Published:Updated:

'மாப்பிள்ளை' சீரியலில் கலக்கும் அந்த நாலு பேர் இவங்கதான்!

'மாப்பிள்ளை' சீரியலில் கலக்கும் அந்த நாலு பேர் இவங்கதான்!
'மாப்பிள்ளை' சீரியலில் கலக்கும் அந்த நாலு பேர் இவங்கதான்!

'மாப்பிள்ளை' சீரியலில் கலக்கும் அந்த நாலு பேர் இவங்கதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'மாப்பிள்ளை' தொடருக்கு இல்லத்தரசிகளிடம் இருந்து லைக்ஸ் குவிகிறது. இந்த சீரியலில் செந்தில் - ஸ்ரீஜா தவிர்த்து இந்த நான்கு பேர் கவனம் ஈர்க்கிறார்கள். அதன் விவரம்...

ரம்யா :

'மாப்பிள்ளை'  தொலைக்காட்சித் தொடரில் அனைவருக்கும் சீனியர் ரம்யா. சீரியலில் நடிக்க வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. மாடலிங் புகைப்படக்காரராக என்ட்ரியானவர் இன்று சீரியல் ஹீரோயின் பட்டியலில் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் முதன்மையாக இருக்கிறார்.

"நான் ஒரு போட்டோகிராஃபர். மாடலிங் போட்டோ ஷூட் பண்ணிட்டிருந்தேன். ஒருநாள் என் போட்டோ ஆல்பத்தைக் கொடுக்க விஜய் டிவி-க்குப் போயிருந்தேன். 'நீங்களே ஒரு மாடல் மாதிரி அழகா இருக்கீங்க. நடிக்கிறீங்களா?'னு கேட்டாங்க. நானும் `வர்ற வாய்ப்பை ஏன் விடணும்?'னு நடிக்கச் சம்மதிச்சேன். 'இது ஒரு காதல் கதை' என்ற தொடர்தான் நான் நடிச்ச முதல் தொடர். இதுக்கு கே.பாலசந்தர் சார்தான் இயக்குநர். முதல்ல நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். அவர்தான் பொறுமையா  சொல்லிக்கொடுத்து, எனக்குள்ள இருந்த நடிகையை முழுமையா வெளியே கொண்டுவந்தார். தொடர்ந்து நிறைய தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதுல சிறந்த தொடர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிச்சுட்டிருந்தேன். அப்பதான் பாலுமகேந்திரா சார் இயக்கி நடிச்ச 'தலைமுறைகள்' படத்துல முக்கியமான ஒரு கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தின் மூலமா எனக்கு எக்கச்சக்கப் பாராட்டுகள். தமிழ் சினிமாவின் பிதாமகர்களாக இருந்த ரெண்டு இயக்குநர்கள்கிட்டயும் வேலைசெஞ்சது என் பாக்கியம்.

இப்ப 'மாப்பிள்ளை' தொடரில் நடிச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்சம் டெரரான கேரக்டர்தான். நான்தான் வீட்டோட மூத்த அக்கா. ஆடியன்ஸுக்குப் பார்க்கப் பார்க்க என்னைப் பிடிக்கும்னு நினைக்கிறேன். இப்ப பாலா சார் இயக்கிட்டிருக்கும் 'நாச்சியார்' படத்துலயும் நடிக்கிறேன். அதுல என்ன கேரக்டர்னு இப்ப சொல்ல மாட்டேன். அது படம் வர்ற வரைக்கும் சஸ்பென்ஸ்" என தம்ஸ்அப் காட்டுகிறார். 

டீனு நீரோ :

டீனு நீரோ, இலங்கைப் பொண்ணு. நடிக்க வேண்டும் என்பதற்காகவே கடல் தாண்டி தமிழகம் வந்திருக்கிறார். "அங்கே ஒரு தமிழ் எஃப்.எம்-ல ஆறு வருஷங்களா ஆர்.ஜே-வா இருந்தேன். அப்ப ஒரு சேனலில் புதுமுகங்களை வெச்சு ஒரு தொடர் ஆரம்பிச்சாங்க. எனக்கு அதுல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. சிலர் 'சூப்பரா நடிக்கிறே'ன்னு பாராட்டினாங்க. எனக்கும் செம எனர்ஜியா இருந்துச்சு. அப்புறம் சில குறும்படங்கள் பண்ணினேன். அதுலயும் நல்ல பேரு கிடைச்சது. சரி, நடிப்புதான் இனி என் கரியர்னு தோணுச்சு. இதுல, அடுத்த கட்டம் வரணும்னு நினைச்சுதான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி, விஜய் டிவி-யில ஒரு ஆடிஷன் வெச்சாங்க. அதுல கலந்துக்கிட்டேன். ஆனா, அதுல செலெக்ட் ஆக முடியலை. 'ஏதாவது நல்ல வாய்ப்பு வந்தால் சொல்றோம்'னு சொன்னாங்க. ரெண்டு வருஷங்களா காத்திருந்துதான் 'மாப்பிள்ளை' தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. என் பெஸ்ட்டைக் கொடுத்துட்டிருக்கேன். முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு நடிப்பே சுத்தமா வரலை. சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே புது மனிதர்கள், புது சூழ்நிலை என்பதால், என்னவோ எனக்குள்ள அல்லுவிட்டுடுச்சு. அப்புறம் ஶ்ரீஜாதான் பக்கத்துல வந்து என்னை கூல்பண்ணி நம்பிக்கை கொடுத்தாங்க. இப்ப எல்லாருமே ஒரு ஃபேமிலி மாதிரி ஆகிட்டோம். தமிழ்நாட்டுக்கும் 'மாப்பிள்ளை' தொடருக்கும் தேங்ஸ்." 

ஜனனி அசோக்குமார் : 

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய கதையைச் சொல்கிறார் ஜனனி அசோக்குமார். "கோயம்புத்தூர்ல நான் படிச்சுட்டிருக்கும்போதே உள்ளூர் சேனல்ல பகுதி நேர வி.ஜே-வா இருந்தேன். படிச்சு முடிச்சதும் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை. அப்பவும் மாடலிங் பண்ணிட்டுதான் இருந்தேன். ஆனா எனக்கு, பரபரனு ஆங்கர் ஆகணும்னுதான் ஆசை. அதுக்காகத்தான் முதல்ல விஜய் டிவி-க்கு வந்தேன்.  கிடைச்சது என்னவோ சீரியல் வாய்ப்பு. நான் நினைச்சதைவிட நடிப்பு ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு. ஆரம்பத்துல நடிக்க ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருந்துச்சு. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பயத்தைப் போக்கிட்டு நடிக்கப் பழகிட்டிருக்கேன்.

'மாப்பிள்ளை' தொடர்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகு, ரெண்டு படத்துல ஹீரோயினுடைய ஃப்ரெண்டா நடிக்கக் கூப்பிட்டாங்க. அதுலயும் நடிச்சு முடிச்சுட்டேன். சீக்கிரம் அந்தப் படங்கள்  திரைக்கு வரும். நான் இந்த அளவுக்குச் சுதந்திரமா இருக்கேன்னா... அதுக்கு முக்கியக் காரணம் என் ஃபேமிலிதான். என் அப்பா-அம்மா சப்போர்ட் இல்லாம இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது.  நடிக்க அனுப்பவே பயந்தாங்க. இப்ப என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. எதிர்காலத்துல எனக்கு ரெண்டு ஆசைகள் இருக்கு. ஒண்ணு, நான் சொன்ன மாதிரி ஆங்கர் ஆகுறது. இன்னொண்ணு எங்க அம்மா செய்யும் காஸ்ட்டியூம் டிசைனர் ஜாப்பை வேற லெவலுக்குக் கொண்டுபோறது" என கூலாகிறார். 

வைஷாலி தனிகா : 

‘மாப்பிள்ளை’ தொடரில் ஸ்ரீஜாவின் கடைசித் தங்கை இவர். "எனக்கு, சென்னை அண்ணாநகரைத் தவிர வேற ஏரியாவே தெரியாதுங்க. அந்த அளவுக்குப் பக்கா சென்னைப் பொண்ணு. நான் ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங் பண்ணிட்டிருந்தேன். அப்பவே நிறைய விளம்பரங்கள்லயும் படங்கள்லயும் நடிக்கக் கூப்பிட்டாங்க. வாய்ப்புகளைத் தவறவிடாம நடிச்சேன். அதே சமயத்துல நான் படிப்புலயும் கெட்டிதான். காலேஜ் டாப்பர். இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சதும் பெரிய கம்பெனியில் கேம்பஸ்லயே செலெக்ட் ஆனேன். ஆனா, நடிக்கிற ஆசை இருந்ததால் நானே ரூட் மாத்திட்டு இங்கே வந்துட்டேன்.

விஜய்கூட, 'பைரவா', சிவகார்த்திகேயன்கூட 'ரெமோ', ராஜகுமாரனுடன் 'கடுகு' படங்கள்ல குட்டிக் குட்டி கேரக்டர் பண்ணியிருக்கேன். இப்ப பிரபுதேவாகூட 'யங் மங் சங்'ல நடிச்சுட்டிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா விஜய் டிவி-யில் சான்ஸ் கேட்டேன். அவங்களும் என் போட்டோவைப் பார்த்துக் கூப்பிட்டாங்க. இப்படித்தான் டக்குனு 'மாப்பிள்ளை' தொடரில் நடிக்க வாய்ப்பு அமைஞ்சது.

அந்த டீம்லயே நான் ரொம்பக் குட்டிப் பொண்ணு. இங்கே இருக்கிற எல்லாருக்குமே நான் கொஞ்சம் ஸ்பெஷல். நான் ரொம்பத் துறுதுறுனு சிரிச்சுட்டே ஜாலியா இருப்பேன். ஆனா, சிரீயலில் எனக்கு நெகட்டிவ் ரோல். கண்ணுல லேசான கோபத்தோடு, வில்லத்தனமான சிரிப்போடுதான் தொடர்ல வர்றேன். அதனால, என்னை ஒரு குட்டி `நீலாம்பரி'ன்னே எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இது ஹேப்பியா இருந்தாலும் எனக்கு பாசிட்டிவ் ரோலில் நடிக்கணும்னு ஆசை. சீக்கிரமே அதுவும் நடக்கும்" என்கிறார் வைஷாலி.

படங்கள் : ப.சரவண குமார்

அடுத்த கட்டுரைக்கு