மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா, படம்: ஆ.முத்துக்குமார்

##~##

 ஒரு கலெக்‌ஷன்!

செம சென்டிமென்ட்!

''ஜீ தமிழ் 'தூள் பறக்குது’ புரோகிராம் காம்பயர் சமீனா, ஷூட்டுக்கு வரும்போதெல்லாம் பத்து, பதினஞ்சு செருப்புங்களோடதான் வர்றாங்க''னு கேள்விப்பட்டதும்... அதிர்ச்சியாகி, ஏவி.எம் ஸ்டூடியோவுல அதிரடியா மேடத்தை மீட் பண்ணினேன். கலர் கலர் ஷூக்களா அடுக்கி வெச்சுருந்தாங்க.

''எங்க வீட்ல நான் மட்டும்தான் பொண்ணு. அண்ணா, கஸின் பிரதர்ஸ்னு சுத்தி பசங்கதான். அதனாலயோ... என்னவோ, எனக்கு விதவிதமா நகைங்க போட்டுக்கணும்னு ஆசை இல்ல. டிவி-க்காக வேற வழி இல்லாம இப்பத்தான் நிறைய நகைகள் வாங்க ஆரம்பிச்சுருக்கேன். ஆனா, காலேஜ் படிக்குபோதே செருப்பு மேலதான் ரொம்ப கிரேஸ். 'பிளிங்’னு சொல்ற ஜிகுஜிகு ஷூக்கள்தான் என்னோட ஆல் டைம் ஃபேவரைட். எனக்கு மட்டுமே கிட்டத்தட்ட 75 செருப்பு இருக்கும் வீட்டுல. பழசாயிட்டாகூட தூக்கிப் போட மனசு வராது தெரியுமோ. வீட்டை க்ளீன் பண்ணும்போது அம்மா எடுத்து போட்டுருவாங்க ளோனு ஒளிச்சு வேற வெச்சுடுவேன்... அவ்ளோ சென்டிமென்ட்!

அதிகமா யூஸ் பண்ணாத டிரெஸ், ஃபேன்ஸி நகை... இதையெல்லாம்கூட யோசிக்காம யாருக்காச்சும் கொடுத்துடுவேன். ஆனா, செருப்புங்க நோ சான்ஸ்! அம்மா திட்டிட்டே இருக்கறதால... கலெக்ஷனை கொஞ்சம் குறைச்சுருக்கேன். இப்போதைக்கு... 35 ஜோடிங்கதான் வீட்டுல இருக்கு.''

ரொம்பத்தான் கவலை!

கேபிள் கலாட்டா!

ஒரு பிஸினஸ்

'சகலகலாவல்லவன்..!'

'ஒரு கிளி உருகுது... உரிமையில் பழகுது... ஓ மைனா மைனா...’ - இந்தப் பாட்டை கேட்டாலே... ரோபோ சங்கருடன் அரவிந்த் ஆடிய டான்ஸ்தான் ஞாபகம்தான் வரும்.

''ஜி தமிழ்ல ஹோம் மினிஸ்டர், இமயத்துல காமெடி பஜார்னு... சேனலுக்கு சேனல் ஏக கலக்கலா இருக்கே அரவிந்த்..?''

''இன்னும் பெரிய லிஸ்ட்டே இருக்கே. டி.வி. தவிர, ஸ்டேஜ் ஷோ, சொந்தமா ஆடியோ அண்ட் வீடியோ ஸ்டூடியோ, அப்புறம் லைட் மியூஸிக்னு நம்ம பிஸினஸ் ஏரியா ரொம்ப பெருசு தெரியும்ல...''

''எப்படி... எப்பூடி?''

கேபிள் கலாட்டா!

