மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ஆல் இன் ஆல் அம்மு!ரிமோட் ரீட்டா

##~##

 'இந்த அம்மு பொண்ணைப் பார்த்து ரொம்ப நாளாச்சே?'னு ஒரு விசிட் அடிச்சேன்.

எடுத்ததுமே... ''என்ன ரீட்டா, ஆளை பார்க்கவே முடியல..?'' என்று அவர் என்னை அதிர வைக்க...

''மீ..? நான் எங்க போகப் போறேன். கழுத கெட்டா குட்டிச்சுவரு. உன்னதான் ரொம்ப நாளா டி.வி பக்கமே பார்க்க முடியல. அதான் பொண்ணுக்கு என்னாச்சுனு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்...'' என்று பதிலுக்கு அதிர்ச்சி கொடுத்தேன்.

அதன் பிறகு இரண்டு பேருக்குமான உரையாடல்... 'திருவிளையாடல்' ரேஞ்சுக்கான மோதல்தான்!

''பேருல 'ரிமோட்' இருந்தா மட்டும் போதாது, டி.வி-யையும் அடிக்கடி பார்க்கணும். தினமும் நான் வந்துட்டுதான் இருக்கேன்!''  

''தினமும் டி.வி பார்க்கறதுதான் வேலையே, ஆனா, உன்னைப் பார்க்கலையே..?''

கேபிள் கலாட்டா!

''டி.வி. சரி, விளம்பரத்தைப் பார்ப்பியா? நான் நடிச்ச ஏதாவது ஒரு விளம்பரம் தினமும் டி.வி-யில வந்துட்டுதான் இருக்கு. முக்கியமா, மாது பாலாஜியோட சேர்ந்து பண்ணின வாட்டர் ஹீட்டர் விளம்பரம்...''

''அப்படி தெளிவா சொல்லு. கொஞ்ச நேரத்துல என் வேலைக்கே ஆப்பு வெக்க பார்த்தியே! சரி, விளம்பரங்கள் மட்டும் போதும்னு முடிவெடுத்தாச்சா..?'

''இல்ல ரீட்டா... இப்ப சீஸன் டைம்ங்கிறதால பரதநாட்டிய நிகழ்ச்சிகள்ல நான் பிஸி!'' ''ஓ... இதுதான் உன் ஸ்லிம் ரகசியமா?!''

''இருக்கலாம். டான்ஸ் தவிர சினிமாவிலும் கொஞ்சம் பிஸியாயிட்டேன். இதுவரை 'சரோஜா’, 'மந்திரப் புன்னகை’னு கிட்டத்தட்ட 25 படங்கள் பண்ணியிருக்கேன். இன்னும் நிறைய படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். டான்ஸ், சினிமானு ஓடிட்டிருந்தாலும், சீரியல்கள்லயும் நடிச்சுட்டுதான் இருக்கேன். டான்ஸ் சீஸன் முடிஞ்சதும் சீரியல், சினிமானு பேலன்ஸ்டா கவனம் செலுத்த வேண்டியதுதான்!

அப்புறம் ரீட்டா... மறந்துடாம என்னோட ஜனவரி ரிலீஸ் படங்கள் 'உயிரே உயிரே’, 'இங்க என்ன சொல்லுது’ எல்லாம் பார்த்துட்டு, எப்படி இருக்குனு சொல்லு. 'இங்க என்ன சொல்லுது’ படத்துல 'விடிவி' கணேஷ் சாருக்கு தங்கச்சியா வர்றேன்!''

அம்மு ஆல்வேஸ் பிஸி!

டாக் (talk) அண்ட் டாக் (dog)!

வாயுள்ள புள்ள பொழைக்கும்னு சொல்வாங்க, அதுக்கு சூப்பர் உதாரணம்... நம்ம லிசாதாங்க!

''என்னம்மா லிசா, பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டியாமே..?''

கேபிள் கலாட்டா!

'அதனாலதானே ரீட்டா, ஆங்கர் வேலை கிடைச்சுருக்கு. டிகிரி படிக்கணுமேனு, பிளான்ட் பயோடெக் படிச்சேன். செடி, இலை, பூ, தண்டு, அதுக்குள்ள இருக்குற செல்கள்னு, 'சேது’ படத்துல விக்ரம் அடிபடும்போது காட்டுற கிராஃபிக்ஸ் ஸீன் மாதிரி, எப்பவும் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கும். என்னோட ஃப்ரெண்ட் ரேவதியாலதான் எனக்கு அதுல இருந்து விடுதலை கிடைச்சுது.

