Published:Updated:

நடிகர் 'டணால்’ தங்கவேலுக்கும், ‘லட்சுமி கல்யாணம்’ அஸ்வினுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

நடிகர் 'டணால்’  தங்கவேலுக்கும், ‘லட்சுமி கல்யாணம்’ அஸ்வினுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
நடிகர் 'டணால்’ தங்கவேலுக்கும், ‘லட்சுமி கல்யாணம்’ அஸ்வினுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

’சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என்னனு சொல்லுங்களேன்’ என்று கேட்டால், ‘அதுதான் எனக்குத் தெரியுமே...ஆனால் சொல்லமாட்டேனே’ என்று தாத்தாவின் புகழ்பெற்ற காமெடி சீனை ஞாபகப்படுத்தி நம்மைக் கலாய்க்கிறார் சின்னத்திரை நடிகர் அஸ்வின். 

 அந்தக் கால தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஆளுமையான   நடிகர் தங்கவேலுவின் பேரன் என்கிற கர்வம் துளியுமின்றி கலகலப்பாக பேசுகிறார். மனிதர், ரீசன்ட்டாக ’லட்சுமி கல்யாணம்’ தொடரில் கல்யாண் என்கிற பெயரில் ஹீரோவாக அசத்திக் கொண்டிருக்கிறார். அவரை ஒரு உணவு இடைவேளையில் உட்காரவைத்து ஒரு ஷார்ட் ப்ரேக் இன்டர்வியூ செய்தோம்.

"சென்னை என்னோட தாய்மண். வளர்ந்ததெல்லாம் இங்கதான். காலேஜ் படிச்சது, கலாட்டா செஞ்சதுனு என்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துக்கும் சாட்சியா இருக்கறது சென்னைதான். இப்போ வளசரவாக்கத்தில் ஜாகை,” என்று சென்னை புகழ் பாடுகிறார்.

“நீங்க சீரியல் உலகில் குதிச்ச அந்த முதல் தருணம் எப்போ?”

“குதிக்கலாம் இல்லைங்க. நடந்துதான் வந்தேன். என்னோட அம்மாவும், ராதிகா மேடமும் நண்பர்கள். நானும் காலேஜ் முடிச்சுட்டு, தாத்தா மாதிரி சினிமால நடிக்க ஆசைப்பட்டு சான்ஸ் தேடிட்டு இருந்தேன். அப்போதான் ராதிகா மேம் மூலமா முதன்முதலில் சீரியலில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. இதோ இப்போ ‘லட்சுமி கல்யாணம்’ சீரியலின் கதாநாயகன் ‘கல்யாண்’ அவதாரம் எடுத்துருக்கேன்.”

”கல்லூரிக் காலம் டூ சீரியல் உலகம்...என்ன வித்தியாசம்?  

”காலேஜ் படிச்சப்போ அசைன்மென்ட்ஸ், எக்ஸாம்ஸ்னு பயத்தில் காய்ச்சல் வர அளவுக்கு பிரச்னைகள் இருக்கும். ஆனால், இப்போ நடிப்பு ரொம்பவே ஜாலியா இருக்கு. நிறைய விஷயங்களைக் கத்துக் குடுக்குது. காலேஜ்ல அரியர் வச்சா அடுத்த செமஸ்டர்ல எழுதி பாஸ் பண்ணிடலாம். ஆனால், இங்க நடிப்பில் சொதப்பிட்டே இருந்தோம்னா, அடுத்த வாய்ப்பு கிடைக்கறதே கஷ்டம். பட், ரொம்ப நல்லா இருக்கு. நைட் ஷூட்ஸ், நிறைய ப்ரண்ட்ஸ்னு காலேஜ், சீரியல் ரெண்டுமே ஜாலி, கேலிகளையும் தரக்கூடியதுதான்.”

“தாத்தா இருந்தப்போ அவரோட செல்ல பேரனா நீங்க?”

“ரொம்ப ரொம்பச் செல்லம். ஆனாலும், சொன்னா நம்பமாட்டீங்க செம வாலு நான். இப்போதான் பார்க்க ரொம்ப அமைதியா இருக்கேன். தாத்தா என் தொல்லை தாங்க முடியாம அடிக்கடி கயிறால் கட்டிப் போட்டுடுவார். இருந்தாலும் வீட்டில் நடிப்பு தாண்டி தாத்தா, அன்பான தாத்தாவா மட்டும்தான் இருப்பார். அவர் நடிகர் அப்டிங்கறதே எனக்கு ஒரு வயசு வரை தெரியாது. நிஜமாவே வீடு, வேலை ரெண்டையும் பேலன்ஸ் பண்ற விஷயத்தை அவர்கிட்ட இருந்துதான் கத்துகிட்டேன். தாத்தா பேருக்கு ஏத்த மாதிரி உண்மையிலேயே தங்கம்தான்.”

“ரீசன்ட்டா இரண்டு சீரியல்களில் ஹீரோ நீங்க. உங்க ஹீரோயின்ஸ் எப்படி?”

“தாமரை சீரியலில் என் கூட நடிக்கிற நீலிமாவும், நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நீலிமா ரொம்ப ஜோவியல் டைப். உதவி செய்யற குணம் அதிகம். லட்சுமி கல்யாணம் தீபிகா, இப்போதான் சீரியல் உலகிற்கே வந்துருக்காங்க. அதுக்கு முன்னாடி நியூஸ் ரீடரா இருந்தவங்க. வந்த புதுசில் நடிப்பில் சின்னசின்னத் தயக்கங்கள் இருந்தாலும் இப்போ செமயா ஃபெர்பார்ம் பண்றாங்க.”

“வேலை தாண்டி உங்களோட பொழுதுபோக்கு என்ன?”

“இப்போதைக்கு ஃபுல் டைம் பொழுதுபோக்கே என் தங்கை மகள் ஆத்யா கூட நேரம் செலவழிக்கிறதுதான். அவளோட பெயருக்கு ஆதி, உருவாக்கம்னு அர்த்தம். அவளும் பேருக்கு ஏத்த மாதிரி எங்க வீட்டில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் உருவாக்கிக்கிட்டு இருக்கா. குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கம். அவளோட குறும்புகள் எங்க வீட்டையும் சொர்க்கமா மாத்திகிட்டு இருக்கு.” கன்னம் குழிய சிரிக்கும் அஸ்வினுக்கு கல்யாணம் ஆகி ஒருவருடம் ஆகப்போகிறது என்பது இளம் டிவி சீரியல் ரசிகைகளுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் கேர்ள்ஸ்!