Published:Updated:

பிரியமானவளே vs கேளடி கண்மணி..! - நட்சத்திர கபடியின் கலகல தருணங்கள்!

வெ.வித்யா காயத்ரி
பிரியமானவளே vs கேளடி கண்மணி..! - நட்சத்திர கபடியின் கலகல தருணங்கள்!
பிரியமானவளே vs கேளடி கண்மணி..! - நட்சத்திர கபடியின் கலகல தருணங்கள்!

சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் "நட்சத்திர கபடி" நிகழ்ச்சிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சன் குடும்பத்தில் உள்ள சின்னத்திரை நடிகைகள் பல குழுக்களாக பிரிந்து விளையாடுகின்றனர். சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்தக் கபடி போட்டியில் சின்னத்திரை நடிகைகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் இருப்பதை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். உண்மையாகவே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றனவா என்கிற சந்தேகத்தில் நட்சத்திர கபடி செட்டிற்குள் நுழைந்தோம்.

ஆடிட்டோரியம் ஒன்றில், தட்டிகள் வைத்து மறைக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டாந்தரையில் எப்படி விழுந்து புரள்கிறார்கள் என்று தயக்கத்துடனே உள்ளே நுழைந்தோம். சிவப்பு நிறத்தில் Turf Mat விரிக்கப்பட்டிருந்தது.,கால் வைத்ததுமே இதமாக இருந்தது. விளையாடும் களத்தைச் சுற்றிலும் தயார் நிலையில் பலர் நின்றிருந்தனர். முதலுதவிக்கான ஆய்ன்மென்ட்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டி இருந்தது.   

நாம் சென்ற அன்று பிரியமானவள் அணியும், கேளடி கண்மணி சீரியல் அணியும் மோதும் போட்டி.  இரு அணியினரும் அங்கங்கே நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் ஜாலியாக இருந்தனர். கொஞ்ச நேரத்தில் அவரவர் அணிகளுடன் ஐக்கியமாகினர். இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் நகங்கள் பரிசோதிக்கப்பட்டு வெட்டிவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமான விளையாட்டு தொடங்குவதன் சீரியஸ்னஸ் ஆரம்பமானது. 

இரு அணிகளும் பரபரப்பாகத் தங்களை தயார் செய்துகொள்ளத் தொடங்கினர். தொகுப்பாளினி பவித்ரா நிகழ்ச்சியைத் துவக்க ஆதவனும், ஆடம்ஸும் அவர்களுக்கே உரித்தான நக்கல்களோடு கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டு இருந்தனர். நடுவர், டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

கேளடி கண்மணி அணியிலிருந்து நடிகை அப்சரா, பிரியமானவள் அணியினரோடு மோத ‘கபடிக் கபடி’ என்றபடி சென்றார்.   எதிர் அணியினர் அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது அவரது தாலி செயின் அறுந்து விட்டது. பின்னர் செட்டில் இருந்தவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.. அவர் கண்ணீர் மல்க வெளியேறினார்.

அதே போன்று கேளடி கண்மணி சீரியலில் வரும் ஷாலினி, எதிர் அணியை பிடிக்க முயன்ற போது அவர்களிடம் சிக்கி அவரது முதுகிலும் அடிபட்டது.. முதலுதவி செய்த பின்னர் மறுபடியும் போட்டிக்குள் நுழைந்தார். அவரை அடுத்து கேளடி கண்மணி டீம் கேப்டன் ஜெனிஃபருக்கு காலில் அடிபட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மிகவும் பரபரப்பாகவே ஆட்டம் சென்றது. ஆட்டத்தின் முடிவை தொலைக்காட்சியில் பாருங்கள். இப்போது செட்டில் இருக்கும் நால்வருடன் ஒரு சின்ன சாட். 

அப்சரா (மரகதவீணை ராதா-கேளடி கண்மணி டீம்) :

நான் மரகதவீணை நாடகத்தில் வர ராதா. கேளடி கண்மணி டீமிற்காக இந்த கபடி போட்டியில விளையாடுறேன். இந்த நிகழ்ச்சி மூலமா எங்களோட திறமையை வெளிக்கொண்டு வர முடியுது. ஆனா, இன்னைக்கு விளையாடும் போது என்னோட தாலி செயின் அறுந்து விழுந்துடுச்சு. நடிக்கும் போது தாலியை கழட்டி வைப்பேன். இந்த மாதிரி சென்டிமெண்டலாம் நான் நம்ப மாட்டேன். ஆனாலும் அறுந்து விழுந்ததும் என்னால தாங்கிக்க முடியல. இதையெல்லாம் தாண்டி இந்த மாதிரி விளையாடறப்ப மெண்ட்டலி நான் ரொம்ப உறுதியா உணர்றேன். அது பெரிய தன்னம்பிக்கையைத் தருது. 

வனிதா (கேளடி கண்மணி - ஷாலினி) :

பார்க்குற பலர்  பொய்யா விளையாடுறாங்கனு சொல்றாங்க. ஆனா இங்க வந்து பார்த்தாத்தான் தெரியும். எல்லா அடியையும், வலியையும் தாங்கிட்டுத்தான் விளையாடுறோம். நாங்க யாருமே பிளேயர்ஸ் இல்ல. அதுனால தான் இந்த மாதிரி சின்னச்சின்ன சண்டைகள் வருது. விளையாடும் போது நாங்க எவ்வளவு சண்டை போட்டாலும் வெளியில நாங்க எல்லாரும் நல்ல நண்பர்களா இருக்கோம்.  

ப்ரீத்தி (பிரியமானவள் நந்தினி) :

எனக்கு கபடி விளையாடத் தெரியும்னே இப்போ தான் தெரிஞ்சது. இதுல என்னோட மூக்கு, வாய்லாம் உடைஞ்சிருக்கு.. போட்டினு வந்துட்டா சண்டைலாம் சக்கரப் பொங்கல் சாப்டுற மாதிரி பாஸு.. இன்னைக்கு அடிச்சிப்போம்.. நாளைக்கு ஒண்ணா ஊர் சுத்துவோம்.. இது தான் எங்க நட்சத்திர கபடி டீம்.

நட்சத்திர கபடி சீசன் 1ல் நாங்க தான் வின்னர். அதே மாதிரி கண்டிப்பா சீசன்2விலும் நாங்கதான் ஜெயிப்போம். நம்மளோட பாரம்பரிய விளையாட்ட விளையாடுறது ரொம்ப பெருமையா இருக்கு. உண்மையா கபடி கத்துக்கிட்டு சீரியசா விளையாடுறோம்..அடி, உதைனு எல்லாமே இருந்தாலும் நாங்க ஒரே குடும்பம்.

அங்கே இருக்கும் பலரிடம் பேசியபோது பலவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதைப் போன்ற விளையாட்டுகள் டிஆர்பிக்காக நடத்தப்படுகிறது என்று விமர்சிப்பவர்களை இவர்கள் கண்டுகொள்வதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் / சீரியல்களில் நடிப்பவர்கள் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகள் அதற்கு பெரும் வடிகாலாக அமைகின்றன. ரிலாக்ஸாக உணர்வதாக பலர் கருத்து சொன்னார்கள். களத்தில் பெரும் சண்டை நடந்தாலும், அப்படி ஒன்றும் கண்டுகொள்வதாகத் தெரிவதில்லை. 

எது எப்படியாயினும், இதனால் இவர்களுக்குள் ஒற்றுமை வளர்ந்தால் மகிழ்ச்சி!  

படங்கள்: ப.பிரியங்கா