Published:Updated:

‘‘அம்மன் கெட்டப், சினிமா செட்டப்...!’’ ‘சரவணன் மீனாட்சி’ ரக்‌ஷிதாவின் ஆபரேஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன்  மீனாட்சி தொடரில் தன் பார்வையால், செல்லக்குறும்பால், தன் பெரிய விழிகளால் ரசிகர்களைக் கொள்ளை கொள்பவர் ரக்‌ஷிதா. எப்போதும் காதலும் கோபப்பார்வையுடனும் சீரியலில் வலம் வரும் ரக்‌ஷிதா அம்மன் வேடத்தில் தோன்றி மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். 

ஏன் அம்மணி இந்த மாற்றம்? பக்தி அதிகமாயிருச்சா என்கிற கேள்வியை அவர் முன் வைத்தோம். 

'‘எவ்வளவு நாள்தான் ஒரே கேரக்டரையே டைரக்ட் பண்றது. எனக்கும் சேஞ்ச் வேணும் இல்லியானு எங்க இயக்குநர் அடிக்கடி சொல்லிட்டு இருப்பார். அதுக்கேத்த மாதிரி சீரியல் கேரக்டர்களுக்கு ட்விஸ்ட் வைச்சுட்டே இருப்பார். 

நானெல்லாம் அம்மன் கெட்டப்ல நடிப்பேனு நினைச்சுக்கூட பார்த்ததில்ல. ஆனா அம்மன் கெட்டப் மேல ஒரு கிரேஸ் இருந்தது. எப்படியாவது சினிமாவுலேயாவது அம்மன் கெட்டப்ல நடிச்சுரணும்ன்ற அளவுக்கு கிரேஸி கேர்ள் நான். 

இவ்வளவு சீக்கிரத்துல அதுவும் நான் வேலை பர்த்துட்டு இருக்கிற சின்னத்திரையிலேயே அந்த வாய்ப்பு வரும்னு நினைச்சுக்கூட பார்க்கலை. சீரியல்படி நாங்க சாமி கும்பிட கோவிலுக்குப் போவோம். அப்ப எனக்கு அருள் வந்து நாம் அம்மனா ஆகுற மாதிரி சீன் வரும். அம்மனா நடிக்கிறப்ப அடி மனசுல 'எங்க நம்மளை கேலி பண்ணிருவாங்களோ'ன்னு பயம் நிறைய இருந்தது. 

மனசைத் தைரியமா வைச்சுகிட்டு நடிச்சு முடிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க... இதுவரை என்னைக் குறும்பா, கோபமா பார்த்த ரசிகர்களுக்கு அம்மனா நான் நடிச்சது ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு நான் நடிச்ச காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பினாங்க. பலர் அந்தக் காட்சி வர்றப்ப என்னை கையெடுத்துக் கும்பிடுறதா சொன்னாங்க. அதைக்கேட்டப்ப உடம்பு சிலிர்த்திடுச்சு" என்று வார்த்தைகளில் நெகிழ்கிறார் ரக்‌ஷிதா. 

'உப்புக் கருவாடு'க்கு அப்புறம் சினிமா பக்கம் உங்களைப் பார்க்க முடியுறதில்லையே" என்றால்... 

'‘அதுக்கப்பறம் இரண்டு படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. ஆனால், அது எதுவும் வாவ்..நைஸ்''ன்னு சொல்ற மாதிரியான கேரக்டர்கள் இல்ல. அனேகமா என்னோட அம்மன் கெட்டப் பார்த்துட்டு சினிமா வாய்ப்புகள் நிறைய வரலாம்னு நினைக்கிறேன். எனக்கு சினிமாலயும் பட்டையைக் கிளப்பனும்னு ஆசை. பார்ப்போம் என் ஆசைக்கு தீனி கிடைக்குதான்னு" என்றவரிடம் உங்களை வைச்சு நெட்டிசன்கள் போடுற மீம்ஸ்களை பார்க்கிறீங்களா என்றதும்.. 

'‘தொடர்ந்து மூணு பகுதியிலேயும் நான் நடிக்கிறேன். ஆனா என்கூட நடிக்கிற சரவணன் கேரக்டர் மாறிட்டே இருக்காங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க... என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு கேவலப்படுத்தி மீம்ஸ் போட்டாங்க. மனசு நொந்து போச்சு. கோவத்தோட உச்சிக்குப் போய் இனிமே சீரியலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு டைரக்டர் கிட்ட போய் நின்னேன். 

'பொதுவெளியில் இருக்கிறவங்க இந்த மாதிரி விமர்சனங்களை எல்லாம் கடந்துதான் வரணும். நீ இதை அவங்க சொல்ர மாதிரி ஃபன்னா எடுத்துக்கோ... இல்லையா கண்டுக்காத. ரியாக்ட் பண்ணினாதான் நம்மளை அதிகம் ஓட்டுவாங்க"ன்னு சமாதானப்படுத்தினார். அதுகப்புறம் இப்பலாம் என்னை வைச்சு வெளி வர்ற மீம்ஸை நான் கண்டுக்கிறதே இல்ல" என்பவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக வந்து கலக்குகிறார். 

''குழந்தைங்ககிட்ட நாம கத்துக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்குது. என் வேலையை ரசிச்சு செய்றேன்" என்று குட்பை சொன்னார் ரக்‌ஷிதா.