Published:Updated:

''ஜப்பான், ஃப்ரென்ச், ஜெர்மன் மொழியில நீங்க என்கூட பேச ரெடியா?''- ராஜா ராணி சீரியல் அலியா மானஸா

''ஜப்பான், ஃப்ரென்ச், ஜெர்மன் மொழியில நீங்க என்கூட பேச ரெடியா?''- ராஜா ராணி சீரியல் அலியா மானஸா
''ஜப்பான், ஃப்ரென்ச், ஜெர்மன் மொழியில நீங்க என்கூட பேச ரெடியா?''- ராஜா ராணி சீரியல் அலியா மானஸா

''ஜப்பான், ஃப்ரென்ச், ஜெர்மன் மொழியில நீங்க என்கூட பேச ரெடியா?''- ராஜா ராணி சீரியல் அலியா மானஸா

"சினிமாவைவிட சீரியல்தான் பெரிய அங்கீகாரத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கு. பலரின் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமாக இருக்கிற உணர்வையும் ஏற்படுத்தியிருக்கு" என நெகிழ்கிறார் அலியா மானஸா. விஜய் டிவியின் 'ராஜா ராணி' சீரியல் நாயகி. 

"மீடியா பிரவேசம் எப்படி ஆரம்பிச்சது?" 

"சென்னைப் பொண்ணான நான், எத்திராஜ் காலேஜ்ல பி.எஸ்சி ஃபைனல் இயர் படிச்சுட்டிருக்கேன். டான்ஸ்ல ரொம்ப ஆர்வம். 'மானாட மயிலாட' பத்தாவது சீசன்ல பங்கேற்கும் வாய்ப்பு கிடைச்சுது. ஃபைனல் வரை போனேன். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. தமிழில் 'ஜூலியும் நான்கு பேரும்' என்ற படத்திலும் ஒரு மலையாளப் படத்திலும் ஹீரோயினா நடிச்சேன். பல வாய்ப்புகள் வந்தாலும், செலெக்ட் பண்ணித்தான் நடிக்கிறேன். ஒருமுறை நான் நடிச்ச படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அதன்மூலம் 'ராஜா ராணி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. கதைப் பிடிச்சுப்போக, கமிட் ஆகிட்டேன்." 

"இந்த சீரியலுக்காக ரொம்பவே உருமாறி இருக்கீங்களாமே..." 

"ஆமாம். சீரியல் முழுக்கவே என்னைச் சுத்தி நடக்குது. என் கேரக்டரான செம்பருத்தி என்கிற பெயரைத்தான் முதல்ல டைட்டிலா வைக்க இருந்தாங்க. அந்தளவுக்கு முக்கியமான கேரக்டர் அது. இந்த சீரியலுக்காக என்னை முழுசா மாத்திக்கிட்டேன். மாடர்ன் டிரெஸ், கலரிங் ஹேர்னு ஸ்டைலா இருந்த நான், இந்த சீரியலுக்காக அப்பாவிப் பொண்ணா தாவணி, புடவையில் வர்றேன். நகரப் பகுதியில் வசிக்கும் கிராமத்து சாயல் பெண்ணாக நடிக்கிறது சவாலா இருக்கு. புது மானஸாவாக ஃபீல் பண்றேன். வெளியிடங்களுக்குச் செம்பருத்தி காஸ்டியூம்ல போனால் போதும். பலரும் அடையாளம் கண்டுபிடிச்சு சூழ்ந்துக்கறாங்க. நிஜ மானஸாவாகப் போகும்போது 'நீங்க ராஜா ராணி சீரியல்ல வர்றவங்களா?'னு சந்தேகமாகத்தான் பார்க்கிறாங்க.'' 

"உங்களை ஒரு ரசிகரா ரசிச்சவரே, சீரியல்ல உங்க ஜோடியாகிட்டாராமே..." 