''அம்மா - கிளாஸிக்கல் டான்ஸர், அப்பா - மியூஸிஷியன், பெரிய அண்ணா - டிரம்மர், சின்ன அண்ணா - சிங்கர் (யப்பா... முடியல)! ஆறாவது ஏழாவது படிக்கும்போதே கீ-போர்டு கிளாஸுக்கு போக ஆரம்பிச்சேன். அங்க இன்னொரு மாஸ்டர் ஃப்ளூட் கிளாஸ் எடுத்துட்டிருந்தார். எனக்கும் ஃப்ளூட் ஆசை வந்துச்சு. ஆனா, 'ஒழுங்கா ஒரு விஷயத்தைக் கத்துக்கோ’னு கறாரா சொல்லிட்டாங்க...''

''அப்புறம்..?''

''நாம யாரு... வீட்டுல கொடுக்கற காசையெல்லாம் சேர்த்து வெச்சு, ஃப்ளூட் வாங்கி, வாசிச்சுட்டே இருந்தேன். கொடுமை தாங்க முடியாம, கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. ஒண்ண மாத்தி, ஒண்ணா கத்துக்க ஆரம்பிச்சேன். கீ-போர்டு, ஃப்ளூட், மேனுவல் அண்ட் ரிதம் டிரம், தபேலா, மோர்சிங், புல்புல்தாரா... இப்படி பல இன்ஸ்ட்ரூமென்ட்ஸையும் இப்ப வாசிக்கிறேன். கூடவே... பாட்டும்! கடைசியா ஆசைப்பட்டு வீணை கிளாஸ் போக ஆரம்பிச்சேன். அப்பதான் 'விஜய் டி.வி கலக்கப் போவது யாரு’ வாய்ப்பு. அதனால, வீணை ஆசை... நிராசையாயிடுச்சு.''

''இந்த சின்ன உருவத்துக்குள்ள இத்தனை திறமைகளா?''

''இதுவரைக்கும் உலகம் முழுக்க சுத்தி 13 ஆயிரம் ஸ்டேஜ் ஷோ பண்ணியிருக்கேன். ஆஸ்திரேலியா, ஜப்பான், சவுத் ஆப்பிரிக்கா... இது மூணு மட்டும்தான் போகாத நாடு. எப்பூடி!''

''சின்ன வயசுல ஸ்கூல் பக்கமே எட்டிப் பாக்காம இருந்தா இப்படி ஏதாச்சும் செய்துதானே ஆகணும்...''

''ஹலோ மேடம்... ஐயா, இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சாச்சு. தெரியும்ல!''

''அப்ப ஷேக்ஸ்பியர் போட்ட ஆம்லெட் நல்லாவே தெரியும்னு சொல்லுங்க!''

ரீட்டாக்கா ஜூட்!

கேபிள் கலாட்டா!

ஒரு ஜோக்!

காமெடி... கீமெடி!

தேச்சையா 'ஆதித்யா சேனல்'ல வர்ற 'ஜோக்கடி’ அர்ச்சனாவை பார்த்தேன்.

''என்ன மேடம் வடிவேலு பாலாஜியோட செமையா கலக்கறீங்க போல...''னு மெதுவா 'பிட்'டை போட்டேன்.

''நீ வேற ரீட்டா... உண்மையைச் சொல்லப்போனா நான் ரொம்ப அப்பாவி. ஆரம்பத்துல சீரியல் மட்டும்தான். நம்ம ஈரோடு மகேஷ் சார்தான் ஆதித்யா வாய்ப்பை வாங்கித் தந்தார். காம்ப்யரிங்னா ரொம்ப பயம். 'சேனல் ஹெட்' வஸந்த் சார் என்கரேஜ் பண்ணினாரு. க்ளிக் ஆயிடுச்சு!''

''சரி, வாழ்க்கையில, உங்கள கடிச்ச ஜோக் ஏதாச்சும் சொல்றது?''

