Published:Updated:

“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

Published:Updated:
“மாமியார்னா கொடூர, வில்லியாத்தான் இருக்கணுமா?!’’ ‘செல்லமே’ மாளவிகா

''எட்டு வயசுல குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். அப்போ, நடிப்பைவிடவும் படிப்பு மேலே எனக்கு ஆர்வம் அதிகம். அதனால், நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கிட்டேன். ஆனால், அந்த வயசிலேயே அரசியல் மீதான ஆர்வம் அதிகமா இருந்துச்சுனு சொன்னா நம்புவீங்களா?'' - படபடவென பேச ஆரம்பிக்கிறார் நடிகை மாளவிகா. விஜய் போன்ற பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருப்பவர். 2013ம் ஆண்டில் இருந்து பிஜேபி கட்சிக்கு ஆதரவாக அரசியலில் இயங்கிவருபவர். இரண்டு தளங்களிலும் தமது அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

''இன்றைக்குப் பல்வேறு பெயர்களில் பஞ்சாயத்து செய்துவரும் டி.வி நிகழ்ச்சிகளுக்கு நீங்கள்தானே முன்னோடி?'' 

''ஆமாம்! எட்டு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு கன்னட சேனலில், 'பதுக்கு ஜடக்காபண்டி' என்கிற லீகல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நடத்தினேன். நான் வழக்கறிஞராகவும் இருந்ததால், கொடுக்கும் தீர்வுகள் குறித்து மக்களுக்கு நம்பிக்கை வந்தது. கவுன்சிலிங் படிப்பையும் முடிச்சிருந்தேன். பெண்கள் உரிமை, சமூகம் சார்ந்த சிந்தனைகளோடு அந்த நிகழ்ச்சி இருந்துச்சு. அதன்மூலமாகத்தான் மாளவிகா என்கிற பெயர் எல்லோருக்கும் தெரிஞ்சது. இப்போ நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமாக இருக்கு. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நடக்குது.'' 

''அரசியலுக்கு வருவதற்குத்தான் வழக்கறிஞர் படிப்பை முடிச்சீங்களா?'' 

''அப்படி சொல்ல முடியாது. சின்ன வயசிலிருந்தே செய்திகளை ஆர்வமாகப் படிப்பேன். தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்க வருகிறவர்கள் கொடுக்கும் நோட்டீஸை அவ்வளவு ஆர்வமா வாங்கிப் படிப்பேன். வீட்டிலும் எனக்கு சப்போர்ட் இருந்துச்சு. படிப்பு விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை கொடுத்திருந்தாங்க. வழக்கறிஞர் படிப்பை முடிச்சேன்.'' 

''குழந்தை நட்சத்திரமாக நடிச்சீங்க. இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் எப்போ வந்தீங்க?'' 

''பிளஸ் ஒன் படிக்கும்போது மலையாளப் படத்தில் நடிச்சேன். அதுதான் ரீஎன்ட்ரி. 1998-ம் ஆண்டுகளில் மெகா சீரியல்கள் அறிமுகமாச்சு. கன்னட மெகா சீரியல் ஒன்றில் வழக்கறிஞராக நடிச்சேன். அது ரொம்ப பிரபலமாச்சு. அப்போ சேனல்களும் குறைவு. அந்தக் காலகட்டத்தில் சீரியலுக்காக கதையை உருவாக்கலை. கதைக்காக சீரியல் எடுத்தாங்க. கன்னடத்தில் நான் நடிச்ச சீரியலைப் பார்த்துட்டு பாலசந்தர் சார் 'அண்ணி' சீரியல் வாய்ப்பைக் கொடுத்தார். கே.பி சார் கதையை அனுப்பிடுவார். சமுத்திரக்கனி இயக்குவார். பிறகு 'அரசி' சீரியலில் வில்லியாக நடிச்சேன். தமிழ், மலையாளம், கன்னடம் என தொடர்ந்து 15 வருஷங்கள் நடிச்சேன். கடந்த சில வருஷங்களாக சீரியலில் நடிக்கிறதை நிறுத்திட்டேன். சமீபத்தில் வெளியான 'பைரவா' படத்தில் நடிச்சிருந்தேன்''.

''ஏன் சீரியலில் நடிக்கிறதை விட்டுட்டீங்க, வாய்ப்புகள் வருவதில்லையா?'' 

''அப்படியெல்லாம் இல்லை. நிறைய வாய்ப்புகள் வருது. பக்குவமா மறுத்துடறேன். ஏன்னா, இந்தத் துறை நிறைய மாற்றங்களைச் சந்திச்சிருக்கு. நான் பார்த்த துறை இப்போ இல்லை. பெரும்பாலான சீரியல்களில் வில்லி, கொலை செய்யறாங்க. மாமியார் அல்டிமேட் கொடூரமாக நடந்துக்கறாங்க. நிஜ வாழ்க்கையில் இப்படி இல்லை. கே.பி சார் எடுத்த கதைகளைபோல இப்போ யாருமே பண்றதில்லை. இந்தி சீரியலை தமிழாக்கம் செய்யறாங்க. இது செயற்கையா இருக்கு. இன்னும் அழுத்தமான கதைகள் வரணும். இந்தி மொழிபெயர்ப்பு சீரியல்களை நிறுத்தணும்.'' 