ரேவதி, விஸ்காம் படிச்சுட்டே இமயம் டி.வி-யில வேலை பார்த்துட்டிருந்தா. அவதான், 'நீதான் எப்பவும் பேசிட்டே இருப்பியே... பேசாம (பேசாமயா..?) எங்க சேனல்ல வந்து காம்ப்யரிங் பண்ணு’னு ஐடியா கொடுத்தா.''

''அப்புறம்?''

''பேசும்போது குறுக்க பேசாதே ரீட்டா, எனக்குப் புடிக்காது (நீயே பேசும்மா... நீ மட்டும் பேசு). ஆடிஷன்ல அந்த சமயத்தில் ரிலீஸான 'ஏழாம் அறிவு’ படத்தை பத்தி பேசச் சொன்னாங்க. பேசினேன்... பேசினேன்... பேசிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல புரொட்யூசர், 'அம்மா தாயே... நீ பேசுற பேச்சால எங்களுக்கு மூச்சு முட்டுது. ஆடிஷனுக்கு வந்த மத்தவங்க எல்லாம் ஓடியே போயிட்டாங்க. அதனால வேற வழியே இல்ல... நீ செலக்ட்டெட்!’னு சொல்லிட்டாரு.''

'ஆத்தா புண்ணியமோ, அய்யனாரு புண்ணியமோ... எப்படியோ எங்க ளுக்குக் கிடைச்சுட்ட!''

''காமெடியா ரீட்டா... சிப்பே வர்ல!''

''வரலைனா விட்டிரும்மா... ஏதாச்சும் இன்ட்ரஸ்டிங்கா பேசு, எனக்காச்சும் சிரிப்பு வரட்டும்...''

''எனக்கு நாய்னா ரொம்ப பிடிக்கும். எங்க ஏரியால நிறைய டாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லாருக்கும் நான் பேர் வெச்சுருக்கேன். ஒரு நாய்க்குட்டியை குப்பையிலதான் முதல் முதல்ல பார்த்தேன். அதுக்கு 'குப்பை’னு பேர் வெச்சுட்டேன் (ஸ்ஸப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே). ஒரு நாள் நிலா வெளிச்சத்துல ஒரு நாயைப் பார்த்தேன், அதுக்கு 'நிலா’னு பேர் வெச்சுட்டேன். பெயர் சொல்லிக் கூப்பிட்டா, கரெக்ட்டா ஓடி வந்துடுங்க. என்னோட வீட்ல இருக்குற 'பிரவுனி’, என் தங்கச்சி (நாய் தங்கச்சி!). என் ஃப்ரெண்ட் ஆஷிஷ் வீட்ல இருக்குற ப்ரூனோவுக்கு (இதுவும் நாய்தான்) தமிழ் மட்டும் இல்ல, ஹிந்தி, இங்கிலீஷ்லாம்கூட புரியும். செம பிரில்லியன்ட். எங்க ஏரியா நாய்ங்கள வெச்சு ஒரு சினிமாவே எடுக்கலாம். ஒவ்வொண்ணும் ஒரு கேரக்டர்...''

'கேரக்டரா..?''

''ஆமா ரீட்டா, முகத்துல எதாச்சும் வெட்டுக் காயம் இருந்து எப்பவும் உர்ருன்னே இருந்தா... அது வில்லன். ஜாலியா வாலாட்டிட்டே ஸ்டைலா கியூட்டா இருந்தா... ஹீரோ. நிறைய முடி வளர்த்து சாஃப்ட் அண்ட் கியூட்டா இருந்தா... ஹீரோயின். எல்லோரோடவும் வம்பிழுத்து அடியும், கடியும் வாங்கிட்டிருந்தா... காமெடியன். எப்பூடி..?''

''ஆறு மணிக்கு மேல எனக்கு காது கேக்காதும்மா! யப்பா சாமி, யாராச்சும் என் ஊருக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா!''

இது தாறுமாறு!

