Published:Updated:

“சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டிருக்கேன்!” - செம ஜாலி அஞ்சனா

“சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டிருக்கேன்!” - செம ஜாலி அஞ்சனா
“சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டிருக்கேன்!” - செம ஜாலி அஞ்சனா

``உங்களுக்கு என்னிக்காவது `நியர் டு டெத்' அனுபவம் இருந்திருக்கா... எனக்கு இருந்திருக்கு. எனக்கும் சந்திரனுக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச அடுத்த நாள் வெளியே போகலாம்னு ப்ளான் பண்ணோம். வீட்டுக்குத் தெரியாம பாண்டிச்சேரிக்குப் போனோம். சென்னையில் வெள்ளம் வந்த நேரம் அது. நாங்க கிளம்பினதுக்கு அப்புறம்தான் `வெள்ள எச்சரிக்கை' செய்தி வந்துச்சு. சென்னை டு பாண்டிச்சேரி, அதுவும் கார்ல... நடுவழியிலேயே மாட்டிக்கிட்டோம். செம மழை. வேண்டாத கடவுள் இல்லை, உயிரோடு இருக்க மாட்டோம்னுதான் நினைச்சோம். அப்போ, அந்தப் பக்கமா கார்ல வந்த ரெண்டு பேர் எங்களை சென்னைக்குக் கூட்டிவந்தாங்க. அவங்க மட்டும் அப்போ வரலைன்னா அவ்ளோதான்" என்று கண்கள் விரிய படபடக்கிறார்  சன் மியூசிக் விஜே அஞ்சனா. 

``உங்க குடும்பம் பற்றி...”

``நான், அம்மா, பாட்டி மட்டும்தான். வீட்டுக்கு ஒரே பொண்ணான எனக்கு பத்து வயசு இருக்கும்போது அப்பா தவறிட்டார். அம்மாவுக்கு இப்போவரை வெளி உலகம் தெரியாது. செல்போன்கூட ஆபரேட் பண்ணத் தெரியாது. எனக்கு மீடியா வேலை கிடைச்சப்போ, சொந்தக்காரங்க எல்லாரும், `ஏன் மீடியா வேலைக்கெல்லாம் அனுப்புற... பொண்ணு கெட்டுப்போயிடுவா? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிவராது'னு நிறைய தடைபோட்டாங்க. அதெல்லாம் மீறி என்மேல இருக்கிற நம்பிக்கையில் என்னை வேலைக்கு அனுப்பினாங்க. அம்மாதான் எனக்கு எல்லாமே. இப்போ திருமணம் முடிஞ்சு, சந்திரன் வீட்டுல நாங்க எல்லோருமே சேர்ந்து கூட்டுக்குடும்பமா இருக்கோம்.''

``மீடியாவில் பெண்களை எப்படி ட்ரீட் பண்றாங்க?” 

``மீடியாவுல நீங்க உங்களை எப்படி அடையாளப்படுத்துறீங்களோ அப்படித்தான் மத்தவங்க உங்களை மதிப்பாங்க. குறிப்பா, மீடியா மக்களுக்கு `பிரைவசி’ இருக்காது. எங்கே போறோம், என்ன பண்றோம், நம்மளோட மீடியா ஃப்ரெண்ட்ஸ் யாரு, எப்படி எல்லார்கிட்டயும் பழகுறோம்... இப்படி எல்லா விஷயங்களையும் மத்தவங்க கவனிச்சுட்டே இருப்பாங்க. நாம சரியா இருந்தா போதும். ஒரு பெண்ணா எந்தப் பிரச்னையும் நமக்கு வராது.''

``மீடியாவுக்காக, நீங்க மாற்றிக்கிட்ட விஷயம் எதும்?"

``நான் மட்டும் இல்லீங்க, மீடியாவுல இருக்கிற எல்லாருமே எப்பவுமே சென்சிட்டிவா இருக்கவே கூடாது. வீட்டுல யாராவது சும்மா திட்டினாகூட உடனே அழுதிருவேன். இந்த வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் ரொம்பவே பக்குவப்பட்டுட்டேன்.” 

``திருமணத்துக்குப் பிறகும்கூட தொடர்ச்சியா மீடியாவுல இருக்கீங்களே!''

