Published:Updated:

‘‘மூணு பைட்டர்ஸூம் என்னைத் தூக்கி போட்டு விளையாடினாங்க” - மாகாபா ஆனந்த் கலகல!

பா.விஜயலட்சுமி
‘‘மூணு பைட்டர்ஸூம் என்னைத் தூக்கி போட்டு விளையாடினாங்க” - மாகாபா ஆனந்த் கலகல!
‘‘மூணு பைட்டர்ஸூம் என்னைத் தூக்கி போட்டு விளையாடினாங்க” - மாகாபா ஆனந்த் கலகல!

விஜய் டிவியின் தற்போதைய செல்லப் பிள்ளை மாகாபா ஆனந்த். அந்தளவிற்கு பையன் கையில் ப்ரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. தீபக், கோபிநாத் வரிசையில் மாகாபாவிற்கும் ஒரு தனி இடம் உண்டு என்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்’ நிகழ்ச்சியில் பூரித்தது விஜய் டிவி. ஒருபக்கம் டிவி காம்பியரிங், மறுபக்கம் சினிமா என்று கலக்கிக் கொண்டிருக்கும் மா.கா.பாவை கோழி கூவுவதற்கு முன் போனில் பிடித்தோம். எடுத்தவுடனேயே "ஷூட் முடிஞ்சு ஆறு மணிக்குதான் வீட்டுக்கே வந்தேன்” என்று தூக்கம் குரலில் வழிய, ஆனால் சொல்ல வேண்டிய பதில்களை தெளிவாக சொல்லி பக்கா ஃப்ரொபஷனல் தொகுப்பாளர் என்பதை நிரூபித்தார் மாகாபா. 

”மாகாபா இன்னைக்கு ஒரு பர்ஃபெக்ட் காம்பியரர். அதுக்கான தொடக்கம் எது?”

“ஸ்கூல் படிக்கறப்போவே நாடகத்தில் நடிக்கட்டுமா-னு அப்பாகிட்ட கேட்டுருக்கேன். ஆனால், அப்பா படிக்காம நடிக்க போனா உதைபடுவ ராஸ்கல்னு சொல்லிட்டார். அதுக்கப்புறம் காலேஜ் படிக்கறப்போ ஸ்டேஜ் ஷோ நிறைய பண்ணியிருக்கேன். எந்த காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் நடந்தாலும் அங்க டான்ஸ் ஆட போய்டுவேன். அதுவும் கலகலப்புக்கு பேர் போன பாண்டிச்சேரில படிக்கற பையன், சொல்லவா வேணும். என்னோட கல்லூரிக் காலம்தான் இந்த காம்பியரிங் உலகுக்கு முதல் படி.”

“இப்போ நீங்க விஜய் டிவியோட ஆஸ்தான தொகுப்பாளர். எப்படி கிடைச்சது இந்த வாய்ப்பு?”

“ரேடியோ மிர்ச்சில ஆர்.ஜேவா வேலை பார்த்துட்டு இருந்தபோது, ஒரு சினிமா ப்ரோகிராமைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைச்சது. ஆடிஷன் கலந்துகிட்டா, டக்குனு வாய்ப்பு கிடைச்சுடுச்சு. இதோ அந்த பயணம், இப்போ விஜய் டிவி விருதுக்கு சொந்தக்காரனா என்னை நிக்க வைச்சுருக்கு.”

“சிவகார்த்திகேயனுக்கு பிறகு அது இது எதுவோட செல்லப்பிள்ளை நீங்க. ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள்?”

“அது இது எது ஷூட்டிங்கில் முதன்முதலில் நிறைய டேக் வாங்கியிருக்கேன். ஆனால், போகப்போக டீமே பாரட்டுற அளவுக்கு வர கெஸ்ட்களை ஹேண்டில் பண்ண கத்துகிட்டேன். ஒருமுறை பைட்டர்ஸ் மூணு பேர் விளையாட வந்திருந்தாங்க. மூணு பேரும் திடீர்னு என்னை தூக்கிப் போட்டு கேட்ச் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு தலை அப்படியே கிர்..னு ஆய்டுச்சு. அந்த மொமண்ட் என்னால மறக்கவே முடியாது.”

“பாவனா...ப்ரியங்கா யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?”

“ஹையோ...என்ன இப்படி மாட்டி விடுறீங்க? ரெண்டு பேருமே செம கில்லாடி தொகுப்பாளினிகள். பாவனா நாம பார்க்க வேண்டிய வேலையையும் சேர்த்து முக்கால்வாசி வேலையை அவங்களே செய்துடுவாங்க. ப்ரியங்கா சிரிக்காம சீரியஸ் முகத்தோட இருக்கறவங்களைக் கூட சிரிக்க வைச்சுடுவாங்க.”

“மனோ, சித்ரா ரெண்டு பேர் கூடவும் சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சி மூலமா ஒரு நீண்ட பயணம் உங்களுடையது. நிகழ்ச்சி தாண்டி பர்சனலா அவங்களுக்கு உங்களை எவ்ளோ பிடிக்கும்?”

“மனோ சார் ரொம்பவே கேரிங் பர்சன். அதுவும் அவர் வீட்டில் எல்லாருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். எப்போ சாப்பாடு எடுத்துட்டு வந்தாலும், அவர் வைஃப் கிட்ட சொல்லி எனக்கு பிரியாணி செஞ்சு எடுத்துட்டு வந்துடுவார். சித்ராம்மா எப்போ வெளிநாடு போனாலும் எனக்கு சாக்லேட், பர்ஸ்னு ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வர மறக்கவே மாட்டங்க. கிட்டதட்ட இப்போ இரண்டு பேருக்குமே நானும் ஒரு ஃபேமிலி மெம்பர்.”

“தொகுப்பாளர்களுக்கு எப்பவுமே நைட் ஷூட்லாம் அதிகமா இருக்கும். எப்படி மேனேஜ் பண்றீங்க?”

”முதலில் ரொம்ப ஜாலியா இருந்தது. ஆனால், போகப்போக உடலுக்கு ஒத்துக்காம போய்டுச்சு. அதே மாதிரி நைட் ஷூட் முடிச்சுட்டு வந்தா காலைல வேற ஏதாவது வேலை இருந்தா எழுந்துக்கவே முடியாது. அதனால் நைட் ஷூட், நைட் வொர்க் இருக்கறவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் அட்வைஸ், நிறைய தண்ணீர் குடிங்க. உடல் சூட்டை தணிச்சுக்க இளநீர், ஜூஸ் அடிக்கடி குடிக்கறது அவசியம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எட்டு மணி நேரத் தூக்கத்தை மிஸ் பண்ணாதீங்க.”

“மாகாபா நடிப்பில் அடுத்த படம் எப்போ ரிலீஸ்?”

”பஞ்சுமிட்டாய் ரீலீஸ்க்காக வெயிட்டிங். அந்த படம் என்னோட கரியர்ல ஒரு பெரிய ப்ரேக்கா இருக்கும். மாணிக்-னு ஒரு படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். அதோட ரிலீஸ் பத்தி கூடிய சீக்கிரம் சொல்றேன்.” என்று பேட்டியை முடித்துக் கொண்டு காலை 7 மணிக்கு குட்நைட் சொன்னார் மா.கா.பா.