Published:Updated:

''ஆமா... நான் திமிர் பிடிச்சவதான்!’’ - ’மாப்பிள்ளை’ சீரியல் ரம்யா

''ஆமா... நான் திமிர் பிடிச்சவதான்!’’ - ’மாப்பிள்ளை’ சீரியல் ரம்யா
''ஆமா... நான் திமிர் பிடிச்சவதான்!’’ - ’மாப்பிள்ளை’ சீரியல் ரம்யா

ஆண்டாள் அழகர்', 'சரவணன் மீனாட்சி' என இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் ரம்யா. தற்போது, 'மாப்பிள்ளை' சீரியலில் அசத்திவருகிறார். கமகமவென மணம் வீசும் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்டு, பேட்டியை ஆரம்பித்தோம். 

''சமையலில் நீங்கள் எக்ஸ்பர்ட்னு கேள்விப்பட்டோம்...'' 

''அட ஆமாங்க! எனக்கு பிரியாணின்னா உயிர். சாப்பிட மட்டுமில்லே, சூப்பரா சமைச்சும் அசத்துவேன். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி... இதோடு, வெஜிடபிள் பிரியாணியையும் கமகமனு செய்வேன். பக்கத்து வீட்ல இருக்கிறவங்க எல்லாம் வாசனைத் தூக்குதுனு பாராட்டுவாங்கன்னா பார்த்துக்கங்க. இந்தப் பிரியாணியில் பல ஃபீலிங்கான விஷயங்கள் இருக்கு.'' 

''இயக்குநர் பாலா படத்தில் பிஸியாக இருக்கீங்க போல...'' 

''நிஜமாவே நல்ல அனுபவம் எனக்கு. 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா மேம் நடிக்கும் அழகைப் பக்கத்திலிருந்து பார்க்கிறதுக்காகவே ஷூட்டிங் போறதுக்கு ஆர்வம் அதிகமாகியிருக்கு.'' 

''ரம்யாவைப் பார்த்தால் ரஃப் அண்டு டஃப் ஆளாகத் தெரியுதே...'' 

''உண்மையைச் சொல்லட்டுமா? சினிமாவில் அழுகை சீன் வந்தாலே, கதறி அழுகிற டைப் நான். அவ்வளவு சீக்கிரமா யார்கிட்டேயும் ஃப்ரெண்ட்லியாக மாட்டேன். அதுக்கு கொஞ்சம் டைம் எடுத்துப்பேன். பெரும்பாலும் அமைதியாக இருக்கிறதால, சில பேர் என்னை இப்படி நினைச்சுக்கறாங்க. 'மன்மதன் அம்பு' படத்தில் கமல்ஹாசன், 'திறமைக்குத் திமிர்த்தனம் கொஞ்சம் வேலி'னு சொல்லியிருப்பார். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். எல்லா இடத்திலும் நம்ம ஒர்ஜினாலிட்டியைக் காட்ட வேண்டியதில்லை. எந்த இடத்தில் எப்படி நடந்துக்கணுமோ, அப்படி நடந்துக்கிட்டா நமக்கான மரியாதை கிடைக்கும்னு நினைக்கிறேன். அதனால், இடத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துப்பேன். அப்படி இருந்தா பிரச்னை வராது பாருங்க.'' 

''போட்டோகிராஃபி மேலே அதிக ஈடுபாட்டோட இருந்தீங்களே, இப்பவும் அது தொடருதா?'' 

''இல்லை. இப்போ, எல்லார் கையிலேயும் ஸ்மார்ட்போனும் அதில் கேமராவும் இருக்கு. அதனால், போட்டோ எடுக்கிறது நார்மலாகிடுச்சு. இப்போ, நிறைய போட்டோகிராபர்ஸ் வந்துட்டாங்க. கூடவே பயமும் வந்திடுச்சு. ஆமாம்! டெக்னாலஜி இப்போ பயமுறுத்தற மாதிரி ஆகிடுச்சு. இதைக் கவனமா பயன்படுத்தினா நல்லா இருக்கும். மற்றபடி லவ் யூ போட்டோகிராஃபி.'' 

''அடிக்கடி தத்துவமாக பேசுற மாதிரி தெரியுதே...'' 

''ஆமாங்க. ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கண்ணதாசன் எழுதிய, 'அர்த்தமுள்ள இந்துமதம்' படிச்சிருக்கேன். இப்பவும் நிறையத் தத்துவார்த்த புத்தகங்களைப் படிக்கிறேன். பெப்பர்ஸ் டி.வியில் 'மோட்டிவேஷன் அண்டு ரிலேஷன்ஷிப்' பற்றி ஒரு ஷோ பண்ணிட்டிருக்கேன். 'எனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கு'னு என்கிட்டே பேசறவங்களுக்கு, ஆறுதலான வார்த்தைகளை ஷேர் பண்றேன். இப்போ, நம்மைச் சுற்றி நெகட்டிவ் வைபரேஷன் அதிகமாயிடுச்சு. பலரும் நிறைய விஷயங்களை நெகட்டிவாக பேசுறதைப் பார்க்க முடியுது. இது மாறணும். முடிந்தளவுக்கு பாசிட்டிவ் விஷயத்தை மத்தவங்ககிட்ட ஷேர் பண்ணும்போது, அது சுத்தி இருக்கவங்களுக்கும் பரவும் என்பதை நான் முழுமையா நம்புறேன்.'' 

''உங்களை நிறையப் படங்களில் பார்க்க முடியவில்லையே?'' 

''நான் எப்பவுமே செலக்டெட் படங்களில் நடிக்கவே விரும்பறேன். இந்தத் துறையைப் பொருத்தவரை எப்பவுமே ஒரு தடை இருக்கு. சீரியலில் ஒரே விஷயத்தைத் திரும்ப திரும்பச் செய்யும்போது, நமக்கான தனித்தன்மையும் அங்கீகாரமும் கிடைக்கறதில்லை. அந்த வட்டத்துக்குள் மாட்டாமலிருக்க, சினிமாவிலும் வரேன். சீரியல்களிலும் கமிட்மென்ட்டை குறைச்சுக்கறேன்'' என்கிறார் ரம்யா.