.எக்ஸ்.என் சேனல்ல, 'தி அமேஸிங் ரேஸ் ஏசியா’னு ஒரு கலக்கல் நிகழ்ச்சி 2006 - 2010 வரைக்கும் செம ஹிட் அடிச்சுது. அந்த நிகழ்ச்சியோட அடுத்த சீஸன், வரும் 29-ம் தேதியில இருந்து காலை 6 மணி, காலை 8.35 மணி, பகல் 2.50 மணினு ஒரே நாள்ல, மூணு முறை ஒளிபரப்பாக இருக்கு.

'ரியாலிட்டி ஷோனு சொன்னா... இதான்’னு சொல்ற அளவுக்கு செம மாஸான அந்த நிகழ்ச்சியில, டீமுக்கு ரெண்டு பேர் இருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்றதுதான் போட்டி. உடனே அயனாவரத்துல இருந்து அமிஞ்சிகரைக்கு போறதுனு நினைச்சுடாதீங்க. அமெரிக்காவுல இருந்து துபாய்க்கு, ஆப்பிரிக்காவுல இருந்து சைனாவுக்குனு நாடு விட்டு நாடு போறதுதான் நிகழ்ச்சியோட கரு.

கேபிள் கலாட்டா!

படகு, யானை, ஒட்டகம், ஹாட் பலூன், குதிரை, பஸ், டிரெயின், ஃப்ளைட்... இப்படி பல வகையில பயணம் இருக்கும். இந்தப் பயணத்துக்கு இடையில் ஏழு மலை, ஏழு கடல் தாண்டுறதுக்கு சமமா நிறைய சவால்களும் இருக்கும், நிறைய க்ளூக்களும் இருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சு, அதுல இருக்கிறதையெல்லாம் செஞ்சு முடிச்சாதான், அடுத்த கட்டத்துக்குப் போகமுடியும். குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளதான் செலவு இருக்கணும். சாப்பிடறது, தூங்கறது எல்லாம் போற எடத்துக்கு ஏத்தமாதிரி ரோட்ல, பிளாட்ஃபார்ம்ல, பார்க்லனு நாமளேதான் பார்த்துக்கணும். எதையும் கண்டுக்காம இப்படி எல்லா தடைகளையும் தாண்டி போயிட்டா, பரிசுத் தொகை மில்லியன் டாலர்கள்ல!

ஐயாம் வெயிட்டிங்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

இம்சைப்படுத்தாதீர்!

''குடும்பத்துடன் ரசித்து மகிழும் கலைஞர் தொலைக்காட்சியின் சிரிப்பொலியில், முகம் சுளிக்க வைக்கும் அருவருப்பான காட்சிகளைப் போட்டு இம்சைப்படுத்துகிறார்கள். விரசமான காட்சிகளையெல்லாம் போட்டு ரொம்பவும் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவையை ரசிக்கும்படி போடலாமே'' என்று ஆதங்கப்படுகிறார் சிதம்பரத்தில் இருந்து என்.திவ்யப்ரியா.

சேனல்கள் திருந்துமா?

''பொங்கலன்று எல்லா சேனல்களும் நடிகர், நடிகைகளின் பேட்டி, புது சினிமா, புதுப்பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந் தன. ஆனால், டிஸ்கவரி தமிழ் சேனலில் தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி கோயில் என்று எல்லா கோயில்களைப் பற்றிய வரலாற்றையும், பண்டிகைகள் பற்றியும் ஒளிபரப்பினார்கள். இதைப் பார்த்தாவது தமிழ் சேனல்கள் திருந்துமா?'' என்று கேள்விக்கணை தொடுக்கிறார் திருவாரூரில் இருந்து வி.ஜெயஸ்ரீ.

வாழ்வில் வசந்தம்!

''புது யுகம் சேனலில் 'மேளம் கொட்டு தாலிகட்டு’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெண்கள், தங்களது திருமணத்துக்காக, விளையாட்டு மூலமாக பொருளீட்டும் இந்த கேம் ஷோ, பல ஏழை அப்பாக்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பதோடு, பலரின் வாழ்வில் வசந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது'' என்று சிலாகிக்கிறார் புதுக்கோட்டையில் இருந்து எஸ்.சுப்புலெட்சுமி.