"ஆமாம்! 'குளிர்' படத்தின் ஹீரோ சஞ்சிவ். அவரின் ஆக்டிங் எனக்கு ரொம்பவே பிடிச்சு, ஃபேன் ஆகிட்டேன். ஒரு கட்டத்துல நான் டான்ஸ் பயிற்சியாளர் ஆனதும், சஞ்சீவின் சிஸ்டர் எங்கிட்ட பயிற்சி எடுத்துக்க வந்தாங்க. அப்போ நானும் சஞ்சீவும் அறிமுகமானோம். இந்த சீரியலுக்காக முதல் நாள் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்குப் போனப்போதான் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கிறது தெரிஞ்சது. அவருக்கும் சர்ப்ரைஸ். 'ரசிகரா உங்களை ரசிச்சேன். இப்போ ஜோடியா?'னு உற்சாகமாகிட்டார். இப்போ நாங்க சூப்பர் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.” 

"செண்பாவை ரொம்பவே கொடுமைப்படுத்துறாங்கபோல....” 

“அப்பாவி வீட்டு வேலைக்காரி செண்பாவை (செம்பருத்தி), அந்த வீட்டுக்காரங்க ரொம்பவே கொடுமைப் படுத்துறதைப் பார்க்கிற பலரும் ரொம்ப டச்சிங்கா இருக்குன்னு சொல்றாங்க. வேலை செய்யும் வீட்டின் பையனான சஞ்சீவையே கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுக்குப் பிறகு நடக்கும் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போறாடுறேன் என்பது கதை. சினிமாவில்கூட இவ்வளவு ஸ்கோப் கிடைக்கலை. இந்த சீரியல் தொடங்கி கொஞ்ச நாளிலேயே ரசிகர்களிடம் ரீச் ஆகிட்டேன்.'' 

“டான்ஸ் பயிற்சியாளர் அனுபவம் எப்படி இருந்துச்சு?” 

“ 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். உடல் எடை அதிகமாகிடக்கூடாதுன்னு ஜூம்பா டான்ஸ் கத்துக்கிட்டேன். பிறகு, நடிக்கிறதைக் குறைச்சுக்கிட்டு, ஜூம்பா டான்ஸ் பயிற்சியாளரா நிறையப் பேருக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அதன்மூலம், சினிமா சார்ந்தவங்களோட ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சுது. இப்போ படிப்பும் தொடர்றதுனால ஜும்பா ட்ரெயினர் போஸ்டை தள்ளி வைச்சிருக்கேன். பெர்சனலா ஜூம்பா பிராக்டிஸை தொடர்ந்து பண்ணிட்டுதான் இருக்கேன். அது என் எடையை கன்ட்ரோல்ல வெச்சுக்கறதோடு புத்துணர்ச்சியோடு வொர்க் பண்ணவும் ஹெல்ப்பா இருக்கு.” 

“நிறைய ஃபாரீன் லாங்குவேஜ் கத்துக்கும் ஆர்வம் இருக்காமே...” 

(மெல்லியப் புன்னகையுடன்) “ரொம்ப எல்லாம் இல்லைங்க. புதிய மொழிகளைக் கத்துக்கிறது ரொம்பவே பிடிக்கும். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ஜாப்பனிஸ் கோர்ஸ் எடுத்து, ஆல் இண்டியா லெவல்ல செகண்ட் ரேங்க் வாங்கினேன். டாப் டூ ரேங்க் வாங்கின என்னையும் ஒரு டெல்லி பையனையும் செலெக்ட் பண்ணின மத்திய அரசு, ஜப்பானுக்கு அனுப்பிவெச்சாங்க. அங்கே எங்களை மாதிரியே பல நாடுகளிருந்து மாணவர்கள் வந்திருந்தாங்க. சில வாரங்கள் அவங்களோடு இருந்தது அருமையான அனுபவம். அந்த நாட்டின் கலாசாரம், மொழிகள் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். அந்த ஆர்வத்தில், இன்னும் சில மொழிகளை கத்துக்க ஆரம்பிச்சேன். தமிழ், ஆங்கிலத்தோடு ஜாப்பனிஸ், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளும் தெரியும். சைக்கிளிங் மற்றும் செஸ் விளையாட்டிலும் நேஷனல் லெவல் பிளேயரா ஆக்டிவா இருந்திருக்கேன். ஸ்போர்ட்ஸ், டான்ஸ், ஆக்டிங்னு எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் இறங்கிப் பார்த்துடணும்.'' 

அடுத்த கட்டுரைக்கு