''இந்தி சீரியல்கள் மேலே ஏன் இவ்வளவு கோபம்?'' 

''வேற ஒரு கலாச்சாரத்தை உங்க வீட்டுக்குள்ளயே கொண்டுவர்றாங்க. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்யும்போது, அதுக்குப் பழகிடுவோம். நாற்பது வருஷங்களுக்குப் பிறகு எது நம்ம கலாச்சாரம் என்பதே நமக்கு தெரியாமல் போய்டும். தமிழ் மற்றும் தெலுங்கில்தான் டப்பிங் சீரியல்கள் அதிகம் வருது. பிரைம் நேரமான மாலை ஏழு, எட்டு மணிக்கு கேரளாவில் இந்தி டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகுது. துபாயிலும் சென்னையிலும் ஒரே மாதிரியான மால்கள் வந்துட்ட மாதிர அதுவும் ஆகிடுமோனு வேதனையா இருக்கு. கதைகள் மூலமாக மத்தவங்க கலாச்சாரத்தை இங்கே திணிக்கிறாங்க. இதைப் பார்த்தும் ஏன் யாருக்குமே கோபம் வரமாட்டேங்குது. நம்மகிட்டே திறமையான படைப்பாளிகள் இல்லையா என்ன..?'' 

''நீங்க ஒரு சேனலின் வேலையில் இருந்திருக்கீங்களாமே?'' 

''360 டிகிரி என்பார்களே, அப்படி சேனல் சம்பந்தமாக எல்லா விஷயங்களை பார்த்திருக்கேன். ஜி கனடாவின் ஹெட்டாக இருந்திருக்கேன். சேனல் நடத்துவது, டி.ஆர்.பி என எல்லாப் பொறுப்புகளிலும் இருந்து பார்த்திருக்கேன். 1970-களில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், பிற மொழிப் படங்களை டப் செய்யக்கூடாது என மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார். அதன் பலனாக இப்போவரைக்கும் அங்கே டப்பிங் செய்யறதில்லை. ஒன்றிரண்டு பேர் அப்படி வந்தாலும், எதிர்ப்புக் குரலால் நிறுத்திடுவாங்க. இப்படி தமிழ்நாட்டிலும் இருக்கணும்.'' 

''அரசியலில் பல வருஷமா இருக்கீங்க, பாதுகாப்பாக உணர்கிறீர்களா?'' 

''எந்தத் துறையில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கு? எல்லா இடத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் இருக்கவே செய்யுது. நான் டெல்லியில்தான் படிப்பை முடிச்சேன். அப்போ முட்டிக்கு மேலதான் ஸ்கர்ட் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போகணும். எத்தனை பேர் விசில் அடிச்சிருக்காங்க, கமெண்ட் பண்ணியிருக்காங்க தெரியுமா? பேருந்தில் பயணிக்கும் எந்தப் பெண்ணாவது இடி வாங்காமல், டீஸ் செய்யப்படாமல் கடந்து வரமுடியுதா? அப்படி ஒரு நல்ல பயணம் வாய்த்ததில்லை. இதுக்கெல்லாம் நாம புகார் கொடுத்திருக்கோமா? இப்படி ஒவ்வொண்ணையும் சகிச்சுக்கிட்டு இருக்கிறதால்தான் வன்முறைகளுக்குப் பலியாகிட்டே இருக்கோம். ஆண் மனதில் இருக்கும் அழுக்குகள் போனால்தான் இந்தச் சமூகம் தூய்மையானதாக மாறும்.''

''உங்கள் மகனுக்கு என்ன வயசாகுது?'' 

''அவருக்கு எட்டு வயசு. நான் திருமணம் செய்துகொண்டதும் தாமதம். குழந்தைப் பெற்றதும் தாமதம். பொதுவாகவே, நடிகைகளுக்குத் தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். திருமணம் நடந்துட்டாலே திரை உலகம் ஒதுக்க ஆரம்பிச்சுடும். அப்படி இந்த இன்டஸ்ட்ரி பழக்கப்படுத்திடுச்சு. ஆனால், இப்போ, அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கு. ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் ஏற்றவாறு பலருக்கும் பேருக்கு வாய்ப்புக் கிடைக்குது. இப்படி பல மாற்றங்கள் வரும்போது, பெண்களுக்கான விஷயங்கள் முழுமையாகும்.'' 

மாளவிகா குரலில் நம்பிக்கை ஒலிக்கிறது.