Published:Updated:

" 'பாகுபலி' தேவசேனாவை விட 'ஆரம்ப்' தேவசேனாதான் ஸ்பெஷல்!" கார்த்திகா

" 'பாகுபலி' தேவசேனாவை விட 'ஆரம்ப்' தேவசேனாதான் ஸ்பெஷல்!" கார்த்திகா
" 'பாகுபலி' தேவசேனாவை விட 'ஆரம்ப்' தேவசேனாதான் ஸ்பெஷல்!" கார்த்திகா

"இப்போதான் வாள் சண்டைப் பயிற்சி முடிச்சிட்டு வந்தேன்... சொல்லுங்க" என்றபடி பேசத் தொடங்கினார் கார்த்திகா. அவர் நாயகியாக நடிக்கும் 'ஆரம்ப்' இந்தி சீரியலின் விளம்பரம், தூள். வாள், யானை, முதலை, அரியணை என தில் காட்டியிருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஸ்டார் ப்ளஸ் சேனலுக்காகத் தயாராகிவரும் சீரியலின் 'தேவசேனா'வுடன் சாட்!

"சினிமா டூ சீரியல் தாவிட்டீங்களே?"

"சீனியர் நடிகைகள்தான் சீரியலுக்குப் போவாங்கங்கிற எண்ணம் தென்னிந்தியாவில் மட்டும்தான் இருக்கு. பாலிவுட்லேயும் சரி, ஹாலிவுட்லேயும் சரி, சீரியலையும் சினிமாவையும் பிரிச்சுப் பார்க்கிறது இல்லை. ஆரம்பத்தில் எனக்கு சீரியலில் ஆர்வமில்லை. அம்மாதான், 'கதையைக் கேட்காமல் எந்த புராஜெக்ட்டையும் ரிஜெக்ட் பண்ணக்கூடாது'னு சொன்னாங்க. கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக்கிட்டேன். இயக்குநர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சாரோடு இந்தக் கதை, அவ்வளவு சுவாரஸ்யம். இதை வழக்கமான சீரியலோடு கம்பேர் பண்ணக்கூடாது. இதை ஒரு படத்துக்கான கதையாகத்தான் ரெடி பண்ணியிருக்காங்க, ஆனா ஒரு படத்தோட டைம் ஃப்ரேம்குள்ள கதையைச் சுருக்க முடியல. அதையே டீடெய்ல்டா எடுக்கிறாங்க."

"தேவசேனா கேரக்டருக்கு உங்களை செலக்ட் பண்ண என்ன ஸ்பெஷல் காரணம்?"

" 'ஆரம்ப்' தென்னிந்தியாவில் நடக்கும் கதை. அதனால் அந்த பிராந்திய முகமும், நன்றாக இந்தி பேசவும் தெரிந்த நடிகையாத தேடினாங்களாம். கார்த்திகா க்ளிக் ஆயிட்டேன். நான் மும்பையிலேயே இருப்பது இன்னொரு ப்ளஸ்."

"தேவசேனா என்றதுமே 'பாகுபலி' அனுஷ்காவோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பாங்களே?"

"உண்மைதான். 'பாகுபலி'யோட முதல் பார்ட்ல தேவசேனா கேரக்டர் பெரிய அளவுல பேசப்படலை. செகண்ட் பார்ட்ல அந்தக் கேரக்டருக்கு வெயிட் கொடுத்திருந்தாங்க. ஆனா, செகண்ட் பார்ட் வர்றதுக்கு முன்னாடியே இந்த சீரியல் ஆரம்பிச்சிருக்கணும். சில காரணங்களால தள்ளிப்போயிருச்சி. உண்மையில் 'பாகுபலி' தேவசேனாவைவிட, என் கேரக்டர் இன்னும் ஸ்பெஷல். 'பாகுபலி'யில் தேவசேனா கேரக்டர் ஒரு பகுதிதான். 'ஆரம்ப்'-ல் இந்தக் கேரக்டரைச் சுத்திதான் கதையே."

"சீரியலில் ஆக்‌ஷன் சீன்கள் நிறைய இருக்கும் போலிருக்கே?"

"சீரியல்தானே ஜாலியா நடிச்சிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன். ஆனாலும் கதைக்குத் தேவை என்பதால கத்தி சண்டை, வாள் சண்டை, குதிரையேற்றம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஏகப்பட்ட பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். தினமும் செமையா வேலை வாங்குறாங்க ஜி. ஆனாலும் ஆக்‌ஷன் சீன்ல நடிக்கிறதால நான் தனியா எக்ஸர்சைஸ் செய்ய வேண்டியதில்லாம போயிடுச்சு. அப்புறம், அந்த யானை சீன் சி.ஜி எல்லாம் இல்ல. உண்மையான யானை. ஏகப்பட்ட வாழைப்பழங்களைத் தந்து  அதை ஃப்ரெண்டாக்கியிருக்கேன்."

"கஜோலோட அம்மாவுக்கு என்ன ரோல்"

"தனுஜாம்மாவுக்கு முக்கியமான ரோல். ஒரு நாட்டின் அரசி நான். என்கூடவே இருந்து வழிகாட்டுற கேரக்டர். வருண தேவனாக பிரபல இந்தி நடிகர் ரஜ்னீஷ் துக்கால் நடிக்கிறார். ஹீரோ சாருக்கும் இதுதான் முதல் சீரியல் என்ட்ரி. கோல்ட் பெஹல் டைரக்‌ஷனும் கிராஃபிக்ஸ் சீன்ஸூம் சீரியலை வேற லெவலுக்குக் கொண்டுபோயிருக்கு. அப்புறம், இன்னும் சில நாட்களில் எங்க டீம்ல ஒரு பெரிய நடிகரும் இணையப் போறார். அவர் யாருனு டைரக்டர் சொல்லாம நான் சொல்ல முடியாது. க்ளூ சொல்லணும்னா... சவுத், நார்த் ரெண்டுலேயும் பிரபலமானவர், எங்களை விட கொஞ்சம் சீனியர்."

" 'ஆரம்ப்' ட்ரைலர் பார்த்துட்டு எல்லோரும் என்ன சொல்றாங்க?"

"பலர் போனில் வாழ்த்தினாங்க. நிறைய பட வாய்ப்புகள் வருது. இந்த சீரியலை முடிச்சதுக்கு அப்புறம்தான் அதையெல்லாம் பார்க்கணும். கொஞ்ச நேரம் கிடைச்சாக்கூட, தூங்கத்தான் மனசு சொல்லுது, அவ்வளவு டயர்டு."

'ஆரம்ப்' தந்த மகிழ்ச்சியில் நம்பிக்கையுடன் பேசுகிறார் கார்த்திகா.