Published:Updated:

''அவன் நினைவை மறக்க மறுபடி நடிக்கிறேன்!'' - 'மைனா' நந்தினி கம்பேக்

''அவன் நினைவை மறக்க மறுபடி நடிக்கிறேன்!'' - 'மைனா' நந்தினி கம்பேக்
''அவன் நினைவை மறக்க மறுபடி நடிக்கிறேன்!'' - 'மைனா' நந்தினி கம்பேக்

டந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி, நடந்த சம்பவம் ஒன்று, சின்னத்திரை உலகில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. 'சரவணன் மீனாட்சி' சீரியலில் 'மைனா'வாக நடித்த நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்குக் காரணமாக பல செய்திகள் வலம்வந்தன. அந்த இழப்பைத் தாண்டி, டி.வி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நந்தினி. தற்போது விஜய் டி.வியின் 'நீலி' சீரியலில் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த மாதம் ஆறாம் தேதி, நந்தினி - கார்த்திகேயனின் முதலாமாண்டு திருமண நாள். அந்த நாளின் நினைவோடு நம்மிடம் பேசினார் நந்தினி. 

''வலி, வேதனையோடுதான் ஒவ்வொரு நாள் ஷூட்டிங்குக்கும் போய்ட்டிருக்கேன்.என்னோட அப்பா, அம்மா இரண்டு பேருமே பெருசா செட்டிலானவங்க கிடையாது. அவங்களோடு என் தம்பியும் இருக்கான். அதனால், அவங்களைப் பார்த்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. என்னை நம்பியிருக்கிற இந்த மூன்று பேருக்கும் சேர்த்துதான் உழைச்சுட்டிருக்கேன். நடந்தது ஜீரணிக்க முடியாத விஷயம்தான். ஆனால், வீட்ல உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கிறதால் என்ன ஆகிடப்போகுது. எனக்கு இப்படி நடக்கணும்னு இருந்தால் என்ன செய்யறது.. இப்பவும் கார்த்திக் தரப்பிலிருந்து நான் வேலைப் பார்க்கும் சேனலுக்குப் போன் பண்ணி, 'நந்தினி நடிக்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது'னு மிரட்டல் வருது. இதையெல்லாம் தாண்டி, தைரியத்தை மனசுக்குள் விதைச்சுட்டுத்தான் ஒவ்வொரு நாளும் கிளம்பறேன். நான் எந்தத் தப்பும் பண்ணாதபோது, நான் ஏன் பயந்து ஓடி ஒளியணும்...

இந்த ஜூன் ஆறுதான் நாங்க கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் நிறைவடைஞ்ச நாள். 'நம்ம பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சே'னு அம்மா அழுதாங்க. அப்பா வேதனையை வெளியில் காட்டிக்கலை. அந்த நாளில் கார்த்தியை அடக்கம் பண்ணின இடத்துக்குப் போய் பிரே பண்ணிட்டு வந்தேன்'' என்று வேதனையான குரலில் தொடர்கிறார் நந்தினி. 

''பொதுவா, கார்த்திக்கு வீட்ல சும்மா இருக்கிறது பிடிக்காது. நாங்க இரண்டு பேருமே பிஸியாக இருக்கணும்னுதான் சொல்லிட்டிருப்பான். வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கிறது தப்புனு சொல்லுவான். அவனுக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்ங்கிறதுதான் என் ஆசையும். காதலிக்கும்போதும் சரி, கல்யாணமான பிறகும் சரி எனக்குனு ஆசையா ஒரு பொருள்கூட கார்த்தி வாங்கித் தந்ததில்லை. ஒரு பொண்ணுக்கு இருக்கிற ஆசைகளைக்கூட நான் அனுபவிச்சது கிடையாது. ஆனா, அதற்கு ஈடான பாசத்தைக் காட்டினான். இப்பவும் கார்த்தி எங்கேயும் போயிடலை. என்னோடுதான் இருக்கான். ஒவ்வொரு நிமிஷமும் அவன் நினைவு எனக்குள் ஓடிட்டிருக்கு. அவன் நினைவை மறக்கவே மறுபடியும் நடிக்க வந்திருக்கேன். 

கார்த்தி இறந்தபிறகு ரொம்ப நாள் கழிச்சு வேலைக்குப் போனப்போ மனசு அவ்வளவு பாரமா இருந்துச்சு. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிருக்கு. எனக்கான வேலையை நான் பார்த்துதானே ஆகணும். வெளியிலிருந்து என் வாழ்க்கையைப் பார்க்கிறவங்களுக்கு, 'என்ன அதுக்குள்ளே நடிக்க வந்துட்டாங்க'னு தோணும். அதை ஒண்ணும் சொல்ல முடியாது. என் சூழ்நிலையிலிருந்து அவங்களால் யோசிக்க முடியாது. நான் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளாக இருக்கட்டும், நடிக்கும் கதாபாத்திரமாக இருக்கட்டும் மக்களைச் சிரிக்கவைக்கிற மாதிரிதான் இருக்கும். மனசுக்குள்ள துக்கம் இருந்தாலும், நான் இதைச் செய்துதான் ஆகணும். எட்டு வருஷமா இந்தத் துறையில் இருக்கேன். நிறைய கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். இப்பவும் பொது இடங்களில் என்னைப் பார்க்கும் பலரும் 'எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க.. நாங்க உங்களுக்கு சப்போர்ட்டிவா இருக்கோம்'னு சொல்றாங்க. எனக்கு இதைவிடப் பெரிய ஆறுதல் வேறெதும் இல்லீங்க.'' என்கிறார் வேதனை நீங்காத குரலுடன்.