Published:Updated:

'தெய்வமகள்' அண்ணி திரும்பி வருவாரா?' - என்ன சொல்கிறார்கள் காயத்ரியும், குமரனும்!

'தெய்வமகள்' அண்ணி  திரும்பி வருவாரா?'  - என்ன சொல்கிறார்கள் காயத்ரியும், குமரனும்!
'தெய்வமகள்' அண்ணி திரும்பி வருவாரா?' - என்ன சொல்கிறார்கள் காயத்ரியும், குமரனும்!

சன் டி.வியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் 'தெய்வமகள்' சீரியல் ஒவ்வொரு நாளும் திருப்பங்களோடு செல்கிறது. அப்படி கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பில் கதையின் முதுகெலும்பாக இருந்துவந்த அண்ணி கேரக்டர் சாகடிக்கப்பட்டுள்ளது. 'இனி அண்ணியார் காயத்ரி வரமாட்டாரா, தயவுசெய்து திரும்ப வாங்க' என இணையதளங்களில் பல கமென்ட்ஸ். பலதரப்பட்ட மக்களை அதிரவைத்த அந்த எபிசோடு அனுபவம் பற்றி, காயத்ரியாக நடித்த ரேகா குமார் மற்றும் இயக்குநர் குமரன் பகிர்ந்துகொள்கிறார்கள். 

முதலில் பேசிய ரேகா குமார், ''நிறைய பேர் இந்தக் கதாபாத்திரம் மேலே இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. என் சொந்த பேரே மறந்துபோகிற அளவுக்கு அண்ணியாராகவும், காயத்ரியாகவும் பல குடும்பங்களில் வாழ்ந்துட்டு இருக்கேன்'' என்கிறவர், கடந்த மூன்று நாட்களாக முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரிடமிருந்து வரும் விசாரிப்பும் பாராட்டும் கொடுத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். 

''தெய்வமகள்ல ஆரம்பத்தில் இருந்து வில்லி கதாபாத்திரம்தான் என்றாலும், சில வருடங்களாக இன்னும் கொடூர வில்லியாக அந்த கேரக்டர் மாறிச்சு. ஒரு குடும்பத்தில் அண்ணி என்பவரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம்னு எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர் கெட்டவராக இருந்தால், அந்தக் குடும்பம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்னுடைய கதாபாத்திரம். கதைப்படி, தன்னை ஜெயிச்சுட்டே இருக்கிற சத்யாவை விடக்கூடாது என முடிவெடுக்கிறேன். ஆனால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சத்யா தப்பிச்சுடுவாங்க. இனியும் விடக்கூடாது என கடைசி ஆசையாக, சத்யாவை கடத்திடறேன். கார் டிக்கியில் சத்யாவை அடைச்சுவெச்சா மூச்சு முட்டி இறந்துவிடுவாள் என ஐடியா பண்ணி செய்யறேன். இதுக்குள்ளே ராஜூ, குமார், ஏகாம்பரம், மூர்த்தி என எல்லோரும் நான் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்துடுறாங்க. எப்படியாவது என்னை (காயத்ரி) கொலை பண்ணிடலாம்னு வருவாங்க. அவங்களைப் பார்த்ததும் என் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவேன். ஆனால், அதைப் பிடுங்கிடுவாங்க. என்னை மலை மேல இருந்து தள்ளிவிடுறதுக்கு முடிவு பண்ணுவாங்க. ஒரு கட்டத்தில் பிரகாஷூக்கும் எனக்கும் பயங்கர மோதல் வரும். ஒரு கட்டையால் என் வயிற்றில் குத்தி மலை மேலே இருந்து தள்ளிடுவார் பிரகாஷ். இப்படி அந்த காயத்ரி கதாபாத்திரம் முடிவுக்கு வந்திருக்கு'' என்ற ரேகா குமார், ரசிகர்கள் பகிர்ந்துகொண்ட கமென்ட்ஸைப் பற்றியும் கூறினார்.

''அந்த எபிசோடுக்குப் பிறகு நிறைய பேர் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் கருத்தை பகிர்ந்துட்டு இருக்காங்க. 'நீங்க இருந்தா சீரியல் நல்லா இருக்கும்' எனவும், 'பிரகாஷ், காயத்ரி காம்போ இல்லாத தெய்வமகள் சீரியலை நினைச்சுப் பார்க்க முடியலை' எனவும், 'ஆனா எங்களுக்குத் தெரியும் காயு டார்லிங் இன்னும் சாகலை. ஒரு பெரிய பழி வாங்கும் வேகத்தோடு கண்டிப்பா திரும்பி வருவாங்க. பெரிய கிரிமினல் துணையோடு மறுபடியும் களம் இறங்குவாங்க' எனவும் பதிவு போட்டு இருக்காங்க. எனக்கும் அந்த எபிசோடு ரொம்பப் பிடிச்சது. என் நண்பர்களை எல்லாம் அந்த சில எபிசோடுகளைப் பார்க்கச் சொன்னேன்'' என்றவரிடம், 'காயத்ரிக்கு இந்த முடிவு சரியா?' என கேட்டோம். 

''இந்த மாதிரி சாதாரண முடிவு காயத்ரிக்கு இருக்கக்கூடாது. ஏன்னா, இவ்வளவு பெரிய கொடுமைகளை செய்தவங்க ஒண்ணு திருந்தி வாழணும். இல்லாட்டி, இன்னும் பல கொடுமைகளை அனுபவிச்சு பிறகு சாகணும். இல்லைன்னா இறந்த பிறகும் தீராத கோபத்தோடு பேயா வந்தாலும் வருவா''' எனச் சிரிக்கிறார் ரேகா குமார். 

மறுபடியும் காயத்ரி வரும் வாய்ப்பு இருக்கா?' என கேட்டதற்கு, ''அதை நீங்க டைரக்டர்கிட்டேதான் கேட்கணும்'' என்கிறார் செம உஷாராக. 

அண்ணி காயத்ரி மலை மீது இருந்து விழும் அந்த எபிசோடு இணைப்பு இங்கே...

'தெய்வமகள்' தொடரின் இயக்குநர் குமரன், ''ஒரு மாசத்துக்கு முன்னாடி ஓர் இடத்தில் சூட்டிங் எடுத்துட்டு இருந்தபோது, ''ஏன் சார் இந்த வில்லி காயத்ரிக்கு பெரிய அளவுக்கு தண்டனை கொடுக்க மாட்டீங்களா. இந்த மாதிரி ஒருத்திக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்கணும் சார்'னு ஒருத்தர் சொல்லிவிட்டுப் போனார். இப்போ, அந்த வில்லிக்கு தண்டனை கொடுத்திருக்கோம். இனி, 'தெய்வமகள்' சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்களையும், கதை அம்சங்களையும் ரசிகர்கள் சந்திப்பாங்க. இன்னும் விறுவிறுப்பு அதிகமாகும். டோண்ட் மிஸ் இட்'' என்கிறவர், கடைசி வரை அண்ணி காயத்ரி, திரும்ப வருவாங்களா மாட்டாங்களா என சொல்லவே இல்லை.