Published:Updated:

‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லைன்றது நல்லதானு தெரியலை - கமல் கருத்தும் டாக்டர் ஷாலினியின் பதிலும் #BiggBossTamil

‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லைன்றது நல்லதானு தெரியலை - கமல் கருத்தும் டாக்டர் ஷாலினியின் பதிலும் #BiggBossTamil
‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லைன்றது நல்லதானு தெரியலை - கமல் கருத்தும் டாக்டர் ஷாலினியின் பதிலும் #BiggBossTamil

ணிப்பொறித் துறை முதல் காய்கறி மார்க்கெட் வரை மக்களின் லேட்டஸ்ட் பேச்சு, விஜய் டி.வி.யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றியே. ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்பது தான் பலரின் ஃபேவரைட் டயலாக்.  பிக் பாஸூக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு என்றாலும், மறுபக்கம் கோடிகளில் லைக்ஸூம், ஓட்டும் குவிகிறது. அதில் பங்கேற்றிருப்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. கடந்த வாரத்திற்கான நிகழ்சியில் நான்கு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். ஓவியா, வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி. நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் டாக், நடிகை ஆர்த்தி நீக்கப்பட்டது. 

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலஹாசன், ஆர்த்தியைப் பற்றி சொல்லும்போது ‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லை என்பது நல்லதானு தெரியலை. எனக்குப் பல நண்பர்கள் உள்ளனர். அதில் சிலர் குருவாக இருந்து வழிநடத்தியுள்ளனர்' எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில், நண்பர்களே இல்லாமல் இருக்க முடியுமா? நண்பர்களே இல்லாத சூழல் எப்படியிருக்கும் என்பது பற்றி மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம். 

‘‘குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கு முன்னாடியே அக்கம் பக்கம் இருக்கிற குழந்தைகளோடு விளையாடிப் பழக அனுமதிக்கணும். நட்பு என்பது வாழ்வின் முக்கியமான பகுதி. அதை வலியுறுத்தியே பாடங்களில் ‘ஒப்புரவு ஒழுகு’ எனச் சொல்லித் தர்றோம். குழந்தைகள் ஒருத்தரோடு ஒருத்தர் நட்பாகப் பழகும்போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தான் என்ற எண்ணத்தை விடுறது, அனுசரிச்சுப் போறது போன்ற பண்புகளை வளர்த்துக்க முடியும். நண்பர்கள் இல்லாதவங்க அம்மா, அப்பாவையே சார்ந்து இருப்பாங்க. நட்பு வட்டத்தை உருவாக்குவது ஒரு குழந்தைக்கு சிறந்த வாழ்க்கைப் பயிற்சி. ஒரு ஃப்ரண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்றதுக்கு நிறையப் பண்புகள் அவசியம். பல வருஷங்களாக ஃப்ரண்ட்டாக இருக்கிறவங்ககிட்டே இந்தப் பண்புகள் தானாகவே வந்திரும்’’ என்றவர், தொடர்ந்து நட்பின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கத் தொடங்கினார். 

''பெத்தவங்கிட்டகூட சொல்ல முடியாத விஷயங்களை ஃப்ரண்ட்ஸ்கிட்ட பகிர்ந்துக்க முடியும். கஷ்டங்கள், மனச்சோர்வு நேரங்களில் நம் நிறை குறைகளை புரிஞ்சு உற்சாகப்படுத்த நல்ல நட்பாலதான் முடியும். நல்ல நட்பு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். அந்த நட்பு இருந்தால், எவ்வளவு பெரிய பிரச்னையையும் எளிமையா கையாளும் திறமை வந்துடும். நண்பர்களை வெச்சே ஒருத்தரின் கேரக்டரை நிர்ணயம் செய்யலாம். ‘உன் நண்பர் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்கிறார் சாக்ரடீஸ். நல்ல நட்பு நம்மை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்'' என்றவர், ஆர்த்தி பற்றிய விஷயத்துக்கு வந்தார். 

‘‘ஒருத்தரின் வாழ்க்கையில் நட்பு முக்கியமான பகுதியாக இருந்தாலும், நண்பர்கள் இல்லாதவங்க கஷ்டப்படுவாங்க என ஒட்டுமொத்தமாக சொல்லிட முடியாது. நண்பர்களே இல்லாதவங்க, எல்லாத்தையும் சமாளிக்கிற ஆளுமையோடு, கூடுதல் பொறுப்போடு இருக்கணும். அந்த ஆளுமை சக்தியோடு இருக்கிறப்ப நண்பர்கள் இல்லாதது பெரிய பிரச்னையா தெரியாது. ஆர்த்திக்கு நண்பருக்கு நண்பராக அவரது கணவர் கணேஷ் இருக்கலாம். எதுவானாலும் அவங்க கணேஷிடம் பகிர்ந்துக்கலாம். கலந்தாலோசிச்சு முடிவெடுக்கலாம். இந்த மாதிரியான குடும்பச் சூழல் இருந்தால், நண்பர்கள் இல்லாதது ஆர்த்திக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது’’ என்கிறார் ஷாலினி.

அடுத்த கட்டுரைக்கு