``கல்யாணத்துக்கே குறைவாதான் லீவ் எடுத்தேன். குடும்பத்துல எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணும்போது நமக்குப் பிடிச்ச வேலையை நாம தாராளமா பண்ணலாம்தானே. அதுமட்டும் இல்லீங்க, என்னை  டிவி-யில் பார்க்கிறதை எங்க வீட்டுல ரொம்பப் பெருமையா நினைக்குறாங்க.”

``ரொம்ப வருஷங்களா சன் மியூசிக்லேயே இருக்கீங்களே, வேறே வாய்ப்பு வரலையா?"

``எனக்கு இந்த சேனலை விட்டுப் போக விருப்பமில்லை. நான் வேலைக்குச் சேரும்போது என்னோட அம்மா, சேனல் வாசல் வரை வந்து விட்டுட்டுப் போனாங்க. இங்கே இருக்கிற எல்லாரும், `உங்க பொண்ணு பத்திரமா இருப்பாங்க. நாங்க பார்த்துக்குறோம்'னு ஆறுதல் சொல்லி அனுப்பினாங்க. அதுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப நல்லாவே பார்த்துக்குறாங்க. ஒருகட்டத்துல `வேற எங்கேயும் போக வேண்டாம்'னு முடிவெடுத்துட்டேன்."

``உங்களுக்குப் பிடித்த விஜே?"

``டிடி-யை ரொம்பப் பிடிக்கும். ஒரு பொண்ணு இத்தனை வருஷங்களா டிவி-யில் இருக்கிறது சாதாரண விஷயமில்லை. அதுமட்டுமில்லாம, ஒரு தொகுப்பாளரா சிவகார்த்திகேயன் சார்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.” 

``உங்களுக்கும் கயல் சந்திரனுக்குமான லெளகீக மொமென்ட் எப்படி நடந்துச்சு?”

``நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்த்ததுனால நல்ல நண்பர்களா இருந்தோம். திடீர்னு ஒருநாள் `கல்யாணம் பண்ணிக்கலாமா?'ன்னு கேட்டார். எனக்கு முன்னாடியே தெரியும் நாங்க லவ் பண்ணுவோம்னு. ஆனா, யாரு மொதல்ல சொல்றதுனுதான் வெயிட் பண்ணிட்டிருந்தேன்."

``நான் உனக்காக இதைப் பண்றேன்னு சொல்லி, பண்ணாம ஏமாத்தியிருக்கிறாரா உங்க சந்திரன்?''

``இதுவரை இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம்தான் அவர்கிட்ட வேண்டி விரும்பி ஒண்ணு கேட்டிருக்கேன். முன்னாடி லவ் பண்ணும்போது அடிக்கடி அவரோட ஷூட்டிங் ஸ்பாட்க்குப் போவேன். அப்போ என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்படுவார். `அடுத்து எப்போ ஸ்பாட்டுக்கு வருவே?'னு கேட்பார். கல்யாணத்துக்குப் பிறகு ஸ்பாட்டுக்குப் போனேன்னா... `ஏன் இங்கே வந்த?... ஃபேமிலிலிருந்து யாராவது வந்தா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு'ன்னு சொன்னார். இதைக் கேட்ட உடனே எனக்கு ரொம்பக் கோவம் வந்திருச்சு. அப்புறம் என்னை சமாதானம் படுத்துறதுக்காக, இனிமே ஷூட்டிங் ஸ்பாட்க்கு என்னையும் கூடவே கூட்டிட்டுப் போய் வேலையெல்லாம் முடிஞ்ச உடனே, அந்த இடத்தைச் சுற்றிக்காட்டுறேன்னு சொல்லிருக்கார். ஸோ, அது நடக்கும்னு நம்புறேன்.”

``சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்திருக்கா?” 

``நான் வேலைக்குச் சேர்ந்த ஆறு மாசத்துலேயே சினிமா சான்ஸ் வந்துச்சு. அப்போ சீரியல் வாய்ப்புகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதுக்கெல்லாம் போகணும்னு நினைச்சதே இல்லை. விஜே-வா இருக்கும்போதே, ஸ்க்ரிப்ட் கொடுத்தா சரியா பேசுவேனான்னு தெரியாது. இதுல எப்படி சினிமாவுல நடிக்கிறது?  எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். நீங்களே சொல்லுங்க சினிமாவைவிட டிவி எந்த விதத்துல குறைஞ்சுப்போச்சு?" என்று க்யூட் ஸ்மைலியுடன் டாட்டா காட்டுகிறார் விஜே அஞ்சனா. 

பின் செல்ல