Published:Updated:

"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை!"- ‘நண்பன்டோ’ ரஞ்சித்

"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை!"- ‘நண்பன்டோ’ ரஞ்சித்
"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை!"- ‘நண்பன்டோ’ ரஞ்சித்

எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாமோ, அப்படித்தான் சினேகன் பற்றி விமர்சனம் செய்யாதவர்களும். பெண்களிடம் புரளி பேசுவதில் தொடங்கி கட்டிப்புடி பழக்கம் வரை அவரது செயல்கள் அத்தனையும் மீம் க்ரியேட்டர்களுக்கு பாப்கார்ன் பாக்கெட். அவ்வப்போது தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து சினேகன் பகிர்ந்துகொள்வதும் பார்வையாளர்களை ஆர்வமூட்டுகிறது.

,"2004-ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரம் என்று சொல்லப்படும் ராகு காலத்தில்தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது மகிழ்ச்சியாகத்தான் உள்ளனர். தவிர விதவைப் பெண்களுக்கும் மறுமணம் செய்து வைத்துள்ளேன். நான் செய்த இந்தச் செயல்கள் மீடியாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் என் பெயரை அவர்கள் டேமேஜ் செய்துவிட்டனர். அவர்கள் ‘என்னை ஒரு பைத்தியக்காரன்’ என்றும்  கூறிவிட்டனர்" என்று மனம் திறந்து கூறினார் சினேகன்.

இப்படி இவர் தலைமையில் உருவாக்கப்பட்ட டைனமிக் திருமண முறை 2011 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அந்த அமைப்பு குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. திருமணத் தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வரும் அனைவரையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இந்த திருமண முறையில் ஒரு சடங்கு. இதுதான் பரபரப்புக்கு முதன்மைக்காரணம்.

இவர் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு விஷயம் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த என்ஜினீயரின் மனைவியைக் கடத்திச் சென்றதாக உள்ள வழக்கு. அந்த என்ஜினீயர் அளித்துள்ள புகாரின்படி, "நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இல்லற வாழ்க்கைப் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயதுப் பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், எனது மனைவியின் நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார். பின்னர் எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குநராக உருவாக்குவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார். 'உயர்திரு 420' என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குநராகவும் அறிமுகப்படுத்தினார். நாளடைவில் தவறான பாதையில் சென்றது இவர்களது பழக்கம். இதுகுறித்து என் மனைவியைக் கண்டித்தபோது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. சமயம் பார்த்து நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டார். இப்போது எவ்வளவுதான் அழைத்தாலும் என் மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். என் மனைவியையும், குழைந்தையையும் கடத்திச் சென்று சீரழித்த சினேகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று என்ஜினீயர் பிரபாகரன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இப்படி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சினேகன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அவரது நீண்டகால நண்பர் நடிகர் ரஞ்சித்திடம் விசாரித்தோம். நடிகர் ரஞ்சித் 1993-ஆம் ஆண்டு 'பொன் விலங்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினேகனின் குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களைத் தொடர்பு கொள்ள முற்பட்டபோது சினேகன் தன்னுடைய குடும்பத்துடனான தொடர்பைத் துண்டித்து விட்டார் என்றும் 1994-ல் இருந்து தற்போது வரை தொடர்பில் இருக்கும் ஒரே நண்பர் நடிகர் ரஞ்சித் மட்டுமே என்பதும் தெரியவந்தது.

"உங்கள் நட்பு பற்றி..."

"கவிஞர் வைரமுத்து 'சிந்துநதிப் பூ' படத்திற்கு பாடல்கள் எழுதும் போதிலிருந்தே சினேகனை எனக்குத் தெரியும். அவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த போது பழக்கமானோம். கிட்டத்தட்ட 22 வருடங்கள் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.’’

"சினேகன் உண்மையில் எப்படிப்பட்டவர்?"

"ஒரு கவிஞர் இப்படித்தான் இருப்பார் என்று நாம் அனைவரும் பிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறோம். கவிஞர்களின் இயல்பைத் தாண்டி அவர்களுக்கும் தனிப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. மக்கள் இப்போதுதான் சினேகனைத் தொலைக்காட்சித் திரையில் பார்க்கிறார்கள். அவர் இப்படிப்பட்டவர் என்று புரிந்தவுடன் அவர் செய்வது எதுவும் தவறில்லை என்பது மக்களுக்குப் புரியும். அதற்கு கால அவகாசம்தான் தேவை. அவர் ஒன்றும் போலிச்சாமியார் இல்லை. பிக் பாஸ் பிரபலங்களை வைத்து அவருக்கு எந்த வியாபாரமும்  நடக்க வேண்டும் என்பதும் இல்லை. அவர் வெளியில் இயல்பாக எப்படிப் பழகுவாரோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருக்கிறார்."

"அவர் கட்டிப்பிடிப் பழக்கம் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகிறதே?"

"நாம் ஒருவரைப் பார்க்கும்போது  எப்படி கையெடுத்துக் கும்பிடுறோம், வணக்கம் சொல்கிறோமோ அதே மாதிரிதான் கட்டிப்பிடிப்பதும் ஒரு வகைப் பழக்கம். இப்படி அரவணைப்பைக் கொடுக்கும்போது அதை நாம்  தவறாகப் பார்க்கக்கூடாது. அது அவர்களுக்குள் உள்ள நீண்ட பயணத்துக்கான ஓர் அடையாளம். பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்தால்தான் தவறு. பழகியவர்களுக்குள் இப்படி நடந்துகொள்வது மிக சாதாரணம். நடிகர் விஜயகுமாரரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும்போதெல்லாம் என்னைக் கட்டிப்பிடிப்பார். அந்த அரவணைப்பில் நான் எனது தகப்பனை உணர்கிறேன். அதேபோல் சினேகனை அவர்கள் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ உணரலாம். பிக் பாஸில் மட்டும் அல்ல உண்மையிலேயே சினேகன் தன் நேசத்துக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பது அவரது இயல்பு. டிவியில் அவர்கள் பேசுவது பழகுவது அனைத்தையும் காட்டுவதில்லை. சுவாரஸ்யமான சில காட்சிகளை மட்டும்தான் தொகுத்து வழங்குகிறார்கள். அப்போது நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள்... மீதி இருக்கும் நேரத்தில் எப்படி இருந்திருக்கும் அவர்களது உறவு என்று. அதுதான் அவர்களுக்குள் நடக்கும் அன்பின் பரிமாற்றத்துக்குக் காரணம். அவரிடம் பழகியதில் எனக்கு தெரியவந்தது அவர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அப்படித்தான் கட்டிப்பிடிப்பார்." 

டைனமிக் திருமண அமைப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?

"அவருக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சும்மா இருக்காமல் இதை பிக் பாஸில் கூறி தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுள்ளார். மக்கள் குடும்பம் குடும்பமாக இந்நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர். அனைவரும் இவருடைய டைனமிக் அமைப்பு பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சினேகனுக்கு ஜாதகம், நல்ல நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஜாதகத்தில் ஒருவருக்கு 10 வருடம் கழித்துதான் நல்லது நடக்கும் என்று கூறினால் கண்மூடித்தனமாக நம்பக்கூடிய மக்கள் மத்தியில் சினேகன் சற்று வித்தியாசமானவர். நேரம் காலத்திற்காக அவர் காத்திருக்கமாட்டார். நல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதில் நம்பிக்கை உடையவர். மூட நம்பிக்கைகள் மீது கோபம் மிகுந்தவர். பெண்ணுரிமைக்காக குரலையும் உயர்த்தக்கூடியவர். விதவைகளுக்கு ஏன் மறுமணம் செய்துவைப்பதில்லை, விரும்பியவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்றெல்லாம் யோசித்ததன் விளைவுதான் இந்த அமைப்பு."

"சினேகனைப் பற்றி சில வார்த்தைகள்..."

"சமூக சிந்தனைவாதி, மக்களைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படுபவர். அவரின் சிந்தனைகள் அனைத்தையும் எழுத்து வடிவத்தில் கொண்டுவருவதற்காக அதிகம் யோசித்துக்கொண்டே இருப்பவர். எனக்குத் தெரிந்து இதற்காக அவர் பிரத்யேகமாகப் புத்தகங்களைப் படித்ததில்லை. அவர் பிடித்தவர்களிடம் நெருக்கமாக பழகும் அனுபவங்கள்தான் கவிதை வடிவில் வெளிவருகிறது. உடல் நலத்தின் மீது அதிக அக்கறை உடையவர். இவரின் குடும்பத்துடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லை. சினேகனின் தந்தை இறந்ததற்குப் பிறகு, உடன் பிறந்த சகோதரர்கள் தனித்தனியாக வாழத் தொடங்கினர். இவரைப் பாரமாக அவரது உறவினர்களே நினைக்கத்தொடங்கினார்கள். அங்கு இருக்க மனமில்லாமல் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார். மிகச் சிறு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் அதற்கான பாராட்டுகள் குடும்பத்திலிருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. நண்பர்களே அவரை வாழவைத்துக்கொண்டிருக்கின்றனர்."

"பிக் பாஸைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"இது நல்ல ரியாலிட்டி ஷோதான். நள்ளிரவில் செக்ஸ் வைத்தியம், ஆண்களின் விறைப்புத் தன்மைக்கு மருந்து, நாடி ஜோதிடம், மந்திர தந்திரம், போலி நிலங்களை ப்ளாட் போட்டு விற்கும் விளம்பரம், மாமியார்-மருமகள் சண்டை போன்ற நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் உளவியல் அடிப்படையில் நடக்கும் பிக் பாஸ் ஷோ நன்றாகத்தான் உள்ளது. அப்படியே இந்த அரசியல்வாதிகளையும் இந்த நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்."

"பிக் பாஸில் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?"

"சக்தி நல்ல பெயர் எடுக்கிறார். பிக் பாஸே அவருக்குத்தான் சப்போர்ட் செய்கிறார் போல. ஏனென்றால், அவரைத்தான் அனைத்து டாஸ்க்குகளுக்கும் கூப்பிடுகிறார் பிக் பாஸ். ஓவியா இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இரண்டு வாரங்களில் கிளம்பிவிடுவார். ஜூலி கடைசி வரை உள்ளே இருப்பார். அவரை வைத்துதான் ஆட்டம் நகர்கிறது. சினேகன் சீக்கிரத்திலேயே வெளியில் வந்துவிடுவார். ரைஸா, வையாபுரி, சினேகன் மற்றும் காயத்ரி இந்த ஆர்டரில்தான் எலிமினேட் ஆவார்கள். இதுதான் நடக்கும். வேண்டுமென்றால் பொறுத்திருந்து பாருங்கள்" என முடித்தார் நடிகர் ரஞ்சித்.