Published:Updated:

'365 நாள்... 365 புடவைகள்..!’ - ’தலையணைப் பூக்கள்' நிஷா

'365 நாள்... 365 புடவைகள்..!’ - ’தலையணைப் பூக்கள்' நிஷா
'365 நாள்... 365 புடவைகள்..!’ - ’தலையணைப் பூக்கள்' நிஷா

'தலையணைப் பூக்கள்' நிஷா என்றால், தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார் நிஷா கணேஷ் வெங்கட்ராம். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் அந்த சீரியல் பற்றியும், தன்னுடைய விருப்பங்கள் பற்றியும் சொல்கிறார். 

''365 நாட்களுக்கும் வித்தியாசமான புடவை கட்டுவது மாதிரி, ஒரு கதைக்களத்தை அமைச்சிருக்காங்க. கதைப்படி நான் ஸ்கூலில் படிக்கும்போது, எங்கள் வகுப்பு டீச்சர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புடவை கட்டிட்டு வந்திருப்பாங்க. என் திருமணத்துக்குப் பிறகு அவங்களை மறுபடியும் சந்திக்கிறேன். அந்த ஆசை எனக்கும் வருது. ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் என் கணவரிடம் சொல்றேன். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு நாளும் வித்தியசமான சேலைகளை வாங்கித்தர்றார். இதோடு, ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களம் இருக்கிறதால, என் திறமையை நிரூபிக்க முடியுது'' என்கிற இன்ட்ரோவுடன் பல விஷயங்களைச் சிலாகித்து சொல்ல ஆரம்பித்தார் நிஷா. 

 ''ஒரு சினிமாவில் இருக்கும் அத்தனை அம்சமும் இந்த சீரியலில் இருக்கு. சண்டை, டான்ஸ், பாட்டு என வித்தியாசத்தை காண்பித்திருக்கிறோம். நிஜத்தில் என்னால் கத்துக்க முடியாததையெல்லாம் இந்த சீரியல்மூலம் நிறைவேற்றிக்கிறேன். எனக்கு கராத்தே ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த சீரியலில் இருக்கிறதால ரொம்பவே ஹேப்பி. அதேமாதிரி ராஜா என்கிற ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய ஆட்டோவில் பல வசதிகளைச் செய்திருக்கிறதை செய்தியில் படிச்சோம். அவரைக் கண்டுபிடிச்சு அவரது அனுபவத்தையும் இந்த சீரியலில் சேர்த்திருக்காங்க. இந்த மாதிரியான விஷயம் பலருக்கும் பிடிச்சிருக்கு. ரியல் அச்சீவர்களை அறிமுகப்படுத்தறோம்னு மக்களிடமும் நல்ல வரவேற்பு'' என்கிற நிஷாவுக்கு இப்போது நிறைய சீரியல் வாய்ப்புகள் வருகிறதாம். 

 ''சினிமா வாய்ப்புகளும் வந்துட்டிருக்கு. ஆனால், பத்து சீரியல்களில் நடிக்கிற திருப்தி, இந்த சீரியலில் கிடைக்கிறதால இதில்தான் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியுது. என் நடிப்பை கணவரும் பாராட்டிட்டே இருப்பார். அதுவும் எதையோ சாதிக்கும் திருப்தியைக் கொடுக்குது. இந்த சீரியலில் நடிக்கும் மூன்று பெண்களுமே போட்டிப்போட்டு நடிப்போம். இது எல்லாமே பாசிட்டிவான விஷயமாகத்தான் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைல் இருக்கும். அதை ஃபாலோ பண்றோம். எனக்காக பெர்சனல் ஸ்டைலிஸ்ட் இருக்காங்க. அவங்க பெயர் சுபிஷா. என் ஸ்டைலிஸ்ட் கலம்காரி டிசைனில் எக்ஸ்பர்ட். அவங்ககிட்ட ஒவ்வொரு நாள் சூட்டிங்குக்கு அணியும் பிளவுஸ் மற்றும் ஜூவல்லரிகளில் வித்தியாசத்தை காண்பிக்கச் சொல்லுவேன். நானும் கைடு பண்ணுவேன். நெக் டிசைன் முதல் ஹேண்டு டிசைன் வரை ரெடி பண்ணித் தருவாங்க. அதனாலதான் என் டிசைனர் சேலைகள் மக்களை கவருது. என் கதாபாத்திரத்தைபோலவே நிஜத்திலும் தன்னம்பிக்கையோடு தைரியமாக முடிவெடுக்கிறதா தோன்றும். என் கதாபாத்திரத்தை பல பெண்கள் அவங்களின் கேரக்டரோடு இணைச்சுப் பார்க்கிறதா சொல்வாங்க. நான் மாடலிங் துறையில் இருந்ததால் உடலையும் மனசையும் எப்பவும் ரிலாக்ஸா வெச்சிருக்கேன்'' என்கிற நிஷா, சமீபத்தில் சந்தித்த ரசிகை ஒருவரைப் பற்றி பகிர்கிறார். 

''என் ரிலேஷன் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தாங்க. அங்கே போயிருந்தேன். ஒரு வயதான அம்மா என்கிட்ட வந்து, 'நானும் ரொம்ப நேரமா நீ பேசுவேனு பார்த்துட்டிருக்கேன். கவனிக்காமலேயே இருக்கியே. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் சீரியலை ஒருநாள்கூட மிஸ் பண்றதே இல்லை. உன்கூட இருக்கிறவங்க (சீரியலில்) பேச்சையெல்லாம் கேட்காதே. நீ எப்பவும் உன்னை விட்டுக்கொடுத்துடுடாதே'னு உரிமையோடு என் கன்னத்தை கிள்ளி, ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க. எனக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகையானு பிரமிச்சுப் போயிட்டேன். அவங்களை என்னால மறக்கவே முடியாது'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் நிஷா.