து ‘மாரத்தான் ஷோ’ நடத்தி சாதனை படைத்தேன். அதில் பல அனுபவங்கள் எனக்குக் கிடைத்தது. முதலில் பெண்களால் எதுவும் முடியும், என்று வீட்டில் உள்ள ஆண்கள் நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினேன். அது பெண்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.  புதியவர்களின் புது முயற்சியை சில நடுநிலையாளர்கள் அங்கீகரிக்கும்போது, விழியோரத்தில் எட்டிப்பார்க்கும் அந்த கண்ணீர் துளிகளுக்கு வார்த்தைகளே கிடையாது. அந்தத் துளிகள் அவ்வளவு அர்த்தமுள்ளவை, அற்புதமானவை.’’

விகடன் நம்பிக்கை விருது பற்றி அறிந்த அந்தத் தருணம்?

’’விகடன் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் எனக்கு கிடைத்ததும், நேராக வீட்டுக்குச் சென்று 'உங்களிடம் முக்கியமான விசயம் பேசணும்' அப்படினு சொல்லிட்டு.. என் கணவரையும், குழந்தையையும் கோயிலுக்கு கூட்டிட்டுப் போயிட்டேன். அங்க போனதும், எனக்கு பேச்சு வரல. என் கணவரையும், குழந்தையையும் பார்க்கிறேன்.. தானாகவே கண் கலங்குது. என் கணவர் ஏதோ பிரச்னையானு பயந்துட்டார். ஒரு வழியா.. கண்ண தொடச்சிட்டு, அவ்வளவு சந்தோசத்தையும் மனசுக்குள்ளயே வச்சுகிட்டு 'விகடன் விருதை'ப் பற்றி என் கணவரிடம் சொல்லி முடிப்பதற்குள், மறுபடியும் கண்ணோரத்தில் நீர் துளி. நாங்கள் இரண்டு பேரும் நிக்கிறது கோயில். அந்த தருணங்கள்கூட.. அவ்வளவு சந்தோசத்தையும் மனசுல மறைச்சு வச்சுகிட்டு, என் தலையில் சின்னதாய் ஒரு முத்தம். அப்படியே தலைய வருடி விட்டாரு பாருங்க.. என்னால மறுபடியும் அழாம இருக்க முடியல. அந்த முத்தம், அந்த வருடல்.. இன்னொரு தேசிய விருதா நினைச்சேன். என் பொண்ணு என்னம்மா.. என்னம்மா என்று கேட்டா.. விருதைப் பற்றி அந்த நான்கு வயசு சின்ன குழந்தைக்கு புரிஞ்சுக்க முடியல. அதனால 'நான் ஜெயிட்டேன்மா'னு சொன்னேன். உடனே, 'ஏய்... எங்க அம்மா ஜெயிச்சுட்டாங்க.... எங்க அம்மா ஜெயிச்சுட்டாங்க... ஜாலி.. ஜாலி..' என்று அவளும் சந்தோசத்துல கத்த ஆரம்பிச்சுட்டா. கோயில இருந்தவங்கெல்லாம் எங்களையே பார்த்தாங்க. அந்த தருணத்தை என் வாழ்நாள்ல எப்போதுமே நான் மறக்க மாட்டேன். அந்த தருணம் மட்டும் இல்ல, சரியான நேரத்துல விகடன் கொடுத்த இந்த விருதையும் எப்போதும் நான் மறக்க மாட்டேன். சிலரின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும்  பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தபோது, 'விகடன் விருது'தான் அவர்களுக்குப் பதில் சொன்னது. அந்த நன்றி எப்போதும் என்னிடம் இருக்கும்."

"சமூக பிரச்னைகளை தொடர்ந்து பேசுவதும், அதை வீடியோவாக சோஷியல் மீடியாவில் பதிவு செய்வதும் எப்படி?" 

"நம் பொதுவாழ்க்கையில், எந்த விஷயம் நம்மைப் பாதிக்கிறதோ, அதுதான் சமூக பிரச்னை. இப்படியெல்லாம் நடக்கிறது.. அதற்குத் தீர்வு சொல்லுங்கள் என்று நேரலையில்.. மனதை வருடும்படி பேசுகிறேன். ஒருவேளை அத்தகைய செயல்களைச் செய்பவர்கள், என் பேச்சைக் கேட்டால் மீண்டும் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள் உண்டு. அதைப் பல தருணங்களில் நான் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே வருகிறேன். அதற்கான பலனும் கிடைப்பதாகவே உணர்கிறேன். அதை வேறு ஒரு கோணத்தில், வீடியோவாக பதிவு செய்கிறேன். இது பொதுவெளியில் பெரிதாகப் பேசப்படுகிறது. எனக்கு மட்டும் அல்ல.. நம் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை இருக்கிறது. அதை நான் உணர்கிறேன். அதன் வெளிப்பாடுதான் இதெல்லாம்." 

"சினிமா ஆசை?" 

'என்னடா பிரச்னைக்குரிய கேள்வியைக் கேட்கவே இல்லையேனு பார்த்தேன். ஆர்.ஜே., வி.ஜே., பத்திரிகை நண்பர்கள் எல்லாம் இப்ப சினிமாவுக்கு போறது டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது.  சரியான கதை, சரியான கதாபாத்திரம் வந்தால்.. எனக்குப் பிடித்திருந்தால்.. என்னால் முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.” 

"இலக்கு?" 

"அமைதியா இருக்க வேண்டும். எதையும் அமைதியாக இருந்துவிட்டுச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் எப்போதும் செயல்படுவேன். இதுதான் சீக்ரெட் ஆஃப் மை சக்சஸ்!”  

வாழ்த்துக்கள் மிருதுளா!

மேலும் சில கேள்விகளுக்கு மிருதுளாவின் பதில்களோடு..  வீடியோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு