Published:Updated:

''வீட்டோட மாப்பிள்ளைன்னா எனக்கு ஓ.கே!'' - தொகுப்பாளினி சித்ராவின் பெர்சனல்

''வீட்டோட மாப்பிள்ளைன்னா எனக்கு ஓ.கே!'' - தொகுப்பாளினி சித்ராவின் பெர்சனல்
''வீட்டோட மாப்பிள்ளைன்னா எனக்கு ஓ.கே!'' - தொகுப்பாளினி சித்ராவின் பெர்சனல்

'சித்து' என்னும் பெயரில் பிரபலமானவர் தொகுப்பாளினி சித்ரா. மக்கள் டிவி-யில் அறிமுகமாகி, 'சின்னபாப்பா பெரியபாப்பா', 'டார்லிங் டார்லிங்' போன்ற சீரியல்களில் நடித்து குறுகிய காலத்தில் உயரத்தைத் தொட்டிருக்கிறார். தற்போது, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் 'அஞ்சரைப்பெட்டி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு, 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியிலும் நடனமாடி வருகிறார். அதில், காளியம்மனாக சித்ரா ஆடிய ஆட்டம் பலரையும் அசறவைத்தது. அவருடன் பேசியதிலிருந்து... 

''எப்படி இருக்கிறது இத்தனை வருட சின்னத்திரை வாழ்க்கை?'' 

''நான் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் படிக்கும்போதே மாடலாக அறிமுகமானேன். படிப்பை முடித்ததும் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனேன். அங்கேதான் அவ்வளவு அழகாகத் தமிழ் பேசக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று தமிழை அவ்வளவு சரளமாக, துல்லியமாகப் பேசுவதன் காரணம், மக்கள் தொலைக்காட்சிதான். இன்று நிகழ்ச்சிகளில் தூயத் தமிழில் பேசினாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். பல பிரச்னைகளைத் தாண்டித்தான் ஊடகத்தில் நிலைக்க வேண்டியிருக்கிறது.'' 

''அப்படி என்ன பிரச்னைகளைச் சந்திக்கிறீர்கள்?'' 

''நிறைய இருக்கு. எதைச் சொல்ல?. கல்லூரி படிப்பு முடித்து ஊடகத் துறையில் நுழையும்போது, அதே கல்லூரி மாணவிகளுக்கான சேட்டைகளோடு இருப்போம். மற்றவர்களைச் சமாளிக்கும் அனுபவம் இருக்காது. எனக்குத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் கிடைக்கும்போது என் மீது பொறாமைப் பார்வைகள் விழ ஆரம்பித்தன. நான் முதன்முதலாக வேலை பார்த்த தொலைக்காட்சி பற்றி, 'அங்கேயா வேலை பார்க்கிறே, என்ன ஸ்கோப் இருக்கப்போகுது' எனச் சொல்வார்கள். அடுத்தடுத்த பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தபோது, 'அந்த சீரியலில் நடிக்கிறியா, உனக்கு நடிக்கவும் வருமா?' என நக்கலாகப் பேசியிருக்கிறார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமானவர்களிடம் 'இந்த நிகழ்ச்சிக்குப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேன். பிறகு பார்த்தால், என்னை அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் அழைக்க மாட்டார்கள். விசாரித்தால், 'சித்ரா இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துவர மாட்டாங்க. நான் வரேன்' எனச் சொல்லி அந்த நெருக்கமானவர் அதில் சேர்ந்திருப்பார். இப்படி நிறைய நடந்திருக்கு. நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, 'உனக்கெதுக்கு இந்த வேலை, உனக்கு டான்ஸ்லாம் செட் ஆகுமா?' என்றார்கள். இப்படி எவ்வளவோ சொல்லலாம்.'' 

''இவ்வளவு பிரச்னைகள் நடக்கும்போது உங்கள் வீட்டில் ஆறுதலாக இருந்தார்களா?'' 

''எனக்கு நடக்கும் எந்த விஷயத்தையும் வீட்டில் சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் ஊடகத்துக்குள் வருவதுக்கே ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் சொன்னார்கள். அதையெல்லாம் தாண்டியே அப்பா, அம்மா சம்மதம் பெற்று தொகுப்பாளராகவும் நடிகையாகவும் ஆனேன். அப்போதே, 'உனக்கு பக்குவம் போதாது. இப்போதைக்கு சினிமா ஆசையெல்லாம் வேண்டாம்' எனக் கண்டிப்புடன் சொல்லிட்டாங்க. மற்றபடி என் கஷ்டமான காலத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தது என் கார்தான். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் பல நேரங்களில் காரில் அழுதுகொண்டே போயிருக்கிறேன். வெளியில் போலியாக ஒரு சிரிப்பு சிரித்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வேன்.'' 

''உங்களுக்கு இப்போதும் சினிமா வாய்ப்புகள் வருகிறதா?'' 

''நான் ஊடகத்துக்குள்ள வந்த கொஞ்ச நாளிலேயே சினிமா வாய்ப்புகள் வந்தன. வேண்டாம் என மறுத்துவிட்டேன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறது. வீட்டில் சொன்னபோது, 'இத்தனை வருட அனுபவம் உனக்கு விஷயத்தைப் புரியவைத்திருக்கும். நீ விரும்பினால் நடிக்கலாம்' எனப் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயின் வேடம் ஏற்கிறேன். தமிழைத் தாண்டி, மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தப் போகிறேன். எனக்குத் தெலுங்கும் தெரியும். அதனால், தெலுங்கில் ஒரு சீரியலில் நடிக்கப் போகிறேன். இனி என்னை மற்ற மொழி சீரியல் மற்றும் படங்களிலும் பார்க்கலாம்.'' 

''உங்களைப் பற்றி மற்றவங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம்...'' 

''நான் ரொம்ப சென்சிட்டிவான பொண்ணு. வெளியில் எல்லா விஷயத்துக்கும் சிரித்தாலும், மனசு காயப்படும்போது உடனடியாக வெளிப்படுத்திவிடுவேன். நிறைய விஷயங்களுக்கு ரொம்பவே ஃபீல் பண்ணுவேன்.'' 

''அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கைடன்ஸ் கொடுக்கிறீங்களாமே?'' 

''ஆமாம்! சைக்காலஜியில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கேன். நேரம் கிடைக்கும்போது சென்னையில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான பிரச்னைகளைக் கேட்டு ஆறுதல்களையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கிறேன். ஒருவர் பேசும்போதே அவர்களின் கண்களைப் பார்த்து, உண்மை பேசுகிறார்களா பொய் சொல்கிறார்களா எனக் கண்டுபிடிப்பேன்.'' 

''உங்களுடைய இன்ஸ்பிரேஷன் யார்?'' 

''அப்பா, அம்மாதான். அப்பாவுக்கு நான் செல்லப் பிள்ளை. அவர் வேளச்சேரி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அப்பா வெளியில் டெரராக இருந்தாலும், வீட்டில் குழந்தை மாதிரி. அவருடைய தொப்பியைப் போட்டுக்கொண்டு, லத்தியைச் சுழற்றி அதிகாரம் செய்வேன். அம்மா எனக்கு முழு சப்போர்ட். வெளியில் என மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன், நடிகர் சிவகார்த்திகேயன். எவ்வளவோ சவால்களைச் சந்தித்து ஆங்கரிங், ஆக்டிங் என உயரங்களைத் தொட்டிருக்கிறார்.'' 

''கடைசிக் கேள்வி, எப்போது கல்யாணம்?'' 

''அது தெரியவில்லை. அப்பா, அம்மா, அண்ணன் எனக் கூட்டுக் குடும்பமாக வாழும் எனக்கு, வீட்டோடு மாப்பிள்ளையா இருந்தால் பரவாயில்லை எனத் தோணுது. ஒருவேளை காதலித்தால், பெற்றோர் சம்மதத்துடனே திருமணம் செய்துப்பேன். வீட்டில் எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்காங்க.'' 

பின் செல்ல