Published:Updated:

'நடிக்கும்போது நிஜமாவே அடிவாங்கி அழுதேன்' - 'குலதெய்வம்' சங்கவி!

வே.கிருஷ்ணவேணி
'நடிக்கும்போது நிஜமாவே அடிவாங்கி அழுதேன்' - 'குலதெய்வம்' சங்கவி!
'நடிக்கும்போது நிஜமாவே அடிவாங்கி அழுதேன்' - 'குலதெய்வம்' சங்கவி!

ப்பிங் ஆர்ட்டிஸ்டாக தன் பயணத்தை ஆரம்பித்து, சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'குலதெய்வம்' சீரியலில் நடித்துவருகிறார் சங்கவி. அவரிடம் பேசிபோது, ஏழு வருட கதைகளைப் பகிர்ந்துகொண்டார். 

“இந்த மீடியா துறைக்கு எப்போ வந்தீங்க?”

''பன்னிரண்டு வயசிலேயே டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். நிறைய விளம்பர படங்களில் குழந்தைகளுக்கு வாய்ஸ் பேசியிருக்கேன். அப்போவெல்லாம் மீடியா, புகழ் பற்றியெல்லாம் பெருசா தெரியாது. ஸ்கூல் டைம் முடிஞ்சு நேரம் கிடைக்கும்போது, ஜாலியா டப்பிங் பேசிட்டிருந்தேன். நான் பேசிய பல விளம்பரங்கள், எஃப்.எம்-ல் ஒளிபரப்பாச்சு. அப்புறம், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்.'' 

''சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு எப்படி எப்போ கிடைச்சது?'' 

''2010-ம் வருஷம் சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. என்னைவிட அப்பாவுக்குத்தான் என்னை ஸ்கிரீனில் பார்க்கணும்னு ரொம்ப ஆசை. எனக்கு மூணு வயசா இருந்தபோது, எங்கள் காலனி குட்டீஸ்களுக்காக நடந்த டான்ஸ் போட்டியில், என் அப்பா கையாலேயே பிரைஸ் வாங்கினேன். அந்தப் பரிசை மறக்கவே முடியாது. அதிலிருந்து அப்பாவுக்கு என்னை நடிக்கவைக்கணும்னு ஆசை. அவர்தான் 'நாதஸ்வரம்' சீரியல் ஆடிஷனுக்கு கூட்டிட்டுப்போனார். ஒவ்வொரு லெவல் வரும்போதும் கூடவே இருந்தார். செலக்ட் ஆனதும் என்னைவிட அதிகம் சந்தோஷப்பட்டவர் அப்பாதான்.'' 

“உங்கள் அப்பா கண்கலங்கி பார்த்திருக்கீங்களா?”

“அந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாதுங்க. 'நாதஸ்வரம்' சீரியலில் நடிக்கும்போது, என் அம்மா என்னை அடிக்கிற மாதிரி ஒரு சீன் வரும். என் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தவர், தத்ரூபமாக இருக்கணும்னு நிஜமாக அடிச்சுட்டாங்க. வலி தாங்கமுடியாம, 'போதும் விடுங்க'னு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்போ ஷூட்டிங் பார்க்க வந்திருந்த அப்பா கண்கலங்கிட்டார். அவரைப் பார்த்ததும் இன்னும் அதிகமா அழுதுட்டேன். வீட்டுக்குப் போனதும் அம்மா என்னை ஆறுதல்படுத்தி, 'இதுவரை நாங்களே அடிச்சதில்லையே, நடிப்புக்காக இப்படி அடிவாங்கியிருக்கியே'னு நெஞ்சோடு அணைச்சுக்கிட்டாங்க.''

“உங்க பாட்டியாக நடிக்கும் வடிவுக்கரசி பற்றி...''

“திறமையும் அனுபவமும் சேர்ந்த அற்புத மனுஷி. எனக்கு ஒரு சீன் நடிக்க வரலைன்னா, 'இப்படித்தான் நடிக்கணும் கண்ணு'னு அவ்வளவு அன்போடும் அக்கறையோடும் சொல்லிக்கொடுப்பாங்க. அவங்களுக்கு புளித்தொக்கு, புளிசாதம், கேசரி இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி செஞ்சு எடுத்துப்போய் கொடுப்பேன். நாங்கள் ஒரிஜினல் பாட்டி, பேத்தி மாதிரிதான் இருப்போம்.''

“நடிகையாக வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா?” 

“அப்படியெல்லாம் இல்லைங்க. எனக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகணும் ஆசை. ஆனால், வளர வளர ஃபீல்டு மாறிப்போச்சு. நடிப்பு பக்கம் வந்துட்டேன். பி.காம் முடிச்சிருக்கேன். சின்ன வயசா இருக்கும்போது நடிகை சங்கவி மாதிரியே நீயும் வருவே'னு சொல்லியிருக்காங்க. என் பேரும் அதுதானே!”

“உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?”

“எனக்கு ‘அலைபாயுதே’ மாதவன் ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி ஒரு கணவர் கிடைச்சா செம சந்தோஷமா இருக்கும். அப்புறம், சிவகார்த்திக்கேயன் சாரோடு சேர்ந்து நடிக்கணும். என் தங்கச்சிக்கு சிவகார்த்திகேயன்னா உயிர். 'அக்கா அவர்கூட ஜோடி சேர்ந்து நடிக்கும் சான்ஸ் கிடைச்சா சம்பளம்கூட வாங்காதே'னு சொல்லுவா. அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்னைவிட என் தங்கச்சிக்கு தலைகால் புரியாது.'' 

“என்ன மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசை?”

“எனக்கு நெகட்டிவ் ரோல் பண்ண ஆசை. காரணம், இப்போ நடிக்கிறதெல்லாம் சாஃப்டான, அமைதியான கதாப்பாத்திரமாகவே இருக்கு. அதனால், வில்லியாக நடிச்சு என்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டணும்'' என்கிறார் சங்கவி, கண்களைச் சிமிட்டி சிரித்தவாறு.