Published:Updated:

‘விரைவில்... வெப் சீரிஸில்!’ பிக்பாஸ் கமல்

‘விரைவில்... வெப் சீரிஸில்!’ பிக்பாஸ் கமல்
‘விரைவில்... வெப் சீரிஸில்!’ பிக்பாஸ் கமல்

உலக நாயகன் சின்னத்திரை என்ட்ரியான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மிக பிரமாண்டமாக ஈ.வி.பி பிலிம் சிட்டில் பெரிய வீட்டையே நீச்சல் குளம், ஜிம் அமைப்புடன் கட்டி இருக்கிறார்கள்.

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பல கோடி ரூபாய் பட்ஜெட், 14 செலிபிரிட்டிகள், அவர்களை சுற்றி 53 கேமரா என முதன்முறையாக தமிழில் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன இந்த ஷோவில். இந்த ஷோவிற்காக  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. தன் அக்மார்க் சிரிப்போடு கருப்பு சூட் சகிதம் கச்சிதமாக ஆஜரானார் கமல்.

தொகுப்பாளர் ரம்யா இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தொகுத்து வழங்கினார். கமலை வரவேற்று பேசியவர், "விஜய் டிவி-யில் அடுத்த சில நாட்களில் 14 புதிய நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறோம். விஜய் டிவியின் லோகோவையும் மாற்ற இருக்கிறோம். இந்த புதிய லோகா 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முதல் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும். இனி விஜய் டிவி-யில் எங்களுக்கு எல்லாம் மூத்த தொகுப்பாளர் கமல் சார்தான். அவர்தான் இனி எங்களை வழி நடத்துவார்" என்றார். 

புதிய லோகோ திரையில் காண்பிக்கப்பட்டது. ஸ்டாருடன் 'Vijay'' என ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் அதே ஸ்டாருடன் 'விஜய்' என மாற்றி இருக்கிறார்கள். புதிய லோகோவின் டேக்லைன் 'எதிலும் புதுமை தமிழன் பெருமை'.  

அடுத்து பேசத் தொடங்கிய கமல், "புதிய லோகோ சிம்பிளாக இருந்தாலும். நல்லா இருக்கு. குட்.  சின்னத்திரையில் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை. கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சின்னத்திரைக்கு வருவது கீழ் இறங்கி வருவது கிடையாது. ஏற்கெனவே ஹாலிவுட், பாலிவுட்டில் பல பெரிய நடிகர்கள் எல்லாம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். நானும் தொகுத்து வழங்குவதை அப்படித்தான் நினைக்கிறேன்." என்றார். 

அதன்பின் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சியில் உங்க பங்கு என்ன? உங்களிடம் இருந்து நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?”

“எதிர்பாராததை எதிர்பாருங்கள். பார்க்கும் பார்வையாளர்களின் கருத்தை என் கருத்தாக பாவித்து ஆவணம் செய்வது இந்த நிகழ்ச்சியில் என் வேலையாக இருக்கும்.”

“இந்த 'பிக் பாஸ்'நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மைலேஜை வைத்து உங்க படங்களை முடிக்க போகிறீர்களா?”

“கண்டிப்பாக. அதில் தவறொன்றும் இல்லையே! இப்ப நான் முடிக்க வேண்டிய புராஜக்ட் 'விஸ்வரூபம்-2' அடுத்து 'சபாஷ் நாயுடு'. அதற்கு பிறகு ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.”
 

“இன்னும் இதுபோல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்களா?”

“இது எக்ஸாம்ல நல்லா மார்க் எடுத்துட்டேன்னா.. அடுத்தடுத்து பண்ணவேண்டியதுதான்”

“இந்தப் போட்டியின் முக்கிய விதிமுறையே செல்போன் போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான். நீங்கள் இதில் தொகுப்பாளராக இல்லாமல் போட்டியாளராக இருந்தால் அப்படி இருக்க முடியுமா?”

“நாங்கள் அந்தக் காலத்தில் போன் எல்லாம் பயன்படுத்தாமல்தானே இருந்தோம். நீங்க போன் பயன்படுத்தாம இருக்க முடியுமா என கேட்பதே ஆச்சர்யமா இருக்கு. இப்ப காலையில எழுந்ததும் கை தடவி உள்ளங்கை பார்க்கிற மாதிரி போனை பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. என்னால் மொபைல் பயன்படுத்தாமல் இருக்க முடியும்னு நம்புறேன்”.

“சின்னத்திரைக்கு வந்துவிட்டீர்கள். இப்போதைய ட்ரெண்ட் வெப் சீரிஸ்தான். அதில் நடிப்பீர்களா?”

“நிச்சயம் அந்த ஏரியாவிலும் முயற்சி செய்வேன். சின்னத்திரை தாண்டி எல்லாருடைய மொபைல் போன்களிலும் நுழைய ஆசை. அதற்கான முயற்சிகளை அடுத்ததாக எடுக்கவுள்ளேன்”.

“உலக நாயகனை எப்போது மருதநாயகமாக பார்க்கலாம்?”

“அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம். சீக்கிரமே நடக்கும் என நம்புகிறேன்”.

பிக்பாஸ் ஷோவும் நல்லா நடந்தா சூப்பர்தான்!