Published:Updated:

''சுமங்கலில நடிக்கிறவங்களுக்கு ஜுவல் டிசைன் நான்தான்!'' - பொதிகை வி.ஜே. மகேஸ்வரி

''சுமங்கலில நடிக்கிறவங்களுக்கு ஜுவல் டிசைன் நான்தான்!'' - பொதிகை வி.ஜே. மகேஸ்வரி
''சுமங்கலில நடிக்கிறவங்களுக்கு ஜுவல் டிசைன் நான்தான்!'' - பொதிகை வி.ஜே. மகேஸ்வரி

பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் 'பொன் விளையும் பூமி' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர், மகேஸ்வரி. ஒரு பக்கம் கலக்கல் வீஜே, இன்னொரு பக்கம் அசத்தல் பிசினஸ் உமெனாக வலம்வருகிறார். 

"என் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலிருக்கும் கிராமம். பன்னிரண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சதுமே திருமணம் ஆகிடுச்சு. என் கணவர்தான் மேற்கொண்டு படிக்கவெச்சார். என் முதல் பையன் ஐந்தாவது வகுப்பு படிக்கிறான். இரண்டாவது பையனுக்கு ரெண்டு வயசு ஆகப்போகுது. பி.எட் முடிச்சதும் ஒரு ஸ்கூலில் ஆசிரியரா வேலைப் பார்த்தேன். எனக்குச் சின்ன வயசிலிருந்தே செய்தி வாசிப்பாளரா ஆகணும்னு ஆசை. பொதிகை டிவியில் ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விபட்டு கலந்துகிட்டேன். செலக்ட் ஆனதும் ஆசிரியர் வேலையை விட்டுட்டேன். 

ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த என்னை எல்லோருக்கும் அடையாளப்படுத்தினது இந்தத் தொகுப்பாளர் வேலைதான். நான் ஆசைப்பட்ட வேலை என்பதால், ரசிச்சு ரசிச்சு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். வேலையில நான் காட்டின ஈடுபாடு திரையில தெரிய ஆரம்பிச்சது. விளைவு ஆடியன்ஸ் என்னை ரசிக்க ஆரம்பிச்சாங்க. எல்லா புகழ்பெற்ற தொகுப்பாளர்களும் பொதிகை மூலம்தான் பல தனியார் சேனல்களுக்கு மாறினாங்கங்கிறதுனால என் வேலையில சின்சியரா, கிரியேட்டிவா இருந்தேன். என் சின்சியாரிட்டியே எனக்கு மெகா டிவியில பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் 10 நியூஸில் வாய்ஸ் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தேன். ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராகவும் இருக்கேன். 

இரண்டாவது பையன் டெலிவரி சமயத்தில், ஊரிலிருந்து சென்னைக்கு வந்துபோக முடியலை. அதனால், ஜீ தமிழ் நிகழ்ச்சியிலிருந்து விலகினேன். 

ஒரு மாசத்தில் பதிமூன்று நாள்கள்தான் எனக்கு வேலை இருக்கும். மற்ற நாள்களில் வீட்டில் சும்மாதான் இருப்பேன். சும்மா இருக்கிற நேரத்தை பயனுள்ளதாக்க ஏதாவது கைத்தொழில் செய்யலாமேன்னு தோணுச்சு. எனக்கு கிராஃப்ட், ஜுவல்லரி செய்றதுல எப்போவுமே ஆர்வம் அதிகம். சேலைக்கு மேட்சிங்கா ஜுவல்லரி போட ரொம்ப பிடிக்கும். அதைவிட அதை ரசிச்சு செய்யப் பிடிக்கும். அப்பதான் பொண்ணுங்களுக்குப் பிடிச்ச 'சில்க் திரட்' ஜுவல்லரிகளைச் செய்யலாம்னு முடிவெடுத்தேன். யூடியூப்பைப் பார்த்து ஒவ்வொண்ணா கத்துக்கிட்டு, 7000 ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் மக்கள்கிட்ட எப்படி கொண்டுபோறதுன்னு பெரிய குழப்பம் இருந்துச்சு. பிறகு, இன்னிக்கு பலருக்கும் தகவல்தொடர்பு ஊடகமாக இருக்கும் முகநூலைப் பயன்படுத்த முடிவு செஞ்சேன். 

ஜுவல்லரி விலையைக் குறிப்பிட்டு, வாட்ஸ்அப் எண்ணில் ஆர்டர் செய்யலாம் என்று புகைப்படத்தோடு பதிவுசெஞ்சேன். அதைப் பார்த்து பல ஆர்டர் வந்துச்சு. சிலர் அவங்களோட புடவையின் புகைப்படத்தை அனுப்பி, அதற்குப் பொருத்தமாக செய்து தரச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. இப்போ, வீட்டிலிருந்தே மாசம் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். சீரியல் நடிகை தீபா நேத்ரன் எனது முகநூல் நண்பர். அவர் உதவியால், சன் டிவியில் வரும் 'சுமங்கலி' சீரியலில் நடிக்கும் பலருக்கு ஜுவல்லரிகளை வடிவமைத்துக் கொடுக்கிறேன். 

மீடியா, பிஸினஸ் என ரெண்டு துறையிலும் என்னால் பேலன்ஸா இருக்க முடியுதுனா அதுக்கு முக்கிய காரணம், என் குடும்பத்தின் ஒத்துழைப்புதான். அதுக்காக, என் குடும்பத்துக்கு தேங்க்ஸ். நம்பிக்கையும் உழைப்பும் இருந்தால், எந்தப் பக்கமும் ஜெயிக்கலாம்'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசினார் மகேஸ்வரி.

அடுத்த கட்டுரைக்கு