Published:Updated:

''நாய்கள் மேல நான் பிரியம் வைக்கிறது மத்தவங்களுக்குப் புரியல!'' - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

கு.ஆனந்தராஜ்
''நாய்கள் மேல நான் பிரியம் வைக்கிறது  மத்தவங்களுக்குப் புரியல!'' - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி
''நாய்கள் மேல நான் பிரியம் வைக்கிறது மத்தவங்களுக்குப் புரியல!'' - 'ராஜா ராணி' ஶ்ரீதேவி

"வீட்டுல ஒரே பெண்ணான எனக்குச் சகோதர, சகோதரிகள் யாருமே இல்லைங்கிற கவலையே இல்லை. அதுக்குக் காரணம், என்னோட ரெண்டு செல்ல நாய்கள்தான். எனக்கான உலகம் அவங்க. நான் இல்லாட்டினா அவங்களும், அவங்க இல்லாட்டினா நானும் துடிச்சுப்போயிடுவோம்" என நெகிழ்ந்து பேசுகிறார் சின்னத்திரை நடிகை ஶ்ரீதேவி. தற்போது சன் டிவி 'கல்யாணப்பரிசு', விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல்களில் பிஸியாக நடித்துவந்தாலும், நாய்கள் மீதான தன் அன்பைப் பல வகைகளிலும் வெளிப்படுத்திவருகிறார்.

"சின்ன வயசுல இருந்து பெட் அனிமல்ஸ் மேல அலாதி பிரியம். தெரு நாய்கள் தொடங்கி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குப் போறப்போ அங்கிருக்கும் பெட்ஸைத் தூக்கிக் கொஞ்சுறதுன்னு என் பாசத்தை வெளிப்படுத்திகிட்டே இருப்பேன். ஒருகட்டத்துல என் ஆசைப்படி வீட்டுல பூனை, புறா உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை வளர்த்தாலும், அப்பார்ட்மென்ட் வீடு என்பதால அந்த ஆசை ரொம்ப நாளைக்கு நிறைவேறலை. அதனால என்னோட கவனம் முழுக்கவே, தெரு நாய்கள் மேல திரும்புச்சு. அதன்படி அவங்களுக்குச் சாப்பாடு கொடுக்கிறது, குளிப்பாட்டி விடுறது, பாசமா தூக்கிக் கொஞ்சுறதுன்னு ஃப்ரீ டைம்ல அவங்களோடு அதிகமா நேரத்தைச் செலவழிப்பேன்.

எனக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சப் பருவத்துல நாய் வளர்க்க முடியலைனு, மத்தவங்களுக்குத் தத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். தெரு நாய்களுக்கு மரத்தடி நிழல்தான் அடைக்கலம். அதுவும் அவை குட்டிப்போட்டுச்சுன்னா, அதை வளர்க்கத் தாய் நாய் நிறையவே சிரமப்படும். அப்படிக் குட்டி நாய்களைப் பார்த்தா உடனே தூக்கிட்டுவந்து எங்க வீட்டுல வெச்சு கொஞ்ச காலத்துக்கு வளர்ப்பேன். அடுத்து தெரிஞ்ச பலருக்கும் அதைப்பத்திச் சொல்லி, விருப்பப்பட்டவர்களுக்கு தத்துக்கொடுப்பேன். தவிர, ரொம்பவே கஷ்டமான நிலையில இருக்கிற நாய்களுக்குச் சிறிய மருத்துவச் சிகிச்சையில தொடங்கி, ஆபரேஷன் வரைக்கும் செய்து தத்துக்கொடுப்பேன். இப்படித் தொடர்ந்து செய்யவே, பெட் அனிமல்ஸ் ஆர்வமுள்ள பலருடைய நட்பு வட்டாரம் எனக்குக் கிடைச்சுது. எங்க குரூப்ல நாய்கள் பத்தி அடிக்கடி சுவாரஸ்யமா பேசுறது, உதவுறதுனு ஆக்டிவா இருப்போம். பல நாய்களுக்கு நாங்க ஆதரவு கொடுத்திருக்கோம்" என்பவர் இதுவரை நாற்பதுக்கும் அதிகமான நாய்களை தத்துக் கொடுத்திருக்கிறார்.

"தத்துகொடுக்கிறதோட கடமை முடிஞ்சதுனு உட்காராம... சம்பந்தப்பட்டவங்க வீட்டுக்கு போய் நாங்க கொடுத்த நாய் எப்படி இருக்குதுனு செக் பண்ணுவேன். அவங்களும் தங்களோட நாய்களை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிவிடுவாங்க. இதைத் தெரிஞ்சுக்காத சிலர், 'இவளுக்கு வேற வேலை இல்லை; நாய்களோடவே சுத்திகிட்டு இருக்கா'னு பேசுறப்ப மனசு கஷ்டமா இருக்கும்.  ஆனா, ஆதரவில்லாம இருக்கிற நாய்களை காப்பாத்தி, மறுவாழ்வு கொடுக்கிறப்போ அதுங்களோட முகத்துல அலாதியான மகிழ்ச்சி வெளிப்படும். அதைதான் எனக்கு கிடைக்கிற மகிழ்ச்சியா, பரிசா நினைக்கிறேன்.

என்னோட பெட் அனிமல்ஸ் ஆர்வத்துக்கு, பெற்றோரும் ஒரு காரணம். அப்பா எனக்காக நிறைய உதவிகள் செய்வார். என்னோட சேர்ந்து அவரும் நாய்களை பராமரிக்கிறது, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறது, வாரம் தோறும் தெருநாய்களுக்குச் சாப்பிட பிரியாணி கொடுக்கிறதுனு அசத்துவார்" என்பவர் தற்போது தன் வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்துவருகிறார்.

"என் வீட்டுல  டாம், டஃப்பினு  ரெண்டு நாய்களை வளர்த்துகிட்டு இருக்கேன்.  வீட்டுல இருக்கிறப்போ அவங்களோடு விளையாடிகிட்டே இருக்கணும். ஷூட்டிங் போயிட்டு வீட்டுக்கு வந்ததும், உடனே என்னைக் கட்டிப்பிடிச்சு முகத்தை நாக்கால நக்கி பாசத்தைக் காட்டுவாங்க. அப்படி பல தருணங்கள்ல என்னை மீறி அழுதுடுவேன். இவங்களுக்காகவே வீட்டுல யாராச்சும் ஒருத்தர் இருந்துகிட்டே இருப்போம். குறிப்பா சினிமாவுக்குப் போனாக்கூட நானும், அம்மாவும்தான் போவோம். இவங்கள பார்த்துக்கிறதால, அப்பா சினிமா தியேட்டருக்குப் போய் அஞ்சு வருஷம் ஆகுது. 

நடிப்புல பிஸியா இருந்தாலும், அதுக்கான முக்கியத்துவத்தைப்போலவே நாய்களுக்கும் நேரத்தைச் செலவிடுறேன். என்னைப் பார்த்து நிறையப் பேரு பெட்ஸ் மேல ஆர்வம் செலுத்த ஆரம்பிச்சிருக்கிறது சந்தோஷமா இருக்குது. குறிப்பா மனிதர்களைப் போலவே, நாய்களுக்கும் உணர்வுகள் இருக்குது. அதனால தேடிப்போய் உதவாட்டியும், கண் பார்வையில கஷ்டப்படுற வளர்ப்புப் பிராணிகளுக்காவது நம்மாலான அளவில் உதவலாமே" என தன் நாய்களை வாஞ்சையுடன் தடவிக்கொடுக்கிறார் ஶ்ரீதேவி.