''கடிச்ச ஜோக்கா... இது புது டிரெண்ட்டாவுல இருக்கு... சரிசரி சொல்றேன். சின்ன வயசுல பென்சில் பட்டாசு கொளுத்தும்போது, அது கையில வெடிச்சுடுச்சு. அதுலருந்தே பட்டாசுனா பயம். இப்ப, கார்ல போயிட்டிருக்கும்போது சின்ன பசங்க ரோட்ல பட்டாசு வெடிச்சுட்டு இருந்தாங்க. கார்ல ஏடாகூடமா பட்டு, காரே வெடிச்சுடுமோன்னு ஒரே பயம் (நீங்க அப்பாவி இல்ல மேடம்... ரொம்ப அப்பாவி)! காரை நிறுத்தி, 'ஏண்டா, கார் வருது இல்ல... அப்புறமா வெடிக்கறதுதானே?'னு அதட்டினா, 'மேடம்... நீங்க ஆதித்யா காமெடி பீஸுதானே. கார்லயே வெடிக்கலாமா’னு இஷ்டத்துக்கு கேட்டு, ஆளாளுக்கு கையில பட்டாசோட சுத்தி நின்னு ரகளை பண்ணிட்டானுங்க. நல்லவேளை, அங்க இருந்த பெருசுங்கதான் காப்பாத்தி கரை சேர்த்தாங்க. 'காருக்குள்ள பத்த வைக்காம விட்டானுங்களே'னு தப்பிச்சு வந்துட்டேன்!''

''டோண்ட் வொர்ரி... பி ஹேப்பி''

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

 கேன்சருடன் வரும் குளிர்பான அரக்கன்!

''சன் நியூஸ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான சிறப்பு விவாத நிகழ்ச்சியில், கேன்சர் பற்றி கருத்துச் சொன்னார்கள். அப்போது, 'பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களைச் சாப்பிட்டால்... அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலக்கூறுகளால் கேன்சர் வரும் ஆபத்து இருக்கிறது' என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்த எனக்கு, அடுத்து அவர்கள் சொன்னது, ஆறுதல் அளிப்பதாக இருந்தது. 'மோர், எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற இயற்கை சாறுகளை வீட்டிலேயே தயாரித்துக் குடியுங்கள். சோம்பேறித்தனப்பட்டு குளிர்பான அரக்கன்களின் பிடியில் சிக்காதீர்கள்' என்றனர். மக்கள் நலனில் அக்கறை காட்டும் நல்லதொரு விழிப்பு உணர்வு விவாதம்'' என்று மகிழ்கிறார் அண்ணாமலை நகரில் இருந்து கவிதா பாலாஜி.

பின்னணி இசை எதற்கு?

''பொதிகை தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது காரசாரம் நிகழ்ச்சி. சமீபத்தில், 'முதியோர் பாதுகாக்கப்படுகின்றனரா?' என்று இந்நிகழ்ச்சியில் விவாதித்தனர். முதியோர் இல்லங்களில் விடப்பட்ட முதியோர், தங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்லிக் கண்ணீர் சிந்தினர். ஆனால், அவர்கள் பேசுவது சரியாக காதில் விழாத அளவுக்கு, பின்னணியில் வயலின் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. பின்னணி இசையை போடுவதற்கு இடமே இல்லையா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் பெங்களூருவில் இருந்து அனிதா ராமச்சந்திரன்.

தெளிவான சைகை மொழி!

''புதிய தலைமுறை செய்தி சேனலில் இரவு 7 மணிக்கு செய்தி ஒளிபரப்பாகும்போது, காதுகேளாதோருக்கான சைகை மொழியையும் சேர்த்தே ஒளிபரப்புகிறார்கள். இது, காது கேளாதோருக்கும், வயதானவர்களுக்கும் பயனுள்ள நிகழ்ச்சி. ஆனால், அதை புரிந்துகொள்வதுதான் சற்று சிரமமாக இருக்கிறது. இன்னும் தெளிவாக சைகைளை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்'' என்று சொல்கிறார் வந்தவாசியில் இருந்து பி.கஸ்